

பேரின்பவாழ்வை பூமியில் விரிப்போம்!
தாயாய்… தாய்க்கும் தாயாய்
தந்தை தனக்கும் தாயாய்…
ஆத்தாவாய் அம்மாவாய் அக்காவாய்
அன்பு மிகக்கொண்ட தங்கையாய்
தாரமாய் தன்மைமிகு மகளாய்
பெருமை சேர்க்கும் பேத்தியாய்
பெண்மையே உண்மையில் உனக்குந்தான்
எத்தனை யெத்தனை இன்பஉறவுகள்!
அன்னையின் இதயத்தைக் காதலிக்காக
கையில் பிடித்துக் கனவேகத்தில்
ஓடியபோது கல்தடுக்கிக் கீழேவிழ
இருந்த அவனிடம் இதயம்புலம்பிற்றாம்
பார்த்துப்… பார்த்து… பார்த்துமகனேவென்று!
அன்பு மகனின் ஆசைநிறைவேற
அன்னைகள் தியாகம் அனைத்தையுமிங்கே
பார்த்து நாமும் பழகியிருக்கிறோம்!
குஷ்டம்கொண்ட குரூர கணவனும்
கணிகையின்மீது காதல் கொண்டதால்
கூடையில் வைத்துத் தலையிலேற்றி
அவள்வீடு சென்ற அருமைமனைவியை
அற்புதமாக வரலாறு விளம்பும்!
பெண்மையின்றி மண்ணில் இன்பம்மட்டுமல்ல
எதுவுமே இல்லையென்று இயம்பலே
முற்றிலும் மெய்மை முழுதாய்உண்மை!
புனிதப் பெண்மையைப் பொருட்டாய்மதிக்காத
ஆணின வர்க்கத்தில் அடியேனும்உறுப்பினனாய்
ஆகியேபோனது அடியேனின் விருப்பன்று!
இன்னொருபிறவி எனக்கும் உண்டென்றால்
அம்மா அக்கா அன்புமனைவி
எடுத்தபிறவியே எனக்கும் வேண்டும்!
பட்டதுயரையும் பழகிய விதத்தையும்
அனுபவித்தே நானும் அறிந்திடவேண்டும்!
இப்புண்ணிய நாளில் புதிதாய்ஓர்சபதம்
ஏற்றிட்டாலது எல்லோர்க்கும் நன்றாம்!
மண்ணில் பிறக்கும் அத்தனைஉயிர்க்கும்
தாய்மையிற் சிறந்த தன்மையன்றி
வேறொன்றில்லை வியனுலகு அறியும்!
தாய்மையும் பெண்மையும் வேறுவேறில்லை
பெண்மையைப்போற்றி தாய்மையை மதிப்போம்!
பேரின்ப வாழ்வை பூமியில்விரிப்போம்!