'ஓலை நறுக்கு'க் கொண்டு காசிக்குச் சென்றானாம்! எப்படி? அது என்னது?

Kashi Yatra
Kashi Yatra
Published on

தமிழ் என்றால் இறைவனும் உரிய மரியாதை அளிப்பான் என்பது எக்காலமும் உண்மை.

தமிழ்நாட்டில், ஸ்ரீரங்கத்தில் உற்சவர் ஊர்வலம் என்றால், தமிழ்ப் பாசுரங்களைப் பாடியபடி வேதியர் முன்னே செல்ல, ஸ்ரீரங்கன் அவர்களைத் தொடர்ந்து பின்னால் செல்கிறான்!

இதேபோல வடநாட்டில் காசியிலும் தமிழ் தனிச் சிறப்பு பெற்றிருக்கிறது. தம் இறைவனாம் காசி விசுவநாதருக்கான கோவிலைப் புதுப்பிக்கவும், அங்கு வந்து பக்தர்கள் வழிபடவும் உதவ வேண்டும் என்று கோரினார் நம் மதுரையைச் சேர்ந்த குமரகுருபரர். யாரிடம்?

அப்போது காசியை ஆண்டுவந்த, பாரசீக மொழி மட்டுமே தெரிந்த முகலாய மன்னனிடம். ஆனால் தமிழ் தெரியாத அவன், அவரைப் புறக்கணித்து விரட்டியபோது அந்தத் தமிழனுக்கு ஆதரவளித்தாள் கல்வித் தெய்வமாம் சரஸ்வதி தேவி.

இந்த விஷயத்தில் உதவி புரிய வேண்டும் என்று கோரி, தமிழாலான சகலகலாவல்லி மாலையை அணிவித்து, அடிபணிந்த குமரகுருபரருக்கு சகல மொழியையும் கற்கும் ஆற்றலை அப்போதே அருளினாள், அன்னை. அதுமட்டுமா, ஒரு தமிழ்க் கவிஞன் எங்கும் கம்பீரமாகத் தோன்ற வேண்டியவன் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சிங்கத்தை உடன் அனுப்பி, அதன் மீது அவர் ஆரோகணித்துச் செல்லுமாறும் வழி செய்து கொடுத்தாள்.

சிங்கத்தின் மீது சிங்காரமாய் அமர்ந்து வந்து பாரசீக மொழியிலேயே தன்னுடன் சரளமாக உரையாடிய குமரகுருபரரைப் பார்த்து வியந்து, விதிர்விதிர்த்துப் போனான், சுல்தான். உடனே அவர் கோரியவற்றை அளித்து அவரை வணங்கி நின்றான்.

ப்படி 17ம் நூற்றாண்டில் ஒரு தமிழன் கொண்டாடப்பட்ட அதே காசியில்தான், முறுக்கு மீசை – முண்டாசுக் கவிஞன் சுப்பிரமணிய பாரதியாரும் சரஸ்வதி கடாட்சம் பெற்றார். 1898-1902 ஆண்டுகளில் காசியில் 9, 10 வகுப்புகள் மற்றும் அன்னி பெஸன்ட் அம்மையாரின் மத்திய ஹிந்து கல்லூரியில் (பின்னாளில் பெனாரஸ் பல்கலை கழகத்துடன் இணைந்தது) பயின்றார். இவ்வாறு காசியில் தன் அத்தை இல்லத்தில் வசித்த நாட்களில்தான் அவர் ‘வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள்..‘ என்ற சரஸ்வதி துதியை இயற்றினார்.

ந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து காசிக்குச் செல்வதைத் தம் வாழ்நாள் தவமாக மேற்கொண்டிருந்தார்கள் தமிழர்கள். நடைப்பயணம்தான். இரண்டு, மூன்று மாதங்கள்கூட ஆகும் போய்ச் சேருவதற்கு. வழியில் அவர்கள் தங்கவும், உண்ணவும், உறங்கவும் வசதியாக சத்திரம், சாவடி அமைத்துக் கொடுத்திருந்தன சில நல்ல உள்ளங்கள். ஆனாலும் வழியில் கள்வரால் பொருட்கள் வழிப்பறி செய்யப்பட்டன. ஆனால் சிலரால் மட்டும் இந்த பாதிப்பு இல்லாமல் காசிக்குப் போய்ச் சேர்ந்துவிட முடிந்தது. எப்படி? இவர்களிடமும் செலவுக்குப் பணம் இருந்திருக்குமே?

பணம் இல்லை, ஆனால் அதற்குச் சமமான ஓலை நறுக்கு இருந்தது! அது என்ன விவரம்?

சில ஆண்டுகளுக்கு முன்வரை ‘டிராவலர்ஸ் செக்‘ என்று வங்கியில் கொடுப்பார்கள். அதாவது பல கிலோமீட்டர் கடந்து பயணம் செய்யும் ஒருவர், தாம் புறப்படும் இடத்தில் ஒரு வங்கியில் குறிப்பிட்ட பணம் செலுத்தி ஒரு காசோலையைப் பெற்றுக் கொள்வார். குறிப்பிட்ட நகரம் அல்லது நாட்டுக்குச் சென்று இந்த காசோலையை அதே வங்கியின் கிளையில் செலுத்தினால் உரிய தொகை பணமாகக் கிடைத்துவிடும்.

இதையும் படியுங்கள்:
128 ஆண்டுகள் பழமையான, 50,000 புத்தகங்கள் கொண்ட நவீன நூலகம் எங்கு உள்ளது தெரியுமா?
Kashi Yatra

இதே வசதியைத்தான் தமிழகத்தில் நகரத்தார் என்ற நாட்டுக் கோட்டை செட்டியார்கள், 18ம் நூற்றாண்டிலேயே காசி யாத்ரிகர்களுக்குச் செய்து கொடுத்தார்கள். அதாவது யாத்ரிகர் குறிப்பிட்ட தொகையை (பெரும்பாலும் தங்கம், தங்க நகை) இவர்களிடம் செலுத்தினால், இவர்கள் பனை ஓலை நறுக்கு ஒன்றில் ஒரு முத்திரையைப் பதித்துக் கொடுப்பார்கள்.

இந்த ஓலையை காசியில் உள்ள ‘நாட்டுக் கோட்டை நகரத்தார் சத்திர‘த்தில் (இப்போது கூட காசியில் ‘நாட் கோட் சத்தர்‘ என்று சொன்னால், தமிழ் தெரியாத எந்த வாடகை வாகன ஓட்டுநரும் மிகச் சரியாக இங்கே அழைத்து வருவார்) கொண்டு வந்து காண்பிக்கும் யாத்ரிகர்களுக்கு அவர்கள் காசியில் தங்கும் நாட்கள் பூராவும் அவர்களுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுப்பார்கள். காசிப் பயணம் முடித்துத் திரும்பும் அவர்களிடம் காசி நகரத்தார் சங்கத்தார் ஒரு ஓலை நறுக்கைக் கொடுப்பார்கள். அதை எடுத்துவந்து தமிழ்நாட்டு நகரத்தார் சங்கத்தில் காட்டினால், இவர்கள் முதலில் ‘டெபாஸிட்‘ செய்திருந்த தொகை அல்லது நகை திருப்பிக் கொடுக்கப்படும்!

அதாவது அந்த யாத்ரிகருக்குப் பயணச் செலவு முழுவதும் இலவசம்!

குறிப்பு: காசி யாத்திரை என்பது தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் ராமலிங்க ஸ்வாமியை தரிசனம் செய்துவிட்டு கடற்கரையிலிருந்து மண்ணெடுத்துப் போய் காசியில் கங்கை நதியில் அம்மண்ணைக் கரைத்துவிட்டு, காசி விஸ்வநாதர் தரிசனம் பெற்று, அங்கிருந்து கங்கை புனித நீர் கொண்டு வந்து ராமேஸ்வரம் ஈசனுக்கு அபிஷேகம் செய்வதில்தான் பூரணத்துவம் பெறும் என்பது ஆண்டாண்டு கால வழக்கம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com