'யானைப் பாகனுக்கு யானையால்தான் சாவு' – ஏன் இப்படிச் சொல்கிறார்கள்?

Mahout
Mahout
Published on

- தா.சரவணா

இந்த உலகில், ரயில், கடல், யானை ஆகிய மூன்றையும் எத்தனை முறை பார்த்தாலும் போதும் எனத் தோன்றாது என்பார்கள். அந்தளவுக்கு இந்த மூன்றும் எத்தனை முறை என்றாலும் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம். ஆனால், யானைகளைப் பழக்கும் முறைப்பற்றி அறிந்தால் வருத்தமே மேலோங்கும். நம் நெஞ்சம் கனக்கும்.

‛யானைப்பாகனுக்கு யானையால்தான் ‛சாவு' என்று சொல்வார்கள். யானைகளை பழக்கும்போது, அது, பாகனோட சொல் பேச்சு கேட்க, பயங்கர கொடூரமா அடிப்பார்கள். அதனால் யானை அந்த காயத்தோட வடுவையும், வலியையும் மனதில் ஞாபகம் வைத்துக்கொண்டே இருக்கும். மஸ்து நேரத்தில் வாய்ப்பு கிடைத்தால், அந்தக் கோபம் வெளிப்பட்டு ருத்ர தாண்டவம் ஆடும். முக்கியமாக மஸ்து (மதம் கொண்ட நேரம்) நேரத்தில், தலைமை பாகன், யானை அருகே இருக்க மாட்டார். காரணம், யானைக்கு தன் பாகன் மேல் இருக்கும் வன்மம் வெளிப்படும் நேரம் அதுதான். ஒரு யானையை பழக்கும்போது அந்த யானையைச் சுற்றி நாலு அல்லது ஐந்து கும்கிகள் நிறுத்தப்படும். ஒரு ஏழு அல்லது எட்டு பாகன்கள் அந்த யானைக்கு முன் நின்று ஆளுக்கு ஒரு குச்சியைக் கீழே போடுவார்கள். அதன் அருகில் ஒரு கும்கி நிற்கும்.

அது, எப்படிக் குச்சியை எடுத்து பாகன் கையில் கொடுக்கவேண்டும் என திரும்ப, திரும்பச் செய்துகாட்டும். அவ்வளவு சுலபத்தில் புது யானை குச்சியை எடுத்துவிடாது. ஆனால், அது எடுக்கும் வரை கும்கிகள் விடாது. புது யானையை தந்தங்களால் முட்டி நொறுக்கும். இதுபோக, பாகன்கள் ஒன்றரை இஞ்ச் தடிமனில், ஆறடி நீளத்தில், ஒரு வாரம் விளக்கெண்ணையில் ஊறப் போட்டு தீயில் வாட்டிய, யானைகளுக்காகவே பிரத்யேகமாகத் தயார் செய்த காட்டு மூங்கில் பிரம்புகளைக் கையில் வைத்திருப்பார்கள். அதை வளைத்தால், வட்ட வடிவத்தில் ரப்பர் மாதிரி முனைக்கு முனை முட்டும். அதில் ஒரே ஒரு அடி நம்மைப்போல் உள்ளவர்கள் வாங்கினால், செத்து விடுவோம்.

அதை வைத்து, யானையை அடிச்சு தள்ளுவார்கள். இதனால் ஏற்பட்ட வலியில் யானை பிளிரும். ரெண்டு கால்ல எழுந்து நிற்கும். ஆனால், குச்சியை எடுக்காது. ஆனால், குச்சியை எடுக்கும் வரை கும்கிகளும், பாகன்களும் விடமாட்டார்கள். கடைசியா அடி தாங்க முடியாமல், குச்சியை எடுத்து எந்த பாகன் கையில் கொடுக்கின்றதோ, அவரைத்தான் அந்த யானைக்கு பிடிச்சிருக்குன்னு அர்த்தம்.

இதையும் படியுங்கள்:
188 நீர்நிலைகளைப் புதுப்பித்திருக்கும் 'Water Warrior' நிமல் - சந்திப்போமா?
Mahout

இனி அந்தப் பாகனுக்கு மட்டுமே அந்த யானை கட்டுப்படும். அவர்தான் வாழ்நாள் முழுவதும் அந்த யானைக்குத் தலைமை பாகன். இப்போது, யானைக்குப் பிடித்தவரை தேர்ந்தெடுத்தாகிவிட்டது. இனி யானைக்கான பயிற்சி ஆரம்பமாகும்.

அதை பழக்குவதற்காக, தும்பிக்கை தூக்க முடியாத அளவுக்கு கரோல்ல அடைத்து, மூன்று நாட்களுக்கு உணவு வழங்க மாட்டார்கள். நான்காவது நாள் தன் பாகனை பார்த்து கெஞ்சும். அதன் பின்னர் கொஞ்சம் கரும்பு, வெல்லம் குடுத்து ருசிகாட்டி, பசியை தூண்டி, சொல் பேச்சு கேட்ட பின்னர்தான் கரும்பு, வெல்லம் கிடைக்கும் என அதுக்கு உணர வெச்சு, வழிக்குக் கொண்டுவருவார்கள்.

இது வரையில் எத்தனை அடிகள், சித்ரவதைகள். அந்தப் பாகனை கண்டாலே, யானைக்கு மனசுல ஒருவித கிலி ஏற்படுற மாதிரி செய்துவிடுவார்கள். ஆனால்,. என்னதான் பயமும் பாசமும் ஏற்பட்டாலும், அவ்வளவு சீக்கிரம் தன் மேல் யாரையும் ஏறவிடாது.

அதன் பின்னர் என்றைக்கு அந்த யானை, பாகனை முழுவதும் எந்த எதிர்ப்பும் இல்லாமல், தன் முன்னங் கால்களை மடக்கி குடுத்து, அதன் வழியா மேல ஏறி உட்கார அனுமதிக்கின்றதோ, அன்றைக்கு, பூஜை போட்டு கும்கிகளின் துணையோட கரோல் திறப்பாங்க. பாகன் யானை மேல் உட்கார்ந்துதான் கரோலை விட்டு வெளியே வரவேண்டும். அப்போதுதான் அது முழுவதும் பழக்கப்பட்டதுக்கான அடையாளம். இவையெல்லாம் நடக்க 48 நாட்கள் ஆகும். அடுத்தமுறை யானை சவாரி செய்யும்போது, இதெல்லாம் நம் நினைவுக்கு வரும்தானே?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com