

தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து கொண்டே சென்றாலும், மக்களுக்கு தங்கத்தின் மீதான ஈர்ப்பு மட்டும் குறையவில்லை. குறிப்பாக, இந்தியக் குடும்பங்களில் சுபநிகழ்ச்சிகள், பண்டிகைகள் மற்றும் பாரம்பரியச் சடங்குகளில் தங்க நகைகள் இன்றியமையாத அங்கமாகவே மாறிவிட்டது. மேலும் அவசரத் தேவைகளின் போது கை கொடுக்கும் மிகச்சிறந்த பாதுகாப்பான முதலீடாகவும், பணவீக்கத்தை எதிர்கொள்ளும் சிறந்த சேமிப்பாகவும் தங்கம் கருதப்படுகிறது.
தங்கத்தை வாங்கும்போது அதன் தூய்மைத்தன்மை, பயன்பாடு மற்றும் மதிப்பு குறித்து அறிந்துகொள்வது மிகவும் அவசியமாகும். அதில் மிக முக்கியமாக, தங்கத்தின் தரத்தைப் பிரித்துக் காட்டும் 22 காரட் மற்றும் 24 காரட் தங்கத்திற்கு இடையேயான வித்தியாசங்களைப் பற்றி விரிவாகப் புரிந்துகொள்வது, நமது முதலீட்டு முடிவுகளுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.
24 காரட் தங்கம் என்றால் என்ன?
இது எந்தவிதக் கலப்படமும் இல்லாத, 99.9% மிகத் தூய்மையான தங்கத்தைக் குறிக்கிறது. பிற உலோகங்கள் எதுவும் இதில் கலக்கப்படுவதில்லை. 24 காரட் தங்கம் மிகவும் அடர்த்தியான, பிரகாசமான மஞ்சள் நிறத்தில் இருக்கும். இது மிகவும் மென்மையானது என்பதால் எளிதில் வளையும், உடையும் அல்லது கீறல்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
இதன் மென்மைத்தன்மை காரணமாக 24 காரட் தங்கத்தில் நகைகள் செய்து அணிய முடியாது. எனவே, இது முதலீட்டுப் பொருளாக மட்டுமே பயன்படுகிறது. முக்கியமாக தங்கக் கட்டிகள், தங்க நாணயங்கள் மற்றும் தங்க பிஸ்கட்டுகள் செய்யப் பயன்படுகிறது.
22 காரட் தங்கம் என்றால் என்ன?
இது 22 பங்கு தூய்மையான தங்கமும், 2 பங்கு பிற உலோகங்களும் கலந்த கலவையாகும். அதாவது, இதில் 91.6% தூய்மையான தங்கமும், 8.4% தாமிரம், வெள்ளி, துத்தநாகம் அல்லது நிக்கல் போன்ற உலோகங்களும் கலந்திருக்கும். இதுவும் அழகான தங்க நிறத்தில் இருக்கும். இருப்பினும், பிற உலோகங்கள் கலக்கப்பட்டிருப்பதால் 24 காரட் தங்கத்தை விட சற்றே குறைவான பிரகாசத்துடன் தோற்றமளிக்கும்.
தாமிரம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்கள் சேர்க்கப்படுவதால் 22 காரட் தங்கம் வலிமையாக இருக்கும்; தேய்மானத்தைத் தாங்கி நீண்ட காலம் உழைக்கும். அணிகலன்கள், நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட நகைகள் செய்யப் பயன்படுகிறது. திருமண நகைகள், சங்கிலிகள் மற்றும் ஆபரணங்கள் செய்ய 22 காரட் தங்கமே பயன்படுத்தப்படுகிறது.
22 காரட் vs 24 காரட்: எதை எப்படித் தேர்ந்தெடுப்பது?
24 காரட்:
இதன் விலை 22 காரட்டை விட அதிகம். ஆனால் தங்கக் கட்டிகள் அல்லது நாணயங்களாக வாங்கி மறுவிற்பனை செய்யும்போது, செய்கூலி மற்றும் சேதாரக் கழிவுகள் மிகக் குறைவாகவே இருக்கும். எனவே, தங்கத்தில் நீண்டகால முதலீடு செய்ய நினைப்பவர்கள் 24 காரட் தங்க நாணயங்கள் அல்லது தங்கக் கட்டிகளைத் தேர்ந்தெடுப்பது மிகச் சிறந்த முடிவாகும்.
22 காரட்:
24 காரட்டுடன் ஒப்பிடும்போது இதன் விலை சற்றே குறைவு. ஆனால், இதை நகைகளாக வாங்கி மறுவிற்பனை செய்யும்போது செய்கூலி, சேதாரம் போன்றவை கழிக்கப்பட்ட பின்னரே நமக்கான பணம் கிடைக்கும். எனினும், அன்றாடப் பயன்பாட்டிற்கும், அணிந்துகொள்ளும் ஆபரணங்களுக்கும் 22 காரட் தங்கமே மிகவும் உறுதியானது மற்றும் ஏற்றது.
டிஜிட்டல் முதலீடுகள்:
முதலீட்டு நோக்கத்திற்காக 24 காரட் தங்கம் வாங்க விரும்புபவர்கள், திருட்டு மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகள் ஏதுமின்றி இருக்க டிஜிட்டல் கோல்டு, கோல்ட் ஈ.டி.எஃப் அல்லது அரசு வெளியிடும் தங்கப் பத்திரங்கள் ஆகிய வழிகளிலும் பாதுகாப்பாக முதலீடு செய்யலாம்.
மொத்தத்தில் 22 காரட் மற்றும் 24 காரட் ஆகிய இரண்டுமே மதிப்புமிக்கவைதான். எனினும், உங்களின் முதன்மைத் தேவை ஆபரணமா அல்லது முதலீடா என்பதை நிபுணர்களின் ஆலோசனை பேரில் சரியாக உணர்ந்து, அதற்கு ஏற்பப் பொருத்தமான காரட் தங்கத்தைத் தேர்ந்தெடுப்பதே புத்திசாலித்தனமான அணுகுமுறையாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: