புத்தக தானம் செய்வோம் வாரீர்!

உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம்!
reading books day
reading books dayImage credit - pixabay.com

லகெங்கும் (அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அயர்லாந்த்) நீங்கலாக, ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி உலக புத்தக தினமாக அனுசரிக்கின்றனர். இதனை உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் என்றும் அழைப்பதுண்டு. ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ), 1995ஆம் வருடம் முதல் இந்த நாளை கொண்டாடி வருகிறது. இந்த நாளை கொண்டாடுவதன் நோக்கம் புத்தகங்கள் வாசிப்பு, நிறைய புத்தகங்கள் வெளியிடுதல், மற்றும் புத்தகங்களுக்கான பதிப்புரிமை ஆகியவற்றை ஊக்குவித்தல். புத்தகங்கள், கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்குமான பாலம். இவற்றை தலை முறைகளை இணைக்கும் பாலம் என்றும் கூறலாம்.

முதன் முதலில் ஸ்பெயின் நாட்டில், 1926ஆம் வருடம் அக்டோபர் 7ஆம் தேதி, புத்தக தினம் கொண்டாடப் பட்டது.. ஸ்பானிஷ் மொழியின் தலை சிறந்த எழுத்தாளரான மிகுவல் டி செர்வாண்டஸ் இந்த நாளில் பிறந்ததாக நம்பப்படுகிறது. அவரை கௌரவிக்கும் வகையில் இந்த நாளைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், இந்த காலம் ஸ்பெயின் நாட்டின் இலையுதிர் காலம். ஆகவே, வசந்த காலத்தில், திறந்த வெளியில் நடப்பதற்கும், புத்தகங்களைப் பார்ப்பதற்கும் இனிமையானதாக இருக்கும் என்று கருதிய ஸ்பெயின் நாட்டு அரசர் அல்போன்சோ, செர்வாண்டஸ் இறந்த நாளான ஏப்ரல் 23, புத்தக தினமாக கொண்டாட ஆணை பிறப்பித்தார்.

1995ஆம் வருடம் உலக புத்தக தினம் கொண்டாட முடிவு செய்த யுனெஸ்கோ, இந்த நாளை சிறந்த நாளாக ஏற்றுக் கொண்டது.. மேலும் பிரபல ஆங்கில நாடக ஆசிரியரும், கவிஞருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் இறந்த நாள் ஏப்ரல் 23. அதைத் தவிர, பிரபல ஸ்பானிஷ் எழுத்தாளர் காரசிலாசோ டி லா வேகா என்பவரின் பிறந்த தினம். அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அயர்லாந்து, உலக புத்தக தினத்தை மார்ச் மாதம் கொண்டாடுகிறார்கள். இந்த நாடுகளில் ஏப்ரல் மாதம் ஈஸ்டர் விடுமுறை வருவதால் கொண்டாட்டங்கள் பாதிக்கப்படும் என்ற அச்சத்தின் காரணமாக.

2001ஆம் வருடம் உலக புத்தக மூலதனம் (அல்லது) தலைநகரம் என்ற புது முயற்சியை யுனெஸ்கோ ஆரம்பித்தது. அதன்படி, ஒவ்வொரு வருடமும் யுனெஸ்கோ, உலகில் ஒரு நகரை தலைநகரம் என்று அறிவிக்கும். அவ்வாறு, அங்கீகரிக்கப்பட்ட நகரம் ஏப்ரல் 23 முதல் ஒரு வருடத்திற்கு, எல்லா வயதினருக்கும், பிரிவினர்க்கும், வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இதற்கு யுனெஸ்கோ நிதி உதவி அளிப்பதில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு அதனுடைய சொந்த முயற்சியால், வருடந்தோறும் நிகழ்ச்சிகள் நடத்தி புத்தகங்களின் முக்கியத்துவத்தை தன்னுடைய மக்களிடையே மற்றும் எல்லைக்கு அப்பாலும் கொண்டு சேர்க்க வேண்டும்.

reading books day
reading books day Image credit - pixabay.com

உலக புத்தக மூலதனமாக அறிவிக்கப்பட விரும்பும் நாடு, அந்த நாட்டின் எந்த நகரத்தை பரிந்துரைக்க வேண்டும் என்பதையும், அந்த ஒரு வருடம் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதையும் யுனெஸ்கோவில் இதற்கென அமைக்கப்பட்ட குழுவிற்கு விளக்க வேண்டும். இந்த ஆலோசனைக் குழுவில், ஐரோப்பிய மற்றும் சர்வதேச புத்தக விற்பனையாளர்கள் கூட்டமைப்பு (EIBF), சர்வதேச ஆசிரியர் மன்றம் (IAF), சர்வதேச நூலக சங்கங்களின் கூட்டமைப்பு (IFLA), சர்வதேச வெளியீட்டாளர்கள் சங்கம் (IPA), மற்றும் யுனெஸ்கோ பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்றனர்.

இதன்படி, 2001ஆம் வருடம் மாட்ரிட் நகரம் முதல் தலைநகராக அறிவிக்கப்பட்டது. 2003ஆம் வருடம் புது டெல்லி தலைநகராகியது. 2024ஆம் வருடத்திற்கு பிரான்சு நாட்டின் ஸ்ட்ராஸ்பேர்க் தலைநகரமாக அங்கீகரம் செய்யப்பட்டுள்ளது.

புத்தகங்கள் மற்றும் வாசிப்பினால் பெறப்படுகின்ற இன்பத்தை மேம்படுத்துவதற்காக யுனெஸ்கோ, “எல்லைகள் இல்லாத நூலகங்கள்” என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது உலகில் போரினாலும், மற்றும் பல காரணங்களினாலும் புத்தகம் வாங்க முடியாத சூழ்நிலையில் இருக்கின்ற பலதரப்பட்ட மக்களுக்கு புத்தகங்கள் சென்று சேருவதற்கு வழி செய்கிறது. இதனால், மக்களும் கல்வி, கலாச்சாரம் போன்றவற்றை புத்தகங்களினால் அறிந்து கொள்வதற்கு வழி செய்கிறது.

இதையும் படியுங்கள்:
முட்டைக்கோஸ் சாற்றில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்!
reading books day

விருப்பம் உள்ளவர்கள் யுனெஸ்கோ வளாகத்தில் அதற்கான ஏற்பாடு செய்யப்பட்ட  பெட்டகத்தில் புத்தகங்களைப் போடலாம்.  அனைத்து மொழியிலும் நல்ல நிலையில் உள்ள புத்தகங்களை அளிக்கலாம். பார்கோட் பொருத்தப்பட்டுள்ள புத்தகங்கள் இருந்தால் நல்லது. குழந்தைகள் புத்தகங்கள், என்சைக்ளோபீடியா, அறிவியல் புத்தகங்கள் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. இங்கு சேகரிக்கப்பட்ட புத்தகங்கள், பெருமளவு வசதியில்லாத நூலகங்கள், பள்ளிகள் ஆகியவற்றிற்கு அனுப்பி வைக்கப்படும். ஒரு சில புத்தகங்கள், மறு விற்பனை செய்யப்பட்டு, அதனால் திரட்டப்படும் நிதி வசதியற்ற அமைப்புகள் புது புத்தகங்கள் வாங்க நன் கொடையாக அளிக்கப்படும்.

ஒரு நல்ல புத்தகம் மனிதனின் நண்பன் என்பார்கள். நாமும், நம்மால் இயன்றவரை புத்தகங்கள் வாங்கி பள்ளி நூலகங்கள் அல்லது பொது நூலகங்களுக்கு அளிக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com