உலக மூளைக் கட்டி தினம் – ஜூன் 08 மூளையில் கேன்சர் கட்டிகள் – அறிகுறிகள் என்ன?

World Brain Tumour Day - June 08
brain tumor...
brain tumor...

ஜூன் மாதம் 8ம் தேதி ‘உலக மூளைக் கட்டி தினம்’ (World Brain Tumour Day) . இது ஏன் அனுசரிக்கப்படுகிறது? மூளைக் கட்டிகள் தோன்ற காரணங்கள் என்ன? சிகிச்சை முறைகள் என்ன? அலசுகிறது இந்த நேர்காணல்...

மூளையில் உருவாகும் கட்டிகளுக்கான அறிகுறிகள் என்ன, ஆரம்பத்திலேயே அவற்றை கண்டறிந்து, சிகிச்சை பெறுவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு வரும் பிரச்னைகள், குடும்பத்தினரின் ஆதரவு, இந்த சிகிச்சையில் நவீன மருத்துவம் இவற்றைப் பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்குத்தான் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

சென்னை அப்போலோ மருத்துவமனையின் மூத்த மருத்துவர், நரம்பியல் துறை நிபுணர் டாக்டர் வ.சதிஷ் குமார் அவர்களைப் பேட்டி கண்டோம்.

(Dr Sathish Kumar V, Head & Senior Consultant Neurophysician, Apollo Speciality Hospitals OMR, Perungudi)

Dr Sathish Kumar
Dr Sathish Kumar

நேர்காணலிலிருந்து:-

மூளைக் கட்டி (brain tumor) வரக் காரணம் என்ன டாக்டர்?

மூளையில் இருக்கும் செல்களின் அபரிமிதமான வளர்ச்சி, கட்டியாகிறது. நரம்பு மண்டலத்தை சப்போர்ட் செய்யும் க்ளையல் செல்கள் (Glial cells),மூளைத் திசுக்கள், அல்லது அருகில் இருப்பவை, நரம்புகள், பிட்யூட்டரி சுரப்பி, மூளையைச் சுற்றி இருக்கும் படலம் (membrane) எங்கு வேண்டுமானாலும் இந்தக் கட்டிகள் வரலாம்.

இத்தகைய கட்டிகள், உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாத பினைன் (Benign) மற்றும் அதிவேகமாக வளர்ந்து, உயிருக்கு அபாயம் தரும் மேலிக்னன்ட் (Malignant) என்று பொதுவாக இரண்டு பிரிவுகளில் அடங்கும். மெடாஸ்டேடிக் (Metastatic) என்பது, உடலின் மற்ற பகுதிகளில் உருவான கேன்சர், மூளைக்குள் பரவி, முற்றிய நிலையில் இருப்பது.

மூளைக் கட்டிகள், எந்த வயதில், யாருக்கெல்லாம் வர வாய்ப்புள்ளது டாக்டர்? பரம்பரை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பினால் வருமா?

இரண்டு வயது முதல் 80 வயதைக் கடந்தவர் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். பொதுவாக பரம்பரை வழியாக வருவதில்லை என்றாலும் சில மரபணுச் சிதைவு (DNA mutation) குழந்தைப் பருவத்திலேயே ஏற்பட வாய்ப்பு உண்டு.

கதிர்வீச்சுக்கு( Exposure to radiation) ஆளானவர்களுக்கு மூளை கட்டிகள் வரலாம்.

ஹிரோஷிமா குண்டு வீச்சு, 1986ல் சோவியத் யூனியனில் நிகழ்ந்த செர்னோபிள் அணு உலை விபத்து போன்றவற்றில் பலரும் மூளைக் கட்டிகளால் பாதிக்கப்பட்டனர்.

பெண்களை எப்படி பாதிக்கும் டாக்டர்?

பெண்களைப் பொறுத்தவரை, பிட்யூட்டரியில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக மூளைக் கட்டி வரலாம் அல்லது பிட்யூட்டரியே கூட கட்டியாகலாம். தாமதமாக பருவம் அடைந்தவர்கள், பீரியட் ஒழுங்காக இல்லாமல் குறைவாகவும் இருக்கும். பெண்கள் போன்றோருக்கு வர அதிக வாய்ப்பு உண்டு.

பிட்யூட்டரி பாதிப்பினால், ப்ரோலேக்டின் (Prolactin) தூண்டப்பட்டு, குழந்தை இல்லாத சமயத்திலும் மார்பகங்களில் பால் சுரப்பு ஏற்படும். அப்படி நேர்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். கர்ப்பமாக இருக்கும் காலத்தில் மூளைக் கட்டி ஏற்பட்டால் ஃபிட்ஸ் எனப்படும் வலிப்பு வர வாய்ப்பு அதிகம்.

செல்போன் உபயோகிப்பதால் பாதிப்பு வருமா?

மிகக் குறைந்த அளவுதான் என்றாலும், மருத்துவத் துறையின் ஆய்வுகள்படி, செல்போன் அதிகம் உபயோகித்தல் ஓரளவு ஆபத்துதான். பூச்சிமருந்து, பெட்ரோலியம் போன்ற ரசாயனப் பொருட்கள், பவர் மின் சாதனங்கள் அருகே வேலை செய்தல் இவற்றாலும் மூளையில் கட்டிகள் வர வாய்ப்பு உண்டு. சில வைரஸ் தாக்கத்தாலும் இந்த ரிஸ்க் உண்டு.

அனியூரிசம் (Aneurysm), ஸ்ட்ரோக், இவை எவ்வாறு வேறுபடுகின்றன? சிகிச்சைகளும் வேறா டாக்டர்?

பொதுவாக ரத்தக்குழாய்களுக்குள் மூன்று லேயர்கள் (உள்புறம், நடு, வெளிப்புறம்) இருக்கும். இதில் நடுலேயர்களில் சில காரணங்களால் வீக்கம் போல் ஏற்பட்டு வெடித்து ரத்தம் வெளியேறும் நிலைதான் அனியூரிசம். இது எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம். அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தப் படுகிறது.

சீரான உணவை உட்கொள்வதன் மூலமும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலமும், புகைபிடித்தல் மற்றும் பிற போதைப்பொருள்களை முற்றிலும் தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வது அனியூரிசிம் அபாயத்தைக் குறைக்கும்.

ரத்தக் குழாய்களில் திடீரென்று அடைப்பு, அல்லது வெடிப்பினால் ஸ்ட்ரோக் வருகிறது. நாக்குக் குழறல், கைகால்கள் உணர்வின்றிப் போதல் இவை தோன்றும். உடனடியாக மருத்துவம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பக்க வாதம் பாதிப்பு வரலாம்.

இதையும் படியுங்கள்:
விழித்திருந்தால் வெற்றி நிச்சயம்!
brain tumor...

மூளையில் கேன்சர் கட்டிகள் இருந்தால் என்ன அறிகுறிகள்?

கடுமையான, தொடர்ச்சியான தலைவலி, (சிலர் மைக்ரேன் தலைவலி என்று மத்திரை போட்டுக் கொள்வார்கள்) ஞாபக மறதி, எரிச்சல், உடற்சோர்வு, திடீர் வாந்தி, தலைச் சுற்றல் , வலிப்பு, பார்வை மங்குதல், கேட்கும் திறன் குறைதல், நடத்தையில் மாற்றம் போன்றவை அறிகுறிகள்.

முதல், இரண்டாம் ஸ்டேஜ் (கிரேட் ஒன்று மற்றும் இரண்டு) எனும்போது அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். மூன்றாம் நான்காம் நிலைகளில், ரேடியேஷன், கீமோதெரபி தேவைப்படும். மறுபடியும் கட்டிகள் வரவும் வாய்ப்பு உண்டு. வெளியே தெரியாமலேயே கட்டிகள் வளர்ந்திருக்க கூடும் என்பதால், இதற்கான அறிகுறிகள் திடீரென தோன்றலாம்.

மற்ற நல்ல செல்களை பாதிக்காமல் ரேடியேஷன் செய்ய முடியுமா டாக்டர்?

அனேகமாக நவீன மருத்துவத்தில் நல்ல செல்களை பாதிக்காமல் ரேடியேஷன் தரப் படுகிறது. குறிப்பாக, அப்போலோவில் ப்ரோட்டான் ரேடியேஷன் என்னும் நவீன முறையில் குறிப்பிட்ட கட்டி செல்கள் மட்டுமே அழிக்கப் படுகின்றன. ஆசியாவிலேயே இந்த நவீன முறை சென்னை அப்போலோவில் மட்டுமே தரப்படுகிறது.

பெருமிதத்தோடு சொன்ன டாக்டர், தொடர்ந்து, எந்த உபாதை என்றாலும் முதலிலேயே மருத்துவரை அணுகி ஆலோசிப்பது நல்லது. அலட்சியப்படுத்தவும் வேண்டாம். அதற்காக அறிகுறிகள் இருந்தாலே, தனக்கு ஏதோ பெரிய நோய் வந்து விட்டதாக அஞ்சவும் வேண்டாம்” என்றார்.

எச்சரிக்கையும், அதே நேரம் நிறைய நம்பிக்கையும் தருகிறார் டாக்டர். சதீஷ் குமார்.

நன்றி டாக்டர். சதிஷ் குமார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com