
போக்குவரத்து நெரிசல் மிகுந்த அந்த சாலையில், மக்கள் சந்தடி அதிகரித்த வேளையில் ஒருவர் நடு சாலையில் நின்றபடி அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
நடைபாதையில் சென்று கொண்டிருந்த நான், அவரைப் பார்த்துப் பதறிப்போய் அவர் கையைப் பிடித்து இழுத்து சாலை ஓரமாக அழைத்து வந்தேன்.
‘‘என்ன சார் ஆச்சு உங்களுக்கு? இப்படியெல்லாம் தற்கொலை முயற்சி பண்ணக்கூடாது,’’ என்று அவரைக் கடிந்துகொண்டேன்.
‘‘சார், நீங்க என்ன, என்னவெல்லாமோ சொல்றீங்க? நான் ஒரு முகவரியைத் தேடிகிட்டு வந்தேன்,’’ என்று அப்பாவியாகச் சொன்னார்.
‘‘அதுசரி, இப்படி சாலையில நின்னுகிட்டு முகவரி தேடினீங்கன்னா, அப்புறம் உங்க முகவரி என்னன்னு தேட வேண்டியிருக்குமே!’’ என்று கேலியாகப் பரிதாபப்பட்டேன். ‘‘அது ஏன் மேலே பார்த்தபடியே தேடிகிட்டுப் போறீங்க? ஏதாவது அசரீரி மாதிரி வானத்திலே முகவரி தெரியுதா என்ன?’’ என்றும் கேட்டேன்.
‘‘அதில்லே சார், இந்த சாலை நெடுக அடுத்தடுத்து நிறைய கடைகள் இருக்கு ஆனால் முகவரியை காணோம். நான் பத்து வருஷத்துக்கு முன்னால சென்னைக்கு வந்தப்ப, எனக்கு முகவரி சொன்னதே அந்தக் கடைகள்தான்,’’ என்றார் அவர்.
கடைகள் முகவரியைத் தெரிவித்தனவா? எனக்குக் குழப்பம்.
‘‘ஆமாம் சார், அப்பல்லாம், ஒவ்வொரு கடையிலும் அதன் முழு முகவரியை எழுதி வைத்திருப்பாங்க. நான் தேடி வந்த முகவரி இருக்கற தெருவிலே, அந்த வீட்டு இலக்கம் இந்தத் தெருவின் எந்த பக்கத்ல, எந்த வரிசையில இருக்குங்கறதை சுலபமாக அனுமானிக்க முடிஞ்சுது. இப்ப யாரையாவது கேட்கவேண்டியிருக்கு,’’ என்று அங்கலாய்த்துக் கொண்டார் அவர்.
அந்த வாடையில் இருந்த கடைகளில் பெயர்ப் பலகைகளைப் பார்த்தேன். கடைப்பெயர், உள்ளே என்ன கிடைக்கும் என்பதன் சுருக்கமான விவரங்கள், அவ்வளவுதான். பல வருடங்களுக்கு முன் ஒவ்வொரு கடையிலும் அந்தக் கடையின் முழு முகவரி எழுதப்பட்டிருந்த நிலைமையை, வியாபாரத்தை மேம்படுத்தும் வாசகங்கள் சாப்பிட்டு விட்டிருப்பதைப் பார்த்தேன்.
அவர் குறைபட்டுக் கொண்டது நியாயம்தான். யாரையும், கேட்க வேண்டிய அவசியம் இல்லாமல் கிடைத்த உதவி அது. அப்படியே கேட்டாலும் தெரியாவிட்டாலும் சிலர், அவ்வாறு சொல்ல அவமானப்பட்டு தவறான தகவலைத் தந்து அலைக்கழிக்கும் வேதனை இல்லாமல், முகவரி தேடுபவர் தாமாகவே தெரிந்து கொள்ளும் அந்த வசதி இப்போது இல்லாமல்தான் போய்விட்டது.
சரி, என்னதான் செய்யமுடியும்?
அதற்கு அவரே விடையும் தந்தார். ‘‘சார், சாலைக்கு நடுவிலே அமைக்கற பெயர்ப் பலகையை விடுங்க. மற்றபடி தெருமுனையில இப்படி சிமின்ட் அல்லது அக்ரலிக் பலகையை நிறுத்தறதுக்கு பதிலாக, அந்த முனையில இருக்கக்கூடிய வீடு அல்லது ஏதாவது கட்டடத்தின் காம்பவுண்டு சுவரில் அந்தத் தெருவின் பெயரை எழுதி வைக்கலாம். தன் வீட்டு அழகு பாழாகிடும்னு அந்த சொந்தக்காரர் சொன்னார்னா, தெருப் பெயரை, அலங்கார அமைப்போட அழகாக எழுதி அந்த காம்பவுண்டு சுவருக்கே புதுப்பொலிவு கொடுக்கலாம். இதனால பெயர்ப் பலகைகள் தயரிக்கும் செலவும் மிச்சமாகும். ’’
‘நல்ல யோசனைதான்‘ என்று அவரைப் பாராட்டிய நான், ‘‘சரி, நீங்க தேடற முகவரியைச் சொல்லுங்க, நான் வழி காட்டறேன்,’’ என்றேன்.
அவரோ, ‘‘மனசிலே குறிச்சுகிட்டு வந்தேன். உங்ககிட்ட பேசிகிட்டிருந்ததிலே மறந்திட்டேன். இருங்க ஊர்ல கேட்டு சொல்றேன்,’’ என்று தன் செல்போனில் எண்களைத் தட்ட ஆரம்பித்தார் அவர்!