
கோயில்களின் நகரம் என்று அழைக்கப்படுவது காஞ்சிபுரம் என்று எல்லோரும் அறிந்ததே. இங்கு ஆயிரம் கோயில்கள் உள்ளதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது. அதேப் போன்று வெள்ளைத் தங்க நகரம் என்று அழைக்கப்படுவது பற்றி பார்ப்போம்.
மிகப் பெரிய பருத்திச் சந்தை என்பதால் (Cotton Market) வெள்ளைத் தங்க நகரம் என்று அழைக்கப்படுகிறது. இது பஞ்சாப் மாநிலம் ஃபரித் கோட் மாவட்டத்தில் உள்ள கோட்கபுரா நகரம் ஆகும். மாவட்டத்தின் மிகப் பெரிய இந்நகரம் ஆசியாவின் ஒரு பெரிய பருத்திச் சந்தையைக் கொண்டுள்ளது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க நகரம் ஆகும்.
கோட்கபுரா பெயர்க் காரணம்:
கோட்கபுரா - அதன் நிறுவனர் நவாப் 'கபுரா' சிங் என்பவரிடமிருந்தும், 'கோட்' என்ற வார்த்தையிலிருந்தும் அழைக்கப்படுகிறது. கோட்கபுரா என்றால் ஒரு சிறிய கோட்டை அதாவது கபுராவின் கோட்டை என்று பொருள் படும்படி பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந் நகரம் சுமார் 2566 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
எப்படி போகலாம்?
ஃபரித் கோட்டிலிருந்து பேருந்தில் செல்வதாக இருந்தால் சுமார் 20 நிமிடங்களில் சென்று விடலாம். சண்டிகரில் இருந்து 5 மணி நேரம் பயண நேரமாகும். லூதியானாவிலிருந்து 2.5 மணி நேரம் ஆகும். புது டில்லியிலிருந்து இரயிலில் பயணிப்பதாக இருந்தால் 7 மணி நேரம் ஆகும். இந் நகரம் கங்கா நகர், லூதியானா, பதிண்டா, ஃபிரோஸ்பூருக்குச் செல்லும் வழியில் உள்ளது.
எப்போதும் மூடியிருக்கும் இரயில்வே கேட்:
கோட்கபுரா – முக்த்சர் சாலையில் எப்போதும் மூடியிருக்கும் இரயில்வே கிராஸிங் கேட் மிகப் பிரபலம். காரணம், கோட்கபுரா மிக முக்கியமான இரயில்வே இணைப்பில் உள்ள ஒரு இரயில்வே சந்திப்பு ஆகும். பெரிய பருத்திச் சந்தை என்பதால் ஏராளமான சரக்கு இரயில்களில் பருத்திப் பாரம் ஏற்றப்படுகின்றன. மேலும், கோட்கபுரா ஒரு முக்கிய பெட்ரோலிய விநியோக மையமாகவும் உள்ளது. அனைத்து முக்கிய வணிக நிறுவனங்கள் தங்கள் சேமிப்பு கிடங்கு மற்றும் விநியோக வசதிகளை இங்கு கொண்டுள்ளன. இதனால், தண்டவாளங்களில் இரயில்கள் அதிக நடைகள் (Trips) அடிப்பதால், பெரும்பாலான நேரங்களில் இரயில்வே கேட் மூடப்பட்டே இருக்குமாம். இது இந்நகரத்திற்கு பெரிய வளர்ச்சித் தடையாக இருப்பதாக வணிக நிறுவனங்களின் கவலையாக உள்ளது. என்ன செய்ய? பெருமித வளர்ச்சி என்றாலே கூடவே சில தடைகளும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது தானே!