

அழகு என்பது பெண்ணின் புறத்தோற்றம் சார்ந்தது; ஆனால் அறிவு என்பது அவளது ஆளுமை சார்ந்த விஷயமாகும். வயதாகும்போது புற அழகு மங்கிவிடும், ஆனால் ஒரு பெண்ணின் புத்திசாலித்தனம் சமூகத்தில் அவளுக்கான மரியாதையை எப்போதும் பெற்றுத்தரும். ஒரு பெண் தன்னைச் சிறந்த ஆளுமையாகச் செதுக்கிக் கொள்ளத் தேவையான எட்டு நவீன ஃபார்முலாக்களை (strong-woman-personality) இந்தப் பதிவில் பார்ப்போம்:
1. அறிவுசார் தேடல்: புத்திசாலிப் பெண்ணின் முதல் ஆயுதம் அவளது கேள்வி கேட்கும் திறனாகும். யார், என்ன சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அதன் பின்னணியில் உள்ள உட்பொருளைப் புரிந்துகொள்ள வேண்டும். தெரியாத ஒன்றைக் கேட்டுத் தெரிந்துகொள்வதில் தயக்கம் காட்டக்கூடாது; அப்போதுதான் அறிவின் அடுத்த நிலைக்கு ஒரு பெண்ணால் செல்ல முடியும்.
2. நிதானமாக முடிவெடுத்தல்: உணர்ச்சிகளின் பிடியில் சிக்கி எடுக்கப்படும் முடிவுகள் பெரும்பாலும் பலவீனமானவை. சவாலான, சிக்கலான நேரங்களில் கோபத்திற்கோ, ஆத்திரத்திற்கோ, பதற்றத்திற்கோ இடம் கொடுக்காமல், நிதானமாகச் சிந்தித்து முடிவெடுப்பதுதான் புத்திசாலித்தனம். இதுவே ஒரு பெண்ணின் மனமுதிர்ச்சியைக் காட்டும். உணர்ச்சிகளைச் சரியாகக் கையாளத் தெரிந்த பெண்ணே, தன் வாழ்க்கையை ஆளும் திறனைப் பெறுகிறாள்.
3. புத்தக வாசிப்பு: வாசிப்பது வெறும் பொழுதுபோக்கு விஷயமல்ல; அது அறிவை மெருகேற்றும் ஒரு பயிற்சியாகும். தினமும் சில பக்கங்களாவது வாசிப்பது ஒரு பெண்ணின் சிந்தனைத் திறனை வளர்க்கும். உலக நடப்புகள் முதல் தொழில்நுட்பம் வரை ஒரு பெண் தன்னை புதுப்பித்துக்கொள்வது, அவளை எக்காலத்திலும் தன்னம்பிக்கை மிக்க பெண்ணாக மிளிர வைக்கும்.
4. எல்லைகளை அமைத்தல்: ஒரு பெண் தனக்கான எல்லைகளை அமைத்துக்கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். யார் என்ன சொன்னாலும் அதற்கு 'சரி' என்று தலையாட்டுவது அவளை நல்லவளாகக் காட்டலாம்; ஆனால், அது அவளுடைய தனிப்பட்ட வளர்ச்சியைப் பாதிக்கும். தன்னுடைய நேரத்திற்கும் உழைப்பிற்கும் மரியாதையளித்து, தேவையற்ற கோரிக்கைகளுக்குக் கண்ணியமான முறையில் 'முடியாது' என்று சொல்லப் பழகுவது ஒரு வலுவான ஆளுமையின் அடையாளமாகும்.
5. நேரத்தை மதித்தல்: வெற்றிகரமான பெண்கள் நேரத்தைத் தேவையில்லாமல் வீணடிப்பதில்லை. அவர்கள் நேரத்தை ஒரு முதலீடாகப் பார்க்கிறார்கள். அன்றாட வேலைகளை முன்னுரிமை அடிப்படையில் பிரித்துச் செயல்படுவது மன அழுத்தத்தைக் குறைக்கும். தள்ளிப்போடும் பழக்கத்தை முற்றிலும் தவிர்த்து, நேரத்தைத் திட்டமிட்டுப் பயன்படுத்துவது ஒரு பெண்ணை மற்றவர்களிடமிருந்து தனித்துக் காட்டும்.
6. கூர்ந்து கவனிக்கும் ஆற்றல்: சிறந்த பேச்சாளராக இருப்பதைவிட, சிறந்த கவனிப்பாளராக இருப்பது அதிக ஆற்றலைப் பெற்றுத்தரும். எந்த ஒரு சூழலிலும் அமைதியாக இருந்து தன்னைச் சுற்றியுள்ளவர்களைக் கவனிக்கும்போது, மனிதர்களின் இயல்பை ஒரு பெண்ணால் எளிதில் கணிக்க முடியும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்து, தேவையான இடங்களில் மட்டும் அழுத்தமாகப் பேசுவதுதான் புத்திசாலித்தனம்.
7. பொருளாதாரத் தற்சார்பு: கணவராகவே இருந்தாலும் அவரைச் சார்ந்து இருக்காமல், தன் காலில் சுயமாக நின்று பொருள் ஈட்டுவது ஒரு பெண்ணிற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். நிதி மேலாண்மை என்பது பெண்ணுக்கு அடிப்படைத் தேவை. சம்பாதிக்கும் பணத்தைச் சரியாகத் திட்டமிட்டுச் சேமிப்பதும் முதலீடு செய்வதும் எதிர்காலப் பாதுகாப்பை உறுதிசெய்யும். பொருளாதார ரீதியாக ஒரு பெண் சுதந்திரமாக இருக்கும்போது, அவளுடைய முடிவுகளுக்குக் குடும்பத்தில் மட்டுமல்ல, சமூகத்திலும் அதிக முக்கியத்துவம் கிடைக்கும்.
8. தோல்வி கண்டு அஞ்சாமை: தான் செய்யும் முயற்சிகளில் தோல்வியடைந்துவிட்டால் அஞ்சாமலும், துவளாமலும், வருந்தாமலும் இருக்க வேண்டும். தவறுகள் என்பவை கற்றலுக்கான படிக்கட்டுகள். தோல்வியிலிருந்து கிடைக்கும் பாடத்தை அனுபவமாக எடுத்துக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகரும் புத்திசாலிப் பெண்கள் எக்காலத்திலும் தோற்பதில்லை.
இந்த எட்டுப் பண்புகளும் ஒரு பெண்ணை வெறும் புத்திசாலியாக மட்டுமல்லாமல், ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் தலைவராகவும் மாற்றும் வல்லமை கொண்டவை.