மாட்டு பண்ணை நடத்தி 50 லட்சம் வருமானமா? சாதிக்கும் பெண்மணிகள்!
தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என எண்ணுபவர்களுக்கு படிப்பு ஒரு தடை கிடையாது என்பதற்கு உதாரணமாக மாறி இருக்கின்றனர் இரண்டு பெண்கள். ஒருவர் கர்நாடகா மாநிலத்தையும் மற்றொருவர் கேரளாவையும் சேர்ந்தவர் ஆவார்.
அண்மையில் தென்னக பால் உற்பத்தியாளர் மாநாடு நடைபெற்றது. இதில் கர்நாடக மாநிலத்தின் சிறந்த பால் விவசாயி என்ற பட்டத்தை பெற்றார் 47 வயதான மங்களம்மா. இவர் பால் விற்பனை செய்வதன் மூலம் மட்டும் ஒரு ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய் வருமானமாக ஈட்டுகிறார். கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் தான் மங்களம்மா.
இவர் முப்பது மாடுகள் மற்றும் இரண்டு எருதுகளை வைத்துக்கொண்டு கடந்த ஓராண்டில் மட்டும் ஒரு லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்திருக்கிறார். இதன் மூலம் அவருக்கு கிடைத்த வருமானம் 30 லட்சம் ரூபாய் ஆகும்.
20 ஆண்டுகளுக்கு முன்னர் மங்களம்மாவும் அவருடைய கணவரும் இணைந்து மாடு வளர்க்கத் தொடங்கினர்.அதன் மூலம் பால் விற்பனை செய்யலாம் என முடிவெடுத்தார்கள். இதற்காக ஏற்கனவே மாட்டுப் பண்ணை வைத்திருக்கும் நபர்களை சந்தித்து, எப்படி இதனை செயல்படுத்த வேண்டும் என்ற அறிவை பெற்றுக் கொண்டார்கள். தொடக்கத்தில் தங்களிடம் போதிய பணம் இல்லாததால் தங்களிடம் இருந்து சிறிய நிலத்தில் ஒன்று இரண்டு மாடுகளை வாங்கி வைத்து வளர்க்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த மாடுகளுக்கு சத்தான தீவனத்தை மட்டுமே வழங்க வேண்டும் என முடிவு செய்த அவர்கள் மக்காச்சோளம் போன்ற தானியங்கள், எண்ணெய் கேக் போன்றவற்றை உணவாக வழங்கியுள்ளனர். இது பசுக்கள் ஆரோக்கியமாக இருப்பதையும் தரமான பால் உற்பத்தி செய்யப்படுவதையும் உறுதி செய்கிறது எனக் கூறும் மங்களம்மா இதுதான் தங்கள் வெற்றியின் ரகசியம் எனவும் தெரிவிக்கிறார்.
இவர்களுடைய பால் பண்ணையில் ஒரு நாளைக்கு 300 லிட்டர் பால் உற்பத்தியாகிறது. தற்போது இவர்களுடைய பால் பண்ணை பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மங்களம்மாவின் பிள்ளைகளும் இந்த பால் பண்ணையிலேயே தற்போது பணி புரிகின்றனர். இவர் தன்னுடைய கிராமத்தில் பலருக்கும் வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி தந்துள்ளார்.
இதே போல கேரள மாநிலத்தின் சிறந்த பால் விவசாயி என்ற பட்டத்தை ஒரு பெண் தான் தட்டிச் சென்றார். கோட்டயத்தை சேர்ந்த பெண்மணி விது ராஜீவ், கேரள மாநிலத்தின் சிறந்த பால் உற்பத்தியாளர் என்ற பட்டத்தை பெற்றார். இவர் கடந்த ஆண்டு ஒரு லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்து 50 லட்சம் ரூபாயை வருமானமாக ஈட்டி இருக்கிறார். இவர் கேரள மாநில அரசின் பால் மேம்பாட்டு கழகத்திற்கு பால் உற்பத்தி செய்து வழங்குகிறார்.
தன்னுடைய பால் பண்ணையில் அறிவியல் ரீதியிலான மேலாண்மை பராமரிப்புகள் நடைமுறையில் இருக்கின்றன என கூறும் அவர், மாடுகளுக்கு தீவனம் மற்றும் தண்ணீர் உள்ளிட்டவை நவீன முறை பண்ணையில் அளிக்கப்படுகிறது எனவும் கூறுகிறார். வேலையில்லை எதுவும் இல்லை என்று புலம்புவர்கள் இவர்களை முன்னுதாரணமாக கொண்டு வாழ்க்கையில் முன்னேறலாம்.