ஒரு சில கதைகள் அது எழுதப்பட்ட காலக்கட்டத்தில் நல்ல வரவேற்பு பெற்றாலும், காலம் கடந்து படிக்கும் போது அதனுடைய சுவாரசியம் முன்பு இருந்ததைப் போல இருக்காது. ஆனால் எப்போது படித்தாலும் வாசகர் ரசனை குறையாமல் இருக்கும் கதைகளில் ஒன்று சாவியின் வாஷிங்டனில் திருமணம்.
இந்த நகைச்சுவை கதை 1963 ஆம் வருடம், ஆனந்த விகடன் பத்திரிகையில் பதினோறு வாரம் தொடர் கதையாக வெளியிடப்பட்டது. இதை எழுதியது யார் என்று விகடன் குறிப்பிடாமல், வாசகர்களை ஊகிக்கச் சொல்லியது. கடைசி வாரம் தொடர் முடிவில், “சாவி” என்ற கையெழுத்தைப் பார்த்தப் பின்னால் தான், வாசகர்கள் கதையின் ஆசிரியர் யார் என்று அறிந்தார்கள்.
வால்ட் டிஸ்னி தயாரித்த “ஆப்ஸெண்ட் மைண்டட் புரொஃபஸர்” என்ற முழு நீள நகைச்சுவைப் படத்தைப் பார்த்த சாவிக்கு, தமிழிலும் இதைப் போன்று மிகைப்படுத்திக் கூறும் வகை கொண்ட முழு நீள நகைச்சுவைக் கதை எழுத வேண்டும் என்ற ஆசை பிறந்தது. திருவையாறு ஆராதனைக்கு வந்திருந்த மேலை நாட்டவரைப் பார்த்ததும், “நம்ம ஊர் கல்யாணம் வெளிநாட்டில் நடத்தினால் அதற்கு வரவேற்பு எப்படி இருக்கும்” என்ற சிந்தனையின் விளைவுதான் இந்த நகைச்சுவைக் காவியம்.
கதைக்கரு: நண்பரின் மகள் கல்யாணத்திற்கு வந்திருந்த அமெரிக்க தம்பதிகள், இந்தியக் கல்யாணத்தில் இருந்த கோலாகலத்தில், பார்த்தவற்றால் கவரப்பட்டு, அதனை அவர்கள் உறவினர் மிஸஸ்.ராக்பெல்லரிடம் விவரிக்கிறார்கள். அந்த வர்ணனை மிஸஸ். ராக்பெல்லரைத் தூண்ட, அவர்கள் ஒரு தென் இந்தியக் கல்யாணம் பார்க்க வேண்டும் என்று ஆசைபடுகிறார்கள். அதனால், “செலவைப் பற்றிய கவலையில்லை. ஒரு தென் இந்தியத் திருமணம், அமெரிக்காவில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று கட்டளை இடுகிறார்கள். வாஷிங்டனில் ஒரு தென்னிந்திய கல்யாணத்திற்கு ஏற்பாடு நடக்கிறது.
தென்னிந்திய திருமணத்தில் சடங்குகள் அதிகம். இந்த சடங்குகள் ஒவ்வொன்றையும் விவரித்துக் கட்டுரை எழுதினால், அது ஒரு பெரிய தொகுப்பாகும். ஆனால், அதையே நகைச்சுவை கலந்து அளித்தால்...? அதுதான் வாஷிங்டனில் திருமணம்.
இரண்டு சாஸ்திரிகள் பொடோமக் நதியில் குளிக்கிறார்கள். ஒருவர் கேட்கிறார், ‘அது என்ன? போடாமக்கு நதி?’ மற்றவர் விளக்குகிறார் – ‘போடாமக்கும் இல்லை, வாடா புத்திசாலியுமில்லை. பொடோமக் என்று சொல்ல வேண்டும்.’
அப்பளம் இடுவதற்கு இந்தியாவிலிருந்து பாட்டிகள் வருவது. அப்பளம் வெய்யிலில் காய்வதற்கு, நேஷனல் ஆர்ட் காலரி மாடியில் உலர்த்துவது, ஜான்வாச ஊர்வலத்திற்கு இந்தியாவிலிருந்து காஸ்லைட் தருவிப்பது, காஸ்லைட் தூக்க நரிக்குறவர்கள். அமெரிக்காவில் உள்ள நாய்கள் நரிக்குறவர்களைப் பார்த்து குலைக்காததால், நாய்களை இந்தியாவிலிருந்து வரவழைப்பது இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
கல்யாணம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும், வாஷிங்டன் பத்திரிகைகள் பரபரப்புச் செய்திகளாக வெளியிட, நகரம் முழுவதும் கல்யாணத்தை எதிர் நோக்கி ஆவலாகக் காத்திருப்பதாக, அழகான கற்பனையில் எழுதி இருக்கிறார் ஆசிரியர்.
கல்யாண விருந்தில் ஜாங்கிரியின் வடிவத்தைப் பார்த்து “வெரி காம்ப்ளிகேடட் ஸ்வீட்” என்று அதிசயப் படுவதையும், வடுமாங்காய் கடித்துச் சாப்பிட ஆசைப்பட்டு, கையைக் கடித்துக் கொள்வதையும், மிருதுவான வட்ட வடிவ அப்பளத்தை எப்படி சாப்பிடுவது என்று வியப்பதையும் படிக்க நல்ல சுவை.
நகைச்சுவை கதையினூடே ஒரு மென்மையான காதல் கதையையும் இணைக்கத் தவறவில்லை சாவி அவர்கள். இந்த நகைச்சுவைக் கதையின் மற்றுமொரு சிறப்பம்சம் கோபுலு அவர்களின் சித்திரங்கள்.
இந்த தொடர்கதையைப் புத்தகமாக வெளியிட்ட நர்மதா பதிப்பகம், முகப்பு பக்கத்திலேயே இவ்வாறு பதிவிட்டிருந்தது.
“பூமியின் துயரங்களிலிருந்து மீட்டுச் செல்லும் ஒரு நகைச்சுவைக் காவியம்”
இது உண்மை, புகழ்ச்சியில்லை.