கவிதை : 80களில் தீபாவளி எப்படி இருந்தது? நினைவுகளும் நிதர்சனமும்...

80-களில் பொன்னான நினைவுகளுடன் கூடிய பண்டிகை கொண்டாட்டம் மற்றும் பெண்களின் மறுக்கப்பட்ட தீபாவளி மகிழ்ச்சி.
80களில் தீபாவளி - 80s Diwali in Tamil Nadu
80களில் தீபாவளி - 80s Diwali in Tamil NaduImage credit: Gemini
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 
MM strip
MM strip

- ச.சிவபிரகாஷ்

நேற்றைய

புலர்வுகளை போலத்தான்…

இன்றும் என்றும்.

காலை வேளையில்

என் துயில் கலைக்கவே

துவண்டு விடும்

வீட்டினர்.

அதுவே

இல்லாமல்…

இன்று மட்டும் (!)

எதிர்வீட்டு சரவெடி சத்தம்

சரளமென எழுப்பி

சாதித்தது.

கணபதி செட்டியார் செக்கில் வந்த

நல்லெண்ணெய்யும்,

விநாயகா மாவு மில்லில்,

அரைப்பட்ட பயிர் பொருட்களால் ஆன,

பெண்ணாகரம் சீயக்காயும்.

என் தலை தாங்கி வாசமும் தோய்த்து

வசீகரம் ஆனது.

நற்குளியல் கண்ட தேகமது

ஈரம் துவட்டி

அப்பா வாங்கி தந்த நவீன ஆடையை

புகுத்திக்கொண்டது.

நல்ல நாள்

மட்டுமா?

நித்தம் பார்ப்பேன்

பரமசிவனை

பள்ளிக்கு செல்லும்

காலை

முதலே…

காலம் முதலே.

காத்திர வையாமல்

காட்சியும் தருவார்.

கோயில் கருவறையிலிருந்து.

அப்படி தான்…

அப்படியே தான்

இருப்பாரென

இயல்பாய் சென்றேன்

இன்றும்.

வழக்கத்துக்கு மாறான,

பெருங்கூட்டம்.

அங்கே

விரைவு தரிசனம் காண

காந்தியார் நோட்டு நூறாம்

காத்திருப்புக்கு காசில்லை என்றது

நிர்வாகம்

பக்திக்கும்(!)

விலை கொடுக்க மனமில்லை.

பிடிவாதமாய் பிரகாரம் மட்டும்

சுற்றி வந்து நடக்கலானேன்.

நாளைக்கும்

என்னை பார்க்காமல்

போய் விடுவாரா என்ன

அந்த ஈசன்?

பஜார் வீதி

பட்டாசுகள், பாதிக்கு மேல் வெடித்தது.

80களில் தீபாவளி - 80s Diwali in Tamil Nadu
80களில் தீபாவளி - 80s Diwali in Tamil NaduImage credit: Gemini

சமையல் அறையிலிருந்த அம்மா

நான்கு நாட்களாக பலகாரம்,

பலசெய்தும்

சுடச்சுட நெய் தோசையும்

இட்லி, வடைகறியும்

செய்துக்கொடுத்தார்

அவ்வேளை.

தொலைக்காட்சியில்,

ரஜினி,கமல்

பிரபு, கார்த்திக்

மோகன்,சுரேஷ்

என பாடியும், ஆடியும் இருந்தனர்.

மதியம்…

 உணவாக வடை  பாயசமோடு

பரிமாறினாள் அம்மா.

இருள் மாலை…

மத்தாப்புகள் மனதை கவர

வானமே மிளிர்ந்தது.

விருந்தினர் வருகையால்

விடுபட முடியாத

விருந்தோம்பலுக்காக

இரவும் சமையல் செய்தாள்

அம்மா.

மகிழ்வோடு…

முடியும் இந்நாளில்

சரவெடியாய் வெடித்ததாம்

மனதில் எனக்கோர் கேள்வி

சதா… நேரமும்

சமையல்

அ(சி)றையிலிருக்கும்

எப்பெண்களுக்கும்

எப்போதுதான்

தீபாவளி?