சார், பேசலாமா?

How to talk to someone
How to talk to someone

முனைவர் என்.மாதவன்

அண்மையில் நண்பர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன். தொடர்ந்து இரண்டு, மூன்று முறை அவரது செல்பேசி சினுங்கியது அவர் அதை எடுத்து பார்த்துவிட்டு ஏதும் பதில் அளிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து நான் அவரிடம் தொலைபேசி தொடர்ந்து ஒலிக்கிறதே. ஏன் நீங்கள் ஏன் எடுத்துப் பேசவில்லை? எனக் கேட்டேன்.

அதற்கு அவர் கூறிய பதில் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. "அந்த தொலைபேசியை நான் எடுத்தால் எனக்கு அரை மணி நேரம் அவர் பாடம் நடத்துவார். பிறகு அவருக்கு அரை மணி நேரம் நாம் பாடம் நடத்தி முடிக்க வேண்டும்" என்று சொன்னார்.

"எனக்கு புரியவில்லை கொஞ்சம் விளக்கமாய் சொல்லுங்கள்" என்றேன்.

"நான் போன் எடுத்தா அவர் அவருடைய பிரச்சனையெல்லாம் முதல்ல இருந்து எனக்கு சொல்லாத மாதிரியே சொல்லுவார். பிறகு ஏற்கனவே சொன்ன ஆறுதலையே நான் அவருக்கு மறுபடியும் சொல்லணும். இது போல பலமுறை செய்தும் வெறுப்புலதான் இப்படி நடந்துக்கிறேன்," என்றார்.

உண்மைதான் இன்றைக்கு இருக்கக்கூடிய நவீன கைபேசி யுகத்தில் யார் ஒருவரும் யாரையும் எளிதாக அணுகிவிட முடிகிறது. அந்த உரிமை எந்த நேரம் என்ற கணக்கில்லாமல் பலர் பல நேரங்களில் தொலைபேசி செய்து மணிக்கணக்காக பேசுகின்றனர். இந்த அனுபவம் பலருக்கும் ஏற்பட்டிருக்கும்.

இது ஒரு பக்கம் என்றால் பல்வேறு நிறுவனங்களில் பணி புரியும் தமது மகன் மகள் போன்றோரிடமும் பலர் இப்படிப்பட்ட உரிமையை எடுத்துக் கொள்கின்றனர். தான் பெற்ற குழந்தை தானே என்ற ரீதியில் இது நடக்கிறது. இது மட்டுமல்ல முன்னாள் நண்பர்கள் முந்தைய நாட்களில் தான் உதவி செய்தோர் போன்றவர்களிடமும் இப்படிப்பட்ட உரிமையை எடுத்துக் கொள்வோரும் இருக்கின்றனர்.

இதனை மேம்போக்காக பார்க்கும்போது அவ்வளவு தவறாகத் தெரியாது. ஒரு மனிதன் மற்றொரு மனிதரிடம் ஆறுதலை தேடுவது இயற்கையான வேட்கை என்றே நினைக்கத் தோன்றும். ஆனால் அதே நேரம் தமக்கு ஆறுதல் சொல்ல வாய்ப்புள்ளதாக நினைக்கக்கூடிய நபர்கள் என்ன நிலைமையில் இருக்கிறார்கள் என்பதையும் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.

ஒரு அழைப்பை நாம் மேற்கொள்ளும்போது அந்த அழைப்பின் பலன் இது தரப்புக்கும் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடினும் ஏதாவது ஒரு புதிய தகவலை இருதரப்பிலிருந்து பகிர்ந்து கொள்வதாக அமைய வேண்டும். அதனை விடுத்து தினந்தோறும் நடக்கும் விஷயங்களையே பகிர்ந்து கொண்டிருந்தால் யார் ஒருவர் தனது பணியில் மிகவும் மும்முரமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு தொந்தரவாகவே அமையும்.

இதனை சீரமைக்க என்ன செய்யலாம்?

இன்றைக்கு தெரிந்தோ தெரியாமலோ வாட்ஸ் அப் போன்ற செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. இதுபோன்ற செயலிகள் மூலமாகவோ அல்லது குறுஞ்செய்தி மூலமாகவோ ஒருவரது நிலைமையை நாம் எளிதாகத் தீர்மானிக்க இயலும். அந்த வகையில் ’பேசலாமா’ என்ற ஒரு செய்தி அனுப்பலாம். எதிர்த்தரப்பில் அவர்களது வசதியினை சுதந்திரமாக அளிப்பதற்கும் வாய்ப்பு தர வேண்டும். இவ்வாறு வாய்ப்பளித்த பின் சுருக்கமாக பேசி உரையாடலை முடிக்கலாம். நண்பர்களுடன் அளவளாவ விரும்பினால் அதற்குப் பொருத்தமான நேரம் என்ன என்பதை அவர்களோடு பேசி முடிவு செய்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
ஒரு தெருவின் நீளம் 86km என்றால் நம்பித்தான் ஆக வேண்டும் மக்களே!
How to talk to someone

இன்றைக்கிருக்கும் உலகமயமாக்கல் இணைய உலகில் இளையோர் யாரைப் பார்த்தாலும் எந்த நாட்டின் கடிகாரத்தில் இயங்குகிறீர்கள்? என்று கேட்டு அறிந்துகொள்ளுதல் அவசியம். அவர்கள் நம் நாட்டில் வசித்தாலும் அவர்கள் நிறுவனம் எந்த நாட்டிற்கான பணிகளை மேற்கொள்கிறதோ அந்த நாட்டின் பகல் நேரத்திலேயே அவர்கள் பணியாற்றவேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே நாம் ஒருவரை காலை நேரமென்று அழைத்தால் அவருக்கு அது தூங்கும் நேரமாக கூட அமையலாம்.

உரையாடும் அவா இருக்குமானால், உள்ளூரில் வாய்ப்புள்ள ஒத்த வயதுடைய நண்பர்களைக் கொண்ட நடைபயில்வோர் குழு போன்றவற்றை அமைத்துக்கொண்டு நடைபயின்றுகொண்டே பேசலாம். இது உடற்பயிற்சியாகவும் அமையும் சிறந்த பொழுதுபோக்காகவும் அமையும். அவ்வாறான நடைபயிற்சியின்போதும் தமது சொந்தகதை சோகக் கதைகளைப் பகிராமல் புதுப்புது விஷயங்களைப் பகிர்ந்தால் உரையாடலும் நடையும் இரசிக்கும். தினமும் ஒருவர் என்று தீர்மானம் செய்துகொண்டு அன்றைய செய்தித்தாளின் தலைப்புச் செய்திகளைப் பகிரலாம். இவ்வாறான பகிர்வுகளில் ஒரு கருத்தொற்றுமையுள்ள விஷயங்களை மட்டும் பேசி மகிழலாம். விவாதிக்க வேண்டிய விஷயங்கள் இருப்பினும் அதனையும் தீவிரமான உணர்ச்சிவசப்படலுக்கு ஆட்படாமல் மேற்கொள்ளலாம்.

இவற்றையும் மீறி அளவுக்கதிகாம உரையாட விரும்புவோர்க்கும் நமது தரப்பு இயலாமையை நாமோ அல்லது அவருக்கு நெருக்கமான ஒருவர் மூலமோ விளக்குவது நன்மை பயக்கும். இவ்வாறில்லாமல் தொடர்ந்து அழைப்புகளைப் புறக்கணித்துக்கொண்டிருந்தால் எதிர்தரப்பினர் மேலும் நொந்து போகவே செய்வர்.

ஆரோக்கியமான உரையாடல்கள் மகிழ்வை இரட்டிப்பாக்கவும் துக்கங்களை பாதியாக்கவும் வல்லவை. ஒருவகையில் மருந்துபோன்றது. விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்குத்தான் என்பர். அதுபோலவே தொடர்ந்து விருந்தும் மருந்தும் இரசிக்காது என்ற புரிதலுடன் செயல்பட்டால் உறவுகள் ஆரோக்கியமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com