
நாம் இருக்கும் யுகம் கலியுகம் என்றும், இதற்கு முன்னர் மூன்று யுகங்கள் கழிந்தன என்பதும் நமது முன்னோர்களின் நம்பிக்கை. இதற்கு முன்னர் இருந்த யுகங்களில் மனித இனத்தோடு, இராட்சச இனமும் இருந்ததாக நம்முடைய புராணங்கள் சித்தரிக்கின்றன.
”துஷ்டரைக் கண்டால் தூர விலகு” என்ற பழமொழிக்கு இணங்க, இராட்சதர்களைக் கண்டு விலகுவது எளிதாக இருந்திருக்கும் அந்தக் காலத்தில்.
ஆனால் இந்தக் கலியுகத்தில் மனிதப் போர்வையில் இராட்சதர்கள் வலம் வருவதாகத் தோன்றுகிறது. கீழே குறிப்பிட்டுள்ளவை நாளேடுகளில் வந்த செய்திகளில் சிறு துளி.
சொத்துக்காகத் தந்தையைக் கொன்று, உடலைக் கூறு போட்டு புதைத்த மகன்.
குடிவெறியில் தன்னுடைய பெண் குழந்தைகளைக் கொன்ற தந்தை.
ஆன்லைன் சூதாட்டம் ஆடுவதற்கு தடை போட்ட தாயைக் கொன்ற பள்ளிச் சிறுவன்.
கள்ளக் காதலன் உதவியுடன் கட்டிய கணவனைக் கொன்று உடலை பல கூறுகளாக்கி ப்ளாஸ்டிக் டிரம்மில் வைத்த மனைவி.
தன்னுடைய தங்கையைக் கொன்று, ஒன்றும் தெரியாதது போல நாடகமாடிய அண்ணன்.
வேறு பெண்ணிடம் உள்ள தொடர்பால் மனைவியைக் கொன்ற கணவன்.
தான் வேலை பார்த்திருந்த வீட்டின் சொந்தக்காரர் மற்றும் அவரது மனைவியைக் கொன்ற வேலையாள்.
சிறுவர், பெரியவர் என்ற வயது வரம்பின்றி அரங்கேறும் பாலியல் குற்றங்கள்.
இப்படி சமுதாயத்தில் மனிதர்கள் போல மறைந்து வாழும் எண்ணற்ற இராட்சதர்களை அடையாளம் கண்டு கொள்வது எப்படி? இப்படி சமுதாயம் சீர் கெட்டு தறி கெட்டு போய்க் கொண்டிருக்கும் நிலைக்கு யார் அல்லது எது காரணம்?
“குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது?” என்பது ஒரு பழைய திரைப்படப் பாடல். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பலர் மாநிலங்களிலும், பாராளுமன்றத்திலும் சட்டம் இயற்றும் வல்லமை படைத்த உறுப்பினர்கள். ஒரு சிலர் மந்திரிகள். எல்லாம் தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் தேர்தல் ஆணையம், உயர்நீதி மன்றம்.
ஆசிரியர்களை மரியாதையுடனும், பயபக்தியுடனும் பார்த்தது ஒரு தலைமுறை. “அடியாத மாடு படியாது” என்பது போல ஆசிரியர்கள், மாணவர்களைக் கண்டித்தும், அடித்தும் திருத்துவதில் தவறில்லை என்று பெற்றோர்கள் நினைத்தார்கள் ஒரு காலத்தில். ஆனால், மாணவர்களைக் கண்டு அஞ்சி விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது ஆசிரியர் சமுதாயம்.
அந்த காலத் திரைப்படங்களில் கதையின் நாயகன் ஏதாவதொரு வேலையில் இருப்பான் – விவசாயி, தொழிலாளி, வண்டி இழுப்பவன், ஆசிரியர், டாக்டர், போலீஸ் என்று. அவனை, நல்லவனாக எல்லோருக்கும் உதவுபவனாகச் சித்தரித்திருப்பார்கள். ஆனால் இப்போது வேலையில்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றித் திரியும் நாயகன் அல்லது ரௌடி, திருடர் குழுத் தலைவன். முன்பு ஒளிவு மறைவான குடிக்கும் காட்சி ஒரு சில படங்களில். படங்களில் நாயகன் குடித்தாலும் நகைச்சுவை நாயகன் குடிக்கமாட்டார். இப்போது நகைச்சுவை நாயகன் தானும் குடித்து, நாயகனுடன் ஒரு குத்தாட்டமும் போடுகிறார்.
குடும்பக் குழப்பத்திற்கு முன்னுரிமை தரும் தொலைக்காட்சித் தொடர்கள். கண்ணியமான கதைகளையும், நாவல்களையும் தந்து கொண்டிருந்த வார, மாத இதழ்கள், விற்பனைக்காக அரசியல் அக்கப்போரையும், சினிமா கிசுகிசுக்களையும் நம்பி வாழும் அவலம்.
என்றும் அரசியல், எதிலும் அரசியல் என்ற நிலை. நாட்டிற்குத் தேவையென்று அரசு ஒரு தீர்மானம் கொண்டு வந்தால், அதன் சாதக பாதகங்ளை சீர்தூக்கி ஆராய்ந்து முடிவெடுக்காமல், இதனை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது இரண்டில் எது நம்முடைய கட்சிக்கும், வாக்கு வங்கிக்கும் நல்லது என்று யோசித்து முடிவெடுக்கும் அரசியல் கட்சிகள். 'காசேதான் கடவுளடா' என்று எல்லாவற்றிலும் பணம் தேடும் அரசியல்வாதிகள்.
நாட்டின் வளர்ச்சி, அடைந்துள்ள முன்னேற்றம் ஆகியவற்றைப் பட்டியலிட்டு, ஆக்கபூர்வமான சிந்தனையை மக்களுக்கு எடுத்துரைக்காமல், நாட்டின் ஒரு மூலையில் நடந்த தவறை, பூதக்கண்ணாடி கொண்டு பார்த்து, பெரிதுபடுத்தி, நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் பத்திரிகைகள். இந்தச் செய்திகள் இந்தியாவின் மற்ற பகுதிகளில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றிக் கவலைப்படாமல், இதை ஒளியும் ஒலியுமாக நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் தொலைக்காட்சி நிலையங்கள்.
இந்த நிலை என்று மாறும்? “பாருக்குள்ளே நல்ல நாடு” என்பதை மனதில் இறுத்தி, நாட்டின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு நடந்தால், சூழ்நிலை சீர்படும். செய்வார்களா? எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு?