

அமெரிக்காவின் பல மாநிலங்களில் தற்போது கவர்னர் மற்றும் மேயர் பதவிகளுக்கான தேர்தல் நவம்பர் 4, செவ்வாய் கிழமை நடந்து முடிந்தது. போன வருடம் அமெரிக்காவில் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் பதவிகளுக்கும், பிரதிநிதிகள் சபை, செனட் சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் தேர்தல் நவம்பர் 5-ம்தேதி செவ்வாய்கிழமை நடந்தது. நவம்பர் மாதம், செவ்வாய்கிழமை தேர்தல் நடத்தப்படுவதற்கான காரணம் என்ன? 180 வருடங்களுக்கு முன்னால் இயற்றிய சட்டப்படியே தேர்தல் இன்று வரை நடைபெற்று வருகிறது.
நம்முடைய நாட்டில் பாராளுமன்றம் மற்றும் சட்ட மன்றத்திற்கான தேர்தல் நாட்களை தேர்தல் ஆணையம் அறிவிக்கும். ஆகவே, தேர்தல் நடக்கும் மாதம், நாள் அந்தந்த வருடத்தின் நிலைக்கேற்ப மாறும். ஆனால், நான்கு வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும், அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் தேர்தல் 1845ஆம் ஆண்டு அமெரிக்க காங்கிரஸ் இயற்றிய சட்டத்தின் படி நவம்பர் மாதம் முதல் திங்கட்கிழமைக்கு அடுத்து வரும் செவ்வாய் கிழமை அன்று நடத்தப்படுகிறது.
தேர்தல் தேதிக்கான சட்டம் இயற்றியவர்கள், நவம்பர் மாத முதல் செவ்வாய் கிழமை என்று குறிப்பிடாமல், நவம்பர் முதல் திங்கட்கிழமைக்குப் பிறகு வரும் முதல் செவ்வாய்கிழமை என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆகவே, நவம்பர் 1-ம் தேதி செவ்வாய்கிழமையாக இருந்தால், அந்த நாள் தவிர்க்கப்பட்டு, தேர்தல் அடுத்த செவ்வாய் கிழமை அன்று நவம்பர் 8-ம் தேதி நடைபெறும்.
1845க்கு முன்னால், அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களும், டிசம்பர் மாதம் முதல் புதன் கிழமைக்கு முன்னால், 34 நாட்களுக்குள் அவர்களுக்கு சௌகரியமான நாளில் தேர்தல் நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், முதலில் தேர்தல் நடத்திய மாநிலங்களின், தேர்தல் முடிவுகள் மற்ற மாநில வாக்காளர்களின் மனதை மாற்றுவதாகவும் அதனால் தேர்தல் முடிவுகள் பாதிக்கப்படுவதாகவும் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையை மாற்ற அமெரிக்காவில் எல்லா மாநிலங்களுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்துவது என்று முடிவானது. இதற்கான சட்டம், ஜனவரி 23, 1845-ம் ஆண்டு அமெரிக்க காங்கிரஸில் இயற்றப்பட்டது.
ஏன் தேர்தலுக்கு நவம்பர் மாதம் தேர்வு செய்யப்பட்டது? பண்டைய அமெரிக்கப் பொருளாதாரம் பெரும்பாலும் விவசாயத்தை மையமாகக் கொண்டிருந்தது. ஆகவே, வசந்த காலம் மற்றும் கோடை காலத்தின் முற்பகுதியில் தேர்தல் நடத்துவது. பயிரிடும் காலத்தில் இருப்பதால், விவசாயிகளுக்கு இடையூறாக இருக்கும் என்று கருதப்பட்டது.
அதைப் போலவே, கோடையின் பிற்பகுதி மற்றும் இலையுதிர் காலத்தின் முற்பகுதியில் தேர்தல் நடத்துவது, அறுவடையை பாதிக்கும் என்ற கருத்து நிலவியது. ஆகவே, இலையுதிரின் பிற்பகுதி, மற்றும் கடுமையான குளிர் காலம் வருவதற்கு முன்னால் தேர்தல் நடத்துவது சிறப்பானதாக இருக்கும் என்ற காரணத்தால் நவம்பர் மாதம் தேர்வு செய்யப்பட்டது.
ஆமாம், ஏன் செவ்வாய்கிழமை தேர்வு செய்யப்பட்டது? ஞாயிற்றுக் கிழமை பெரும்பாலான மக்கள் தேவாலயம் செல்வார்கள். ஆகவே, அந்த நாள் தவிர்க்கப்பட்டது. விவசாயத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கிராமப் புறத்தில் வசித்து வந்தார்கள். தேர்தலில் வாக்களிக்க அவர்கள் அருகிலிருக்கும் நகரத்திற்குச் செல்ல வேண்டும். அந்தப் பயணத்திற்கு ஒரு நாள் தேவைப்படும்.
புதன் கிழமை விவசாயிகளின் சந்தை தினம். ஆகவே, அன்று பயணம் செய்ய முடியாது. எனவே, வியாழக்கிழமை தேர்தல் நடத்த முடியாது. ஆகவே, ஞாயிற்றுக் கிழமை தேவாலயம் சென்று வழிபட்டு, திங்களன்று பயணம் செய்து, செவ்வாய்கிழமை அன்று தேர்தல் சாவடிக்குச் செல்வது மக்களுக்கு சௌகரியமாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. தேர்தலில் வாக்களித்து விட்டு புதன் கிழமை, விவசாயிகள் சந்தை தினத்திற்கு சொந்த ஊருக்குத் திரும்பி விடலாம்.
ஒரு முடிவை எடுக்கும் முன்னால், பல விஷயங்களையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்பதற்கு இந்த சட்டம் ஒரு முன்னுதாரணம். இந்த காரணத்தால், நூற்றாண்டைத் தாண்டியும், எந்த மாற்றமும் செய்யப்படாமல், அனைத்து தரப்பினராலும் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையாக நவம்பர் செவ்வாய் கிழமை தேர்தல் நடந்து வருகிறது.