வாரண்ட் - இது சின்னத் திரையின் கருப்பு!

Warrant
Warrant
Updated on

அப்பாவின் வற்புறுத்தலால் காவல்துறையில் சேருகிறான் ஒருவன். அதுவே அவன் வாழ்வில் பல திருப்பங்களைக் கொண்டு வருகிறது. பிடிக்காத வேலையில் அவன் ஜெயித்தானா இல்லையா என்பது தான் வாரண்ட் (Warrant). தலைப்பில் சர்வம் சிவ மயம் என்றும் வருகிறது.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் இது ஓடிடியில் வெளியாகியுள்ள கருப்பு. ஏன் என்று பார்க்கலாம்.

தன்னுடைய மகன் ஓர் அரசு உத்தியோகஸ்தனாகத் தான் இருக்க வேண்டும். அதற்காக எத்தனை தேர்வுகள் வேண்டுமானால் எழுதட்டும் என்று நினைக்கிறார் நடராஜன் (பாலாஜி சக்திவேல்). தந்தை சொல் மீறாத மகன் கோட்டை கருப்பசாமி. (பிரசாந்த் பாண்டியராஜ்). சுருக்கமாகக் கருப்பு அல்லது கோட்டை என்று அழைக்கிறார்கள்.

மத்திய, வங்கி, மாநில அரசுத் தேர்வுகள் எதிலும் தேர்வாகாத நிலையில் கடைசியாக ஒரு தேர்வு எழுதுகிறார். காவல்துறைப் பணியாளர் தேர்வு. அதில் வெற்றியும் பெற்று விடுகிறார். மாமா காளி வெங்கட் சிபாரிசு மூலம் உள்ளூரிலேயே வேலையும் கிடைக்கிறது. பொன்மலைக் கோட்டை காவல் நிலையத்தில் காவலராகப் பணியில் சேர்க்கிறார். அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக அருள் தாஸ். அங்கு கருப்பசாமிக்கு என்ன நடக்கிறது. சந்திக்கும் குற்றவாளிகள், அதிகாரிகள் என்று விரிகிறது கதை.

லாக்கப்பில் நடக்கும் ஒரு மரணம் தொடர்பான விசாரணையுடன் தொடங்குகிறது கதை. அதில் கோட்டை கருப்பசாமி தான் வந்த பாதையை விளக்குகிறார். பிளாஷ் பாக்கிலும், நிகழ் காலத்திலும் மாறி மாறிப் பயணிக்கிறது திரைக்கதை.

விலங்கு என்ற தொடரைக் கொடுத்த குழு என்றபோதே ஓர் ஆர்வம் வந்தது. பிரசாந்த் பாண்டியராஜ் இடையில் மாமன் என்ற திரைப்படத்தை வேறு எடுத்தார். அவர் மறுபடியும் ஒரு தொடர். விலங்கு தொடரைப் போலவே இதுவும் ஒரு காவல் நிலையம் சார்ந்த தொடர். திருச்சி தான் களம். கருப்பு வழிபாடு என்று பல ஒற்றுமைகள்.

ஆரம்பத்தில் கோட்டையின் உடலும் முகமும் ஒட்டாமல் தெரிகிறது. ஆனால் போகப் போக அதில் கலந்து விடுகிறார். ஒரு கட்டத்தில் பிரசாந்த் என்ற இயக்குநர் நடிகர் மறைந்து அந்தப் பாத்திரம் மட்டுமே தெரிகிறது. அந்த ஸ்டேஷன் மாந்தர்கள் அனைவரும் அந்தந்தப் பாத்திரங்களாகவே தெரிகிறார்கள். ரைட்டர், பெண் காவலர், உடன் பணி புரியும் காவலர்கள் என அனைவரும் இயல்பாக வருகிறார்கள். அண்ணே, அக்கா, தம்பி, சார், என்று மிக யதார்த்தமாக அழைத்துப் பழகுகிறார்கள்.

இதில் இழையோடும் மெலிதான நகைச்சுவையும் தொடருக்கு பலம். கைதியாக வரும் கொடைக்கானல் சரவணன். ஒரு முக்கிய சாட்சியாக வரும் கோகுல். பாலியல் தொழிலாளியாக வரும் சாயாதேவி. நர்ஸாக வரும் நம்ரிதா ஆகியோரும் நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.

சாயாதேவியுடன் சேர்ந்து அந்தக் குற்றவாளியைப் பிடிக்கப் போடும் திட்டங்கள் சுவாரசியம். பாத்திரங்களைத் தனியாகத் திணிக்காமல் கதையோடு இயல்பாகக் கலந்து சொல்லியிருப்பது சிறப்பு.

கொடைக்கானல் சரவணன் செய்யும் வேலையால் கோட்டை என்ற தன் பெயரே வேறு மாதிரி உருமாறி கருப்பசாமி தவிக்கும் தவிப்பு வலியுடன் கூடிய நகைச்சுவை. அதைத் தொடர்ந்து தந்தையும் மகனும் பேசும் ஒரு முக்கியமான காட்சி வருகிறது, முகம்மது அலியின் கதையை விளக்கி மகனுக்குள் இருக்கும் கழிவிரக்கத்தைப் போக்குகிறார் அப்பா பாலாஜி சக்திவேல்.

கருப்பசாமியைத் தினமும் நக்கலடிக்கும் பக்கத்து வீட்டுக்காரரான வையாபுரி ஒரு குறிப்பிட்ட காட்சியில் சிறப்பாகச் செய்திருக்கிறார். அந்தக் காட்சி தான் அமைதியாக இருந்த கருப்பசாமியை உறுதியானவனாக மாற்றுகிறது. உழைப்பும், தைரியமும் மட்டுமே நமக்கு நல்ல பெயரைக் கொடுக்கும் என்று உணர்கிறார். அவருடைய லத்தி அடிகள் பேசு பொருளாகின்றன. குற்றவாளிகள் கூட கருப்பைக் கூப்பிடு என்றால் அலறுகிறார்கள்.

ஒரே ஒரு காவல் நிலையம். அதில் நடக்கும் சம்பவங்கள், சந்திக்கும் மனிதர்கள், குற்றவாளிகள். காவலர்களுக்குள் இருக்கும் புரிதல்கள். விட்டுக் கொடுக்காத தன்மை. தவறே என்றாலும் அனைவரும் சேர்ந்து கொள்ளுதல். மேலதிகாரிகளை எதிர்கொள்ளுதல் என இயல்பாக படமாக்கியிருக்கிறார். இன்ஸ்பெக்டராக வரும் அருள்தாசுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. இரண்டு மூன்று காட்சிகளில் பிரமாதப் படுத்துகிறார். அந்த மருத்துவமனை காட்சியும், காவல் நிலையத்தில் மற்றவர்களுக்கு அவர் சொல்லும் கதையும் போதும் — கைதட்டல் கன்பர்ம். தொடர்ந்து நடக்கும் மற்றவர்களின் மனமாற்றங்கள் திணிக்கப் பட்டதாகத் தெரிவதைத் தவிர்க்க இயலவில்லை. நீதிபதியாக வரும் அந்தப் பெண் கதாபாத்திரமும் நல்ல வடிவமைப்பு.

துறை சார்ந்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்றாலும் மக்கள் எப்படிப் பாதிக்கப் படுகிறார்கள். சமூகத்தில் காவலர் மேல் இருக்கும் பார்வை என்ன என்பதை இயல்பாகச் சொல்லி இருக்கிறார்கள். போலீசைப் பார்த்து திருடர்கள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், தவறு செய்தவர்கள் பயப்பட வேண்டும். ஒரு சிறுவனோ சிறுமியோ எதற்குப் பயப்பட வேண்டும். அப்படிப் பயப்படும் நிலையில் மக்களை வைத்திருப்பது மிகப்பெரிய களங்கம் இல்லையா என்று ஒரு பாத்திரம் கேட்கிறது. காவல் துறையின் இரட்டைச் செயல்பாட்டை இந்தக் காட்சி தெளிவாகக் காட்டி விடுகிறது.

ஓர் இயல்பான கதைக் களம். யதார்த்தமான நடிப்புடன் வந்திருக்கும் அதிக அறிமுகமில்லாத நடிகர்கள், பெரும்பாலும் பரபர வென்று நகரும் திரைக்கதை. மீண்டும் தனக்குப் பிடித்த காவல் நிலைய செட்டப்பில் வெற்றி பெற்றிருக்கிறார் ஷோ ரன்னரான பிரசாந்த் பாண்டியராஜ். இவரும் இயக்குநர் விக்னேஷ் நடராஜனும் சேர்ந்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

தொடர் முழுதும் பேசப்படும் மிகவும் மோசமான கெட்ட வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாம். நாமும் இதைக் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கப் பரிந்துரைத்து இருக்கலாம். இப்பொழுது வயது வந்தவருக்கான ஒரு தொடராக மட்டுமே இதைப் பார்க்க முடியும். சாம் சி எஸ் பின்னணி இசை ஓகே. ஒரு பாடல் கேட்க நன்றாக இருக்கிறது.

“சில பல குறைகள் இருந்தாலும் காவல் நிலையத்தின் சத்தம், வியர்வை, அவமானம், அன்பு — எல்லாவற்றையும் யதார்த்தமாகப் பதிவு செய்யும் தொடராக வாரண்ட் நினைவில் நிற்கிறது.”

logo
Kalki Online
kalkionline.com