விஜயகாந்த் 25 ஆகஸ்ட் 1952 அன்று மதுரையில் உள்ள திருமங்கலத்தில் பிறந்தார். அவரது இயற்பெயர் விஜயராஜ் அழகர்சுவாமி. அவரது பெற்றோர் கே.என்.அழகர்சுவாமி மற்றும் ஆண்டாள் அழகர்சுவாமி. அவர் 31 ஜனவரி 1990 அன்று பிரேமலதாவை மணந்தார். இவருக்கு நடிகர் சண்முக பாண்டியன் மற்றும் விஜய் பிரபாகர் அழகர்சாமி என இரு மகன்கள் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் விஜயகாந்தும் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் மட்டுமே நடித்துள்ளார். இவரது படங்கள் பெரும்பாலும் தெலுங்கு மற்றும் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டுள்ளன. திரையுலகில் "புரட்சி கலைஞர்" என்று அறியப்படும் விஜயகாந்த் 20க்கும் மேற்பட்ட படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பறந்து பறந்து ஸ்டண்ட்களை வெளிப்படுத்துவதில் சிறந்தவர். குறைந்த பட்ஜெட்டில் படங்களை தயாரிப்பதில் அவர் மிகவும் பிரபலமானவர். அவரது பெரும்பாலான திரைப்படங்கள் ஊழலை ஒழித்து, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை மையமாக கொண்டு இருக்கும். அவர் ஒரு நாளைக்கு 3 ஷிப்டுகள் வேலை செய்திருக்கிறார். சிரமப்படும் தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் விஜயகாந்த் தன் சம்பளத்தை தாமதமாகப் பெற்றுக்கொண்டார்.
தனது முதல் படமான எம்.ஏ.காஜாவின் 'இனிக்கும் இளமை' (1979) படத்திற்கு பிறகு தனது பெயரிலிருந்து "ராஜ்" என்பதை நீக்கிவிட்டு "காந்த்" என்று மாற்றி "விஜயகாந்த்" என தனது பெயரை மாற்றிக்கொண்டார். பின்னர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சத்தம் ஒரு இருட்டரை (1981) திரைப்படத்தின் மூலம் சினிமா துரையில் தடம் பதித்தார். 1980கள் மற்றும் 1990களில் நிலையான பாக்ஸ் ஆபிஸ் வசூலை கொண்டிருந்தார். 100வது படமான கேப்டன் பிரபாகரனுக்கு (1991) பிறகு அவருக்கு "கேப்டன்" என்ற பட்டமும் கிடைத்தது. அவர் மொத்தம் 154 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
1993 ஆம் ஆண்டு அவரது ரசிகர்கள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டனர். அவர்களில் பலர் வெற்றி பெற்றனர். இதன்பின் விஜயகாந்தும் அரசியலில் ஈடுபட நினைத்தார். அதை அவ்வப்போது வெளியிட்டும் வந்தார்.
2005ல் 'தேசிய முற்போக்கு திராவிட கழகம்' என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றார். ரசிகர் மன்றத்தின் மாநிலத் தலைவராக இருந்த ராமு வசந்தன், கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.
2006 தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார் விஜயகாந்த். இத்தேர்தலில் மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட அவரது கட்சியை சேர்ந்த மற்ற வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர்.
பின்னர் 2011 சட்டமன்றத் தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அவரது கட்சிக்கு எதிர்க்கட்சி உரிமை கிடைத்தது. 2011 முதல் 2016 வரை தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.
2016 சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டார். அவர் கூட்டணியின் முதலவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தலில் அவர் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் தேர்தலில் அவரும் அவரது கூட்டணி கட்சியும் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தன.
விஜயகாந்த், அரசியலுக்கு வருவதற்கு முன்பிலிருந்தே மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளார்.
1989ல் ஈரோட்டில் இலவச மருத்துவமனை.
சென்னை சாலிகிராமத்தில் இலவச மருத்துவமனை.
லட்சக்கணக்கான பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு கல்வி நிதி.
பார்வையற்றோர் பள்ளிக்கு நன்கொடை.
எம்ஜிஆர் காது கேளாதோர் பள்ளி தொடக்கம்.
பல ஏழை தம்பதிகளுக்கு இலவச திருமணம்.
இலவச கணினி பயிற்சியகம் தமிழ்நாடு முழுவதும்.
இலவச திருமண மண்டபங்கள்.
கேப்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி.
கார்கில் போர், சுனாமி, குஜராத் பூகம்பம், கும்பகோணம் பள்ளி தீ விபத்து போன்ற பல துயர நிகழ்வுகளுக்கு சொந்த செலவில் நிவாரணம் அளித்து உதவியுள்ளார்.
அரசியல் கட்சியைத் தொடங்கிய பிறகு, தானே புயல், ஆந்திரா புயல் மற்றும் ஒடிசா வெள்ளத்திற்கு தன்னார்வத் தொண்டு பல வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், மார்பு சளி, இடைவிடாத இருமல் காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் கடந்த நவம்பர் மாதம் 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு இந்த மாதம் 12ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தொடர்ந்து தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று தொண்டர்களை சந்தித்து கையசைத்தார்.
அவர் மீண்டும் நேற்று(27/12/2023) மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து வழக்கமான சிகிச்சை தான் என்றும், 3 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படும் எனவும் தேமுதிக விளக்கமளித்திருந்தது. இந்த நிலையில் இன்று அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது.
"நிமோனியாவுக்காக அனுமதிக்கப்பட்டு, கொரோனா தோற்று உறுதியானதை அடுத்து வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த அவர், மருத்துவர்களின் தீவிர முயற்சிக்கு மத்தியிலும் இறந்துவிட்டார்" என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.