நேர்மையெனப்படுவது யாதெனின்..!

Honesty
Honesty

மனிதர்களில் நல்லவர், கெட்டவர் என்னும் இருபிரிவுகளை நாம் அன்றாடம் பார்க்கிறோம். நமக்கும், மற்றவர்களுக்கும் நேர்வழியில் நின்று நன்மைகளை செய்பவரை நல்லவர்கள் என்றும், தீமைகள் செய்பவரை தீயவர் என்றும் அழைக்கிறோம். இவையெல்லாம் நம் அனுபவங்களின் அடிப்படையிலேயே கணிக்கப்படுகின்றன.

பொதுவாக சொந்த வாழ்விலும், செய்யும் தொழிலிலும் நேர்மையாக இருப்பவர்கள் நல்லவர்களாகவே இருப்பதை காண்கிறோம். நேர்மையானவர்கள் எவர் முன்பும் வினாக்குறியாக நிற்பதில்லை. ஆச்சரியக்குறியாய்தான் வாழ்ந்து காட்டுகிறார்கள். அவர்களிடம் தன்னம்பிக்கையும், மனநிறைவும் அதிகமாக இருக்கும்.

இன்றைய காலகட்டத்தில் மகிழ்ச்சியாகவும், அதே நேரத்தில், நேர்மையாகவும் வாழ்வதை நாம் மிகக் கடினமானதாக உணர்கின்றோம். நேர்மை என்பது ஒரு சிறந்த மனிதப் பண்பு. மனிதர்கள் அனைவருமே தவறு செய்வது இயல்பான ஒன்றே. நேர்மையானவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த தவறை திருத்திக் கொண்டு வாழ்கிறார்கள். ஒரு சாமான்ய மனிதன் முடிந்த வரை நேர்மையின் வழியே பயணிக்க முயற்சிக்கிறான்.

நேர்மை உட்பட அனைத்து நற்பண்புகளும், தனக்கும், பிறருக்கும் தீமை இல்லாததையே நினைத்தலும், அதன்வழியே நடத்தலுமே ஆகும். அவ்வாறான பண்புகளை பட்டியலிட எவராலும் முடியாது. இவற்றுள் உண்மை பேசுவதும் ஒரு முக்கியமான முதற்பண்பாகும். அது மற்ற நற்பண்புகளுக்கு தானே வழிகாட்டும். அது இப்போது மக்களிடையே மிகவும் அருகி விட்டது. ஒவ்வொரு தனி மனிதனும் பொருளாதாரத்தில் மேன்மை அடைய விரும்புகிறான். அதனால் அவனுக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறான். உண்மை பேச மறுக்கிறான். இதைத் தவிர அவனுக்கு வேறு வழி தெரிவதில்லை.

நேர்மையானவர்கள் எப்போதும் பிறருக்கு உதவி செய்யும் குணம் உடையவர்கள். எப்போதும் தம் உழைப்பில் வாழ விரும்புபவர்கள். தம்மால் முடிந்த வரை மற்றவர்களின் முன்னேற்றத்திற்கு உதவுபவர்கள். அவர்கள் அடுத்தவரின் பொருளுக்கு ஆசைப்படுவதில்லை. உழைத்து பிழைக்கும் எண்ணம் கொண்டவர்கள். திருடுவதோ, பிச்சையெடுப்பதோ இல்லை. மற்றவரை ஏமாற்றுவதில்லை. எவருக்கும் துரோகியாக மாறுவதில்லை. நேர்மையான முறையில் மட்டுமே பணம் ஈட்ட விரும்புகிறார்கள். நேர்மையுடன் உண்மை,பொறுமை, அனைவரிடமும் அன்பு பாராட்டுதல் ஆகியவற்றை பின்பற்றுபவர்கள். காமம், கோபம், பேராசை, மோகம், தற்பெருமை, பொறாமை ஆகியவற்றை தவிர்த்து எளியவாழ்வு வாழ எத்தனிப்பவர்கள். ஆயிரம் பேரிடம் ஆலோசனைகள் கேட்டாலும், இறுதி முடிவு அவர்களின் மனச்சான்றின்படியே இருக்கும். ஆனால்,தற்போது போட்டிகள் நிறைந்த சமூக பொருளாதார அமைப்பில் நேர்மையாக வாழ்வது எல்லோருக்கும் பெரும் சவாலாக உள்ளது.

நம் நாடு கட்சி அரசியல் அடிப்படையில் ஆளப்படுகிறது. இங்கே அரசியல் கட்சிகளே பணத்தைக் கொண்டுதான் தேர்தலை சந்திக்கின்றன. பொது வாழ்வில் நேர்மை என்பது காமராஜர், கக்கன், ஜீவானாந்தம் காலத்தோடு மறைந்து விட்டது.

அரசியலை பொறுத்தவரை நேர்மை என்பது வாக்களிப்பு முடிந்த பின்பு கேள்விக் குறியாகிவிடுகிறது. மக்கள் கை நீட்டி வாக்களிக்க பணம் வாங்கி விட்டால், கண்டிப்பாக தமக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று அரசியல் கட்சிகள் திடமாக நம்புகின்றன. அதனால், சாமாண்ய வாக்காளர்களுக்கு தேர்தல் நேரத்தில் பணம் உள்பட ஏராளமான பொருள்களை இலவசமாக தருகின்றன. இங்கு வாக்களிப்போரின் நேர்மையில் அரசியல்வாதிகளுக்கு ஐயமே இல்லை. சமூகத் தொடர்புகளில் நேர்மை என்பது பணத்தில் கொடுக்கல்-வாங்கல்,கொடுக்கும் வாக்கினை காப்பாற்றுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.

நேர்மையாக வாழ்வதை நாம் உறுதிப் பொருளாகப் பற்றிக் கொள்ளவேண்டும். வாழ்க்கையில் ஏழ்மை, நம்மை நேர்மையின்மையின் பக்கம் தள்ளி விடுகிறது. நாமும் அதற்கு இரையாகிறோம். முதல் முறையாக ஒருவன் நேர்மையற்று நடந்து கொள்ளும் போது, அவனது மனசாட்சி அவனை உறுத்துகிறது. ஆனால், வாழ்க்கையின் பற்றாக்குறைகள் அதை உதாசீனம் செய்கிறது. பிறகு மனஉறுத்தலும் மெல்ல மெல்ல குறைந்து போகிறது. ஆனால், நேர்மை தவறி வாழும் பெரும்பாலானோர், தங்கள் குழந்தைகள் முன் தங்களை நேர்மையானவர்களாகவே காட்டிக் கொள்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
சார், பேசலாமா?
Honesty

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் சாமாண்ய நிலை ஊழியர்கள் கையூட்டு பெற்று சிக்கலை விலை கொடுத்து வாங்குகிறார்கள். இவற்றை ஊடகங்கள் மூலம் நாம் அறிய வருகிறோம். அவர்கள் விரும்பவில்லை என்றாலும், நம்மில் பலர் விரும்பி தானே முன்வந்து கொடுக்கிறார்கள். தமது பணியை விரைவாக முடிப்பதில் உள்ள ஆர்வமே இதற்கு காரணம். ஒரு சாமாண்ய மனிதனின் நேர்மையற்ற செயலால் சமூகத்திற்கு ஏற்படும் தீயபாதிப்புகள் மிகக்குறைவு. ஆனால், ஒரு உயர்நிலை மனிதனால் ஏற்படும் பாதிப்புகள் மிகமோசமானவை. அவர்கள் செய்யும் அநேக நேர்மையற்ற செயல்களுக்கும் சாமாண்ய நேர்மையானவர்களே பகடைக்காய் ஆகிறார்கள்.

இன்றிருக்கும் பொருளாதார சூழ்நிலையில் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளவும், வசதியாயிருக்கவும் தனிமனிதன் விரும்புவது இயல்பான ஒன்றே. நேர்மைதவறி பணம் ஈட்ட அவன் முன்னே ஏராளமான வாய்ப்புகள் தென்படுகின்றன. நேர்மையில்லாத பலகாரணிகளுக்கு சாமர்த்தியம், திறமை, வியாபரத் தந்திரம் என்று பல பெயர்களை சூட்டிவிட்டோம்.

இந்த நிலை மாற இளைய தலைமுறையினரிடையே நேர்மை குறித்த விழிப்புணர்வை இயல்பாகவே வளர்க்க வேண்டும். வீட்டில் பெற்றோர்களும், பள்ளியில் ஆசிரியர்களும், பொது வெளியில் அரசியல் தலைவர்களும் நல்ல முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டும். அது எதிர்காலத் தலைவர்களிடம் நல்ல நேர்மறை தாக்கத்தை கொண்டு வரும் என நம்பலாம்.

நேர்மையாக நடந்து கொள்வதற்கு கொடுக்க வேண்டிய விலை அதிகம். அந்த விலை ஒன்றை கொடுத்து வாங்குவதற்கு நம்மிடம் பணம் இருப்பதில்லை. நேரமும் இருப்பதில்லை. இதுதான் எதார்த்தமான உண்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com