

இந்தியத் தேர்தல் முறையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM - Electronic Voting Machine). இது தேர்தல் நடைமுறையை எளிமையாகவும், வேகமாகவும், நம்பகமானதாகவும் மாற்றியுள்ளது. EVM எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அதில் வாக்குகள் எப்படி எண்ணப்படுகின்றன என்பது குறித்த விரிவான விளக்கம்.
EVM-ன் கட்டமைப்பு
ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் முக்கியமாக இரண்டு அலகுகளைக் (Units) கொண்டது. கட்டுப்பாட்டு அலகு (Control Unit): இது தேர்தல் நடத்தும் அலுவலரிடம் (Presiding Officer) இருக்கும். இதன் மூலமே வாக்குப்பதிவு இயந்திரம் செயல்பாட்டிற்கு வரும்.
வாக்குப்பதிவு அலகு (Balloting Unit)
இது வாக்காளர்கள் வாக்கு செலுத்தும் மறைவிடத்தில் இருக்கும். இதில் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் மற்றும் நீல நிற பொத்தான்கள் இருக்கும்.
தற்போது இவற்றுடன் VVPAT (Voter Verifiable Paper Audit Trail) என்ற இயந்திரமும் இணைக்கப்படுகிறது. இது வாக்காளர் தாம் செலுத்திய வாக்கு சரியான வேட்பாளருக்குச் சென்றதா என்பதைச் சரிபார்க்க உதவுகிறது.
EVM செயல்படும் விதம்
வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாக, அனைத்து வேட்பாளர்களின் முன்னிலையில் 'மாதிரி வாக்குப்பதிவு' (Mock Poll) நடத்தப்பட்டு இயந்திரம் சரியாக வேலை செய்வது உறுதி செய்யப்படுகிறது. பின்னர், இயந்திரம் சீல் வைக்கப்படும்.
ஒரு வாக்காளர் தனது அடையாளத்தைச் சரிபார்த்துவிட்டு வரும்போது, கட்டுப்பாட்டு அலகில் உள்ள 'Ballot' பொத்தானை அலுவலர் அழுத்துவார். அப்போது வாக்குப்பதிவு அலகில் 'தயார்' (Ready) என்பதைக் குறிக்கும் பச்சை விளக்கு எரியும். வாக்காளர் தான் விரும்பும் வேட்பாளரின் சின்னத்திற்கு நேராக உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பொத்தானை அழுத்தியவுடன் ஒரு நீண்ட 'பீப்' ஒலி கேட்கும். இது வாக்கு பதிவானதை உறுதி செய்கிறது.
வாக்காளர் பொத்தானை அழுத்தியதும், VVPAT இயந்திரத்தில் உள்ள ஒரு சிறிய திரையில் ஒரு காகிதச் சீட்டு தோன்றும். அதில் வாக்காளர் தேர்ந்தெடுத்த வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் இருக்கும். இது ஏழு வினாடிகள் காட்சியளித்துவிட்டு தானாகவே கீழே உள்ள பெட்டியில் விழுந்துவிடும்.
இப்படித்தான் எல்லோருமே ஜனநாயகக் கடமையை ஆற்றி இருப்பீர்கள். இவ்வளவு சிறிய பெட்டியில் இத்தனை ஓட்டுகள் விழுந்தும் அவைகளை எப்படி எண்ணுகிறார்கள் என்று மலைப்பாக இருக்கிறது இல்லையா?
தேர்தல் முடிந்ததும், கட்டுப்பாட்டு அலகில் உள்ள 'Close' பொத்தான் அழுத்தப்பட்டு இயந்திரம் சீல் வைக்கப்படும். வாக்கு எண்ணும் நாளில், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல்கள் சரிபார்க்கப்பட்டு எண்ணும் பணி தொடங்கும்.
கட்டுப்பாட்டு அலகின் பின்புறம் உள்ள ஒரு மூடியைத் திறந்தால் 'Result' என்ற பொத்தான் இருக்கும். இதை அழுத்தினால், அந்த இயந்திரத்தில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை மற்றும் ஒவ்வொரு வேட்பாளருக்கும் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை டிஜிட்டல் திரையில் வரிசையாகத் தோன்றும்.
தேர்தல் அலுவலர்கள் இந்தத் தரவுகளைப் பதிவேடுகளில் குறித்துக் கொள்வார்கள். ஒவ்வொரு இயந்திரத்திலும் உள்ள முடிவுகள் கூட்டப்பட்டு, அந்தத் தொகுதியின் ஒட்டுமொத்த வெற்றி நிலவரம் அறிவிக்கப்படும்.
VVPAT சீட்டுகள் சரிபார்ப்பு: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் தன்னிச்சையாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து வாக்குச்சாவடிகளின் VVPAT சீட்டுகள் கையால் எண்ணப்பட்டு, EVM முடிவுகளுடன் ஒப்பிடப்படும். இரண்டிலும் முடிவுகள் ஒத்துப்போகும் பட்சத்தில் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
EVM பயன்படுத்துவதால் காகிதங்கள் சேமிக்கப்படுகின்றன, கள்ள ஓட்டுகள் தடுக்கப்படுகின்றன, மேலும் மிக முக்கியமாக, பல கோடி வாக்குகள் சில மணி நேரங்களிலேயே எண்ணப்பட்டு முடிவுகள் துல்லியமாக அறிவிக்கப்படுகின்றன.