
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அழைப்பை ஏற்று அமெரிக்கா சென்றுள்ள பாரதப் பிரதமர், அதிபரின் வலது கை போல விளங்கும் எலான் மஸ்க் அவர்களை, அதிபரின் விருந்தினர் மாளிகை என்று அழைக்கப்படுகிற 'பிளேயர் ஹவுஸ்' மாளிகையில் சந்தித்தார். அந்த சந்திப்பில், எலான் மஸ்க் அவர்களுடன், ஷிவோன் ஜில்லிஸ் என்ற பெண்ணும், அவர்களுக்குப் பிறந்த மூன்று குழந்தைகளும் உடன் இருந்தனர்.
டொனால்ட் ட்ரம்பை பார்ப்பதற்கு முன்னதாக, அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் அவர்களுடன் நடந்த சந்திப்பில், இந்திய அமெரிக்க உறவிலான எந்த அம்சங்கள் பேசப்பட்டன என்பதை விட, யார் அந்த ஷிவோன் ஜில்லிஸ்? அவர் மஸ்கின் மனைவியா? அவர் மீது காதல் ஆர்வம் கொண்டவரா போன்ற கேள்விகள் பலருடைய ஆர்வத்தையும் தூண்டியிருக்கின்றன.
ஷிவோன் ஜில்லிஸ், கனடா நாட்டின் ஒன்டாரியோ மாகாணத்தில் பிப்ரவரி 8, 1986ஆம் வருடம் பிறந்தவர். தாயின் பெயர் சாரதா, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். தந்தை ரிச்சர்ட் ஜில்லிஸ், கனடியர்.
ஷிவோன் ஜில்லிஸ், மார்க்கம் நகரிலுள்ள யூனியன்வில்லே உயர்நிலைப் பள்ளியில் படித்தவர். 2008ஆம் வருடம் யேல் பல்கலைக்கழ்கத்தில் பொருளாதாரம் மற்றும் தத்துவத்தில் பட்டம் பெற்றார். யேல் பல்கலைக் கழகத்தின் ஐஸ் ஹாக்கி குழுவில் விளையாடி இருக்கிறார்.
பட்டப் படிப்பு முடிந்தவுடன் ஐபிஎம் நிறுவனத்தில், நியூயார்க் நகரில் பணிபுரிந்து வந்தார். பின்பு, ப்ளும்பெர்க் நிறுவனம் ஆரம்பித்த “ப்ளூம்பெர்க் பீட்டா” வென்ட்ச்சர் கேபிடலிஸ்ட் நிறுவனத்தில், ஸ்தாபக முதலீட்டாளர் மற்றும் பங்குதாரராக, 2012 முதல் 2018 வரை பணி புரிந்தார். ஃபோர்ப்ஸ் 30, இவரை 30 வயதுக்குட்பட்ட வென்ட்ச்சர் கேபிடலிஸ்ட் என்று குறிப்பிட்டது. நிறுவனம் தொடங்கியதிலிருந்து ஜில்லிஸ், 9 முதலீட்டிற்கு வழி வகுத்தார்.
டெஸ்லாவில் 2017 முதல் 2019 வரை ப்ராஜக்ட் டைரக்டராக இருந்தார். சாம் ஆல்ட்மேன் அவர்களின் 'ஓஃபன் ஏஐ' நிறுவனத்திலும், ஆலோசகராகப் பணி புரிந்திருக்கிறார். தற்போது மஸ்க் அவர்களின் 'நியூராலிங்க்' நிறுவனத்தில் 'டைரக்டர் ஆஃப் ஆபரேஷன்ஸ் அண்ட் ஸ்பெஷல் ப்ராஜக்ட்ஸ்' என்ற பதவியில் இருக்கிறார்.
இதைத் தவிர 'க்ரியேடிவ் டிஸ்ட்ரக்ஷன் லேப் ஏஐ இன்குபேடர்' என்ற நிறுவனத்தில் அங்கத்தினராகவும், 'வெக்டார் இன்ஸ்ட்டியூட் ஃபார் ஆர்டிஃபிஷல் இன்டலிஜென்ஸ்' மற்றும் 'ஆல்பர்டா மெஷின் இன்டலிஜென்ஸ் இன்ஸ்ட்டியூட்' ஆகியவற்றில் குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.
2021 வருடம் செயற்கை முறை கருத்தரிப்பில் 'அசூர்' மற்றும் 'ஸ்டிரைடர்' என்று இரண்டு குழந்தைகள் பிறந்தன. 2024ஆம் வருடம் மூன்றாவது குழந்தை பிறந்தது.
எலான் மஸ்க் அவர்களுக்கு மூன்று மனைவிகள். 11 குழந்தைகள். முதல் மனைவி ஜஸ்டின் வில்சன், 5 குழந்தைகள், இரண்டாவது மனைவி பாடகி க்ரீம்ஸ், 3 குழந்தைகள், மூன்றாவது ஷிவோன் ஜில்லிஸ் 3 குழந்தைகள். தன்னுடைய மனைவிகள் மற்றும் 11 குழந்தைகளும் ஒன்றாகத் தன்னுடன் இருக்க வேண்டும் என்று எலான் மஸ்க் டெக்ஸாஸில், 14,400 சதுர அடிகளில், பண்ணை மற்றும் 6 படுக்கை அறைகளைக் கொண்ட மாளிகை அமைத்துள்ளார். இதன் மதிப்பு இந்திய மதிப்பில் 295 கோடி.
ஷிவோன் ஜில்லிஸ், தன்னுடைய 3 குழந்தைகளுடன் இந்த வீட்டில் வசித்து வருகிறார். பொது நிகழ்ச்சிகளில் ஜில்லிஸ் அதிகமாகக் கலந்து கொள்வதில்லை. ட்ரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னால், அவருடைய மார்-ஏ-லாகோ எஸ்டேட் விருந்தில் கலந்து கொண்டார். பிரதமர் மோடியின் சந்திப்பில் கலந்து கொண்ட ஷிவோன், மோடி மற்றும் எலான் பேச்சு வார்த்தையின் போது குழந்தைகளைப் பராமரித்துக் கொண்டிருந்தார்.
எலான் மஸ்க் குழந்தைகளுக்கு, நரேந்திர மோதி அவர்கள் மூன்று புத்தகங்கள் பரிசளித்தார். ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் 'க்ரெஸண்ட் மூன்', ஆர். கே. நாராயணன் அவர்களின் புத்தகங்கள், பண்டிட் விஷ்ணுசர்மாவின் பஞ்சதந்திரம்.
நமது பிரதமர் அவர்கள் விண்வெளி, இயக்கம், தொழில் நுட்பம், புதுமை மற்றும் அமெரிக்கா, இந்தியா இடையே உறவை பலப்படுத்துதல், விண்வெளி ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து பணி புரிதல் ஆகியவற்றை விவாதித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். வளர்ந்து வரும் தொழில் நுட்பம், தொழில் முனைவு, நல்லாட்சி ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து பணி புரியும் வாய்ப்புகள் இருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளார்.