நாம் ஏன் நடக்க வேண்டும்?

03.04.2024 - தேசிய நடைப்பயிற்சி தினம்!

Walking...
Walking...Image credit- pixabay.com

வ்வொரு வருடமும் ஏப்ரல் மாத முதல் புதன் கிழமை, தேசிய நடைப்பயிற்சி நாளாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, இந்த வருடம் ஏப்ரல் 3ஆம் தேதி தேசிய நடைபயிற்சி நாள்.

நாம் ஏன் நடக்க வேண்டும்?

இதய நோயாளிகள், கொழுப்புச் சத்து உள்ளவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவுக் கட்டுப்பாடுகளுடன் நடைப்பயிற்சி செய்வது அவசியம் என்பது மருத்துவர்கள் அறிவுரை. நடப்பது இதயத்திற்கும், ரத்தக் குழாய் களுக்கும் நல்லது. நோய்களின் தாக்கத்தினால் ஏற்படும் அகால மரணத்தை சீரான நடைப்பயிற்சியின் மூலம் தடுக்கமுடியும். இது எல்லாப் பாலினத்தவருக்கும், எல்லா வயதினவருக்கும் பொருந்தும்.

போதுமான உடல் சம்பந்தமான செயல்பாடுகள் இன்றி ஒவ்வொரு வருடமும் 32 இலட்சம் பேர் இறப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தகவல் கூறுகிறது. கணினியின் முன்னால் அமர்ந்து வேலை செய்பவர்கள், நாள் முழுவதும் இருக்கையில் இருந்தபடியே வேலை செய்பவர்கள் பலருக்கும், உடல் சம்பந்தமான செயல்பாடுகள் குறைகின்றன.

அதிக நேரம் உட்கார்ந்து இருப்பதால், வளர்சிதை மாற்றத்தின் (மெடபாலிசம்) வேகத்தைக் குறைப்பதுடன், தசை வளர்ச்சியையும், உடல் சக்தியையும் பாதிக்கின்றது. இந்தப் பாதிப்பினால், உடலின் பல பாகங்களில் வலி ஏற்படுகின்றது. முதுகுவலி ஏற்படுவதற்கு முக்கியக் காரணி, ஒரே நிலையில் பல மணி நேரங்கள் உட்கார்ந்திருப்பதுதான்.

நடப்பது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. தசைகளுக்கு வலிமை கூட்டுவதால், எலும்புகள் பாதுகாக்கப்படுகின்றன. உடல் சக்தியை மேம்படுத்துவதுடன், உடல் வலிகளைக் குறைக்கும் ஹார்மோனை வெளிப்படுத்துகிறது. உடலைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள நடைப்பயிற்சி உதவுகிறது.

நடப்பதற்கு நம்மை எப்படி தயார் செய்துகொள்ள வேண்டும்?

நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்து, அதற்கேற்ற உடையணிந்து நடப்பது அவசியம். வெப்ப காலங்களில் அல்லது கோடை வதைக்கும் இடங்களில் உடலை இறுக்கும் உடையணியாமல் நடப்பது நல்லது. உடலில் அதிக அடுக்கு துணிகள் இருந்தால், வியர்வை அதிகரித்து, நடப்பது சிரமமாக இருக்கும். உடல் சூடும் அதிகரிக்கும்.

குளிர் பிரதேசங்களில், மற்றும் குளிர் காலங்களில் உடலை முழுவதும் மூடும் வகையில் உடையணிந்து நடப்பது அவசியம்.

நடப்பதற்கு செல்பவர்கள் காலணியில் கவனம் செலுத்துவது அவசியம். நடக்கும்போது தடுக்கி விழுவதற்கு முக்கியக் காரணம், நம்முடைய காலணி மற்றும் நடைபாதையின் அமைப்பு. செருப்புகளைவிட, குறைந்த எடையிலான ஷூ நடப்பதற்கு எற்றது.

தற்போது ஸ்மார்ட் வாட்ச் பல வசதிகளுடன் கிடைக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று, நீங்கள் எத்தனை ஸ்டெப்ஸ் நடக்கிறீர்கள் என்பதை அந்த வாட்ச் அளந்து சொல்லும். உங்கள் மருத்துவரிடமிருந்து, நீங்கள் உங்களுடைய உடல் ஆரோக்கியத்தைக் கணக்கில் கொண்டு எத்தனை ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும் என்றறிந்து அதன்படி செய்வது நல்லது.

இதையும் படியுங்கள்:
அழகான வளைந்த புருவங்களுக்கு ‘த்ரெட்டிங்’தான் பெஸ்ட்!

Walking...

எப்பொழுது?  எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்?

காலையா, மாலையா எப்போது நடப்பது நல்லது என்பது சிலர் கேட்கும் கேள்வி. இதுவும், நீங்கள் இருக்கும் இடத்தையும், தட்ப வெட்ப நிலையையும், எங்கு நடக்கப் போகிறீர்கள் என்பதையும் பொருத்தது. பனி விழும் இடங்களில், காற்றில் மாசுள்ள இடங்களில் அதிகாலையில் நடப்பதை தவிர்ப்பது நல்லது. சென்னையைப் பொருத்தவரை, அதிகாலை அல்லது மாலை 5 மணிக்குப் பிறகு நடப்பது நல்லது. ஒரு நாளைக்கு குறைந்தது அரைமணி நேரம் நடக்க வேண்டும் என்கிறார்கள் வல்லுநர்கள். முன்பு, 10000 ஸ்டெப்ஸ் நடப்பது உடல் நலத்திற்கு நல்லது என்று கூறி வந்தார்கள். ஆனால், சமீபத்திய ஆராய்ச்சியின்படி ஒரு நாளைக்கு 4000 ஸ்டெப்ஸ் நடந்தாலே, அகால மரணத்தைத் தடுக்கலாம் என்று கண்டறிந்துள்ளார்கள்.

எங்கே நடப்பது நல்லது?

முக்கியமாக அதிக வண்டிகள், மனிதர்கள் நடக்கும் முக்கிய தெருக்களைத் தவிர்ப்பது நல்லது. அருகில் பூங்கா இருந்தால், அது சிறந்த இடமாக இருக்கும். வெளியில் செல்வது கடினமாக இருந்தால் குடியிருப்பைச் சுற்றியோ, மொட்டை மாடியிலோ நடக்கலாம். சென்னையைப் பொருத்தவரை, கடற்கரை நடப்பதற்கு ஏற்ற இடம்.

கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்

நடக்க ஆரம்பிக்கும்போது முதலில் மெதுவாக நடந்து, பின்னர் வேகத்தைக் கூட்டுவது நல்லது. நடுவே சற்று நிறுத்தி, கால் தசைகளை சற்றே நீட்டி, ஆசுவாசப் படுத்திக்கொண்டு நடக்கலாம். பூங்காவில் நடப்பவர்கள், நடப்பதில் சிரமம் தோன்றினால், சில நிமிடங்கள் அமர்ந்து நடையைத் தொடரலாம். ப்ளே க்ரௌண்டில் நடப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சில சமயம் தரை ஒரே சீராக இருக்காது. மழைக் காலங்களில் தண்ணீர் தேக்கத்தால், வழுக்கி விழுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

மூத்த குடிமக்கள்...
மூத்த குடிமக்கள்...Image credit- pixabay.com

மூத்த குடிமக்கள் கவனத்திற்கு

உடல் நலத்திற்காக உடல் பயிற்சி, நடைப் பயிற்சி என்று எதை மேற்கொண்டாலும், உங்கள் குடும்ப மருத்துவரின் ஆலோசனைப்படி செயல்படுங்கள். வீட்டில் அமர்ந்திருக்கும்போது, நடுவில் எழுந்து வீட்டிற்குள் நடக்கலாம். அலைபேசியில் பேசும்போது அமர்ந்து பேசுவதைவிட நடந்துகொண்டே பேசலாம்.. லிஃப்ட் எதிர்பார்க்காமல் மாடிப்படி ஏறிச் செல்லுதல், சில கலோரிகளைக் குறைக்கும். அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று, பிராகாரத்தைச் சுற்றி வருவது, எல்லா சன்னிதிகளையும் தரிசித்து வருவது, பூங்காவில் சென்று நண்பர்களுடன் அல்லது தம்பதியராக நடப்பது, வீட்டு வாசலில் காய்கறிகள் வாங்காமல், கடைக்குச் சென்று வாங்கி வருவது ஆகியவற்றைக் கடைப்பிடிக்கலாம். வெளியில் செல்லமுடியாத சமயத்தில் வீட்டின் உள்ளே ஸ்லோகம் சொல்லிக்கொண்டோ அல்லது கேட்டுக்கொண்டோ நடக்கலாம். வாரத்திற்கு 150 நிமிடமாவது நடப்பது நல்லது என்பது வல்லுநர்கள் கருத்து.

நீண்ட வாழ்வு வாழ்வது நம் கையில் இருக்கிறது என்பதைவிட நம் காலில் இருக்கிறது என்று சொல்லலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com