உடன் பிறந்தவர்களுடன் போட்டி என்பது பொதுவான குணம்தான். ஆனால் அது பொறாமையாக மாறிவிடக் கூடாது. இந்த போட்டி மனப்பான்மை பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது.
ஒருவரை மட்டும் பிடிப்பது
ஒரு குழந்தையிடம் மட்டும் அன்பாக நடந்துகொண்டு, மற்றொரு குழந்தையிடம் அன்பு காட்டாமல் இருப்பதென்பது சில பெற்றோரின் மனப்பான்மையாக இருக்கிறது. குறிப்பாக சொல்பேச்சு கேட்கும் குழந்தையிடம் அவர்கள் அதிகளவில் அன்பு காட்டுவார்கள்.
ஆனால், சொல்பேச்சு கேட்காத குழந்தைகளை திட்டிக்கொண்டே இருப்பார்கள். இந்த ஒரு விஷயம் அந்த இரு குழந்தைகளிடம் போட்டி மற்றும் பொறாமை குணத்தை உருவாக்கும். இது ஒரு அளவுக்கு இருந்தால் பிரச்னைகள் ஏற்படாது. ஆனால் அளவை மிஞ்சும்போது கஷ்டம்தான்.
கவனம் ஈர்ப்பது
குழந்தைகள் தங்கள் பெற்றோரின் கவனத்தை ஈர்க்கவேண்டும் என்று நினைப்பார்கள். அதற்காக அவர்கள் பெற்றோரின் கவனத்தை ஈர்க்க சில விஷயங்களைச் செய்வார்கள். குறிப்பாக ஒரு குழந்தை பெற்றோரிடம் அதிக பாராட்டுக்களை பெறவேண்டும் என்பதற்காக சில விஷயங்களைச் செய்வார்கள்.
வயது வித்தியாசம்
உடன் பிறந்தவர்களுடன் உள்ள வயது வித்தியாசம், அவர்களின் ஆர்வம், செயல்பாடுகள் மற்றும் அவர்களுக்கு உரிய பொறுப்புகள் என அனைத்திலும் வேறுபாடு இருக்கும். இதனாலும் அவர்களிடையே புரிதலின்மை மற்றும் போட்டி நிலவும்.
குறைவான மூலதனம்
வீட்டில் குறைவான விளையாட்டு பொருட்களே இருக்கும் அல்லது இருவருக்கான இடமும் குறைவாக இருக்கும். இதுபோன்ற தட்டுப்பாடுகளும் உடன் பிறந்தவர்களிடம் சண்டை, போட்டி, பொறாமையை ஏற்படுத்தும்.
தனிப்பட்ட வேறுபாடுகள்
உடன்பிறந்தவர்களே ஆனாலும் அவர்கள் இருவரிடமும், தனிப்பட்ட வேறுபாடுகள் எண்ணற்றவை இருக்கும். இதனாலும் அவர்களிடையே போட்டி, சண்டை மனப்பான்மை ஏற்படும். குறிப்பாக உடன்பிறந்தவர்கள் இருவரின் விருப்பமும் வெவ்வேறு என்றால், கேட்கவே வேண்டாம். அவர்களிடையே சண்டைதான் அதிகம் இருக்கும்.
பெற்றோரின் எதிர்பார்ப்பு
பெற்றோர், கல்வி, விளையாட்டு, சமூக சாதனைகள் என அனைத்திலும் அதிகம் எதிர்பார்த்தால், அதுவும் உடன் பிறந்தவர்களிடம் போட்டி, பொறாமையை ஏற்படுத்தும். இதனால் அவர்களின் உறவும் பாதிக்கப்படும். ஏனெனில், ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு திறமை இருக்கும். எனவே அவற்றில்தான் அவர்கள் கவனம் செலுத்த அறிவுறுத்தப் படவேண்டும். இல்லாவிட்டால் கஷ்டம்தான்.
குடும்பத்தில் அவர்களின் அங்கம்
சில நேரம் குடும்பங்களில், அவர்கள் வகிக்கும் அங்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படும். இது தலைமுறை தலைமுறையாக வரும். இதனால் உடன்பிறந்தவர்கள் மனஅழுத்தத்துக்கு ஆளாக நேரிடும்.
இந்த முக்கிய இடங்களை அவர்கள் ஏற்க முடியாமல் அல்லது அதிகப்படியாக செய்யும்போது அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்திய சமூகத்தில் மூத்த குழந்தைகளுக்கு அதிக பொறுப்புகள் இருக்கும்.
குடும்ப முறையில் மாற்றம்
வழக்கமான குடும்ப முறை என்பது, தாய், தந்தை மற்றும் குழந்தைகள் சேர்ந்து வாழ்வது ஆகும். ஆனால் அதில் மாற்றம் என்பது ஏற்பட்டுவிட்டால், அதாவது விவாகரத்து அல்லது மறுமணம் அல்லது மேலும் ஒரு குழந்தை பிறப்பது என இருந்தால், அதுவும் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
எனவே குழந்தைகள் மாற்றத்தை ஏற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்படுவதும், உடன்பிறந்தவர்களுடன் சச்சரவு ஏற்பட காரணமாகிறது.
உடன் பிறந்தவர்களுடனான உறவு சுமூகமாக இல்லாவிட்டாலும், சண்டை சச்சரவின்றி அமைய வேண்டும் என்பதை உறுதிசெய்யவேண்டியது பெற்றோரின் கடமையாக உள்ளது.