

கடவுளுக்கு அடுத்து யார்?
இந்தக் கேள்விக்குப் பதில் தேட வேண்டிய அவசியம் இல்லை. நாம் தானாகவே கடவுளுக்கு அடுத்து மருத்துவர் தான் என்று சொல்லிவிடுவோம். உயிரைப் பாதுகாக்கும் டாக்டர், கடவுளுக்குச் சரிசமம். மருத்துவர்களுக்கான உறுதிமொழி மற்றும் சத்தியம் இருக்கிறது. அது 'இப்போகிரேட்டஸ் சத்தியம்' என்று அழைக்கப்படுகிறது. அதன் சாராம்சம்... ‘எனது மருத்துவ அறிவை மக்களுக்கு விரோதமாக செய்யமாட்டேன்’ என்பதே. இந்திய மருத்துவ ஆணையம் இந்த உறுதிமொழி பற்றி மெளனம் காக்கிறது?!
21ம் நூற்றாண்டில் மருத்துவம் இல்லாமல் வாழ முடியாது. மக்களின் உயிர் டாக்டர்கள் (Doctors) கையில் தான் உள்ளது. பெரும்பாலான டாக்டர்கள் நியாயமாக தான் ஃபீஸ் வாங்குகிறார்கள். ஆனால், சில டாக்டர்கள் எப்படி மக்களின் பணத்தைப் பிடுங்கலாம் என்றே நினைத்துத்தான் செயல்படுகிறார்கள்.
முதல் விசிட்டுக்கே ₹ 600 வாங்கி விடுகிறார்கள். மீண்டும் ஒரு வாரத்தில் வாருங்கள். இந்த டெஸ்ட் எல்லாம் எடுத்து வாருங்கள். சரி, டெஸ்ட் எடுத்துப் போனால் சில மருந்துகளை எழுதிக் கொடுத்து மீண்டும் ஃபீஸ் ₹ 500 வாங்கி விடுகிறார்கள். நாம் 3 மாதத்திற்கு மாத்திரைகள் கேட்டால், ஒரு மாதம் கழித்து நிச்சயமாக வர வேண்டும் என்று சொல்லி விடுகிறார்கள்.
மனித உயிர் விலை மதிப்பு இல்லாதது. அதைக் காப்பாற்றும் கடமை டாக்டர்களுக்கு உண்டு. மக்கள் கடவுளுக்கு அடுத்தபடியாக டாக்டர்களைத்தான் கடவுளாக நினைக்கிறார்கள். ஏன்? பிரசவம்கூட இப்போது மருத்துவமனைகளில் தான் நடக்கிறது. கர்ப்பிணிப் பெண்கள் மாதாமாதம் டாக்டர்களைச் சந்திக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். சரி, நகரங்களில் மருத்துவமனை உள்ளது. ஆனால், கிராமங்களில் உள்ள அனைவரும் என்ன செய்வார்கள்?
டாக்டர்கள், கிராமங்களுக்குப் போக விரும்புவது இல்லை. ஒருவர் டாக்டர் ஆன உடன் கட்டாயம் 2 அல்லது 3 ஆண்டுகள் கிராமத்தில் பணியாற்ற அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். இந்தியாவில் டாக்டர்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் தான் உள்ளார்கள்.
இங்கு சில டாக்டர்களைப் பற்றி சொல்ல வேண்டும். அவர்கள் ஏழைகளிடம் காசு வாங்குவது இல்லை. மிகக் குறைவாகவே வாங்குகிறார்கள். இந்த மனிதாபிமான விஷயம் எல்லா டாக்டர்களுக்கும் வேண்டும்.
டாக்டர்களை மக்கள் மதிக்கிறார்கள். ஆனால், சில டாக்டர்கள் பணம் பிடுங்கி வாழ்கிறார்கள்.
மக்களின் உயிர் டாக்டர்கள் கைகளில். கண், காது, மூக்கு, தொண்டை, பல், இதயம், மூளை, கல்லீரல், கிட்னி, மன அழுத்தம் போல பல பிரச்னைகள் டாக்டர்கள் மட்டுமே சரி செய்ய முடியும். இந்த பிரச்சனைக்கு தீர்வு என்ன? ஒன்றே ஒன்றுதான்.
பல்நோக்கு மருத்துவமனை மற்றும் அனைத்து தனியார் மருத்துவமனைகள் எல்லாம் அரசால் கண்காணிக்கப்பட வேண்டும். வருமான வரம்பினை நிர்ணயித்து, குறிப்பிட்ட வருமானத்துக்கு கீழ் இருப்பின் சிகிச்சை இலவசமாக இருக்க வேண்டும்! அரசு மருத்துவமனைகளில் ஊழல் களையப்பட்டு மக்கள் உயிர் பாதுகாக்கப்பட வேண்டும்! 'கடவுளுக்கு அடுத்து மருத்துவர் தான்' என்று நம்பி இருக்கும் மக்களுக்கு நல்ல சேவை கிடைத்திட வேண்டும்!