தமிழகம் முழுவதும் அமைந்துள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் தூய்மை பணி சில ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் மயமாக்கப்பட்டது. அதற்கு முன்பு வரை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு கட்டுப்பாட்டில் தூய்மை பணியாளர்கள் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் தூய்மை செய்ய பணியில் ஈடுபட்டனர். இவர்களை சுகாதார அலுவலர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவு மேலாண்மை அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது வீடுகளில் இருந்து மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, சுகாதாரப் பணியாளர்களால் பெறப்பட்டு, அவை திடக்கழிவு மேலாண்மை மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அங்கு மக்கும் குப்பைகள் உரமாகவும், மக்காத குப்பைகளை மேலும் தரம் பிரிக்கப்பட்டு, அவற்றிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகள் தனியே எடுக்கப்பட்டு அவை சிமெண்ட் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மீதமுள்ள மக்காத கழிவுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில் தூய்மை பணியானது தனியார் மயமாக்கப்பட்டது. இதை கான்ட்ராக்ட் எடுத்த நபர்கள் பெரும்பாலும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களாக காண்ட்ராக்ட் எடுத்துள்ளனர்.
இத்தனை நாளாக பணியாற்றி வந்த நிரந்தர தூய்மை பணியாளர்கள், பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், ஹாஸ்பிடல் போன்ற பகுதிகளில் தூய்மை மேற்கொள்ள பணி ஒதுக்கப்பட்டது.
தனியார் பணியாளர்கள் வீடுகளில் இருந்து மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பெறும் பணி ஒதுக்கப்பட்டது. இங்கிருந்து பெறப்படும் குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, எடை போடப்பட்டு அவற்றுக்கான பணம் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து பெறப்படுகிறது.
தனியார் காண்ட்ராக்ட் நபர்களிடம் போதிய வாகனங்கள் இல்லை என்றால், அந்த வாகனங்கள் அந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் இருக்குமேயானால், தனியார் நபர்களுக்கு வாடகைக்கு விடவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதில்தான் பிரச்சனைகள் கிளம்பத் தொடங்கியுள்ளது.
அதாவது வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளுக்கான பணத்தை உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து வாங்கும் தனியார் காண்ட்ராக்டர்கள், தங்களிடம் பணியாற்றும் நபர்களுக்கு சரிவர ஊதியம் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு பல உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து வருகிறது.
சமீபத்தில் கூட திருப்பத்தூர் நகராட்சியில் தனியார் தூய்மை பணியாளர்களுக்கு இரண்டு மாதமாக சம்பளம் வழங்கவில்லை என அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, திருப்பத்தூர் மாவட்ட கலெக்டரிடம் மனு வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோலத்தான் தூத்துக்குடி நகராட்சியிலும் தூய்மை பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
ஒரு நாள் நம் வீட்டில் இருந்து குப்பைகளை அகற்றாவிட்டால் வீட்டில் வசிக்க முடியாத நிலை ஏற்படும். அப்படிப்பட்ட குப்பைகளை கையில் ஏந்தி செல்லும் தூய்மை பணியாளர்களுக்கு உரிய சம்பளம் வழங்குவதில் ஏன் இந்த சுணக்கம்? என தெரியவில்லை.
நகராட்சி அமைப்புகளோ, மாநகராட்சி அமைப்புகளோ காண்ட்ராக்டர்களுக்கு உரிய நேரத்தில் பணத்தை கொடுத்து விடுவதாக கூறப்படும் நிலையில், தனியார் காண்ட்ராக்டர்கள் சம்பளம் வழங்காமல் இருப்பது என்ன நியாயம்? என தெரியவில்லை.
உள்ளாட்சி அமைப்பு மேயர்கள் மேல் நடவடிக்கை எடுக்கத் தொடங்கி இருக்கும் முதல்வர், தூய்மை பணியாளர்களின் வயிற்றில் அடிக்கும் தனியார் காண்ட்ராக்டர்களையும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பதே இப்பணியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.