கனவை நனவாக்கிய சுற்றுலாப் பயணம்!

கனவை நனவாக்கிய சுற்றுலாப் பயணம்!

ல வருட கனவாகிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணம் செல்லும் ஆசை, நான், என் கணவர், இரண்டு மகன்கள் மட்டுமின்றி 85 வயதான என் மாமியார், 84 வயதான என் தாயார் மற்றும் என் அண்ணன் எல்லோருமாக சிங்கப்பூர் மலேசியா சென்று வந்தபோது நனவாகியது.


சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் இறங்கி  ஹோட்டல் புக் செய்து. மாலையில் லிட்டில்  இண்டியாவில் மாரியம்மன் கோயிலுக்குச் சென்றோம். இங்குள்ளது போலவே மாரியம்மன் மிக அழகாக காட்சியளித்தாள். தரிசனத்தை ஆனந்தமாக கண்டோம். கோயில் மிக சுத்தமாக இருந்தது.

பிறகு அங்கிருந்து நைட் ஜங்கில் சஃபாரி எனப்படும் மிருகக்காட்சி சாலைக்குச் சென்றோம். அங்கு விலங்குகள் அனைத்தும் கூண்டில் இல்லாமல், உலாவிக் கொண்டிருந்தன. அங்கு பார்க்க வந்த மக்கள் அனைவரையும் குழந்தைகள் செல்லும் ரயிலில் ஏற்றி மிருககாட்சிசாலை முழுவதையும் சுற்றிக்காட்டினர். அந்த இரவு நேரத்தில் சிங்கத்தின் கர்ஜனையும் பறவைகளின் கீச்சிடல்களும் ஓலங்களும் படபடப்புடன்  பயம் கலந்த ஒரு புதிய அனுபவமாக இருந்தது. மிருகங்கள் எதுவும் மக்களை நெருங்காவண்ணம் பாதுகாப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மறுநாள் காலையில் சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவு ரிசார்ட்.  ஹாலிவுட் திரைப்படத் தொகுப்புகளின் மிகப்பெரிய காட்சிகள் இந்த பூங்காவில் மக்களை ஈர்க்கிறது. அங்குள்ள கேபிள் காரில் மிக உயரமாக  பயணம் செய்தது சிங்கப்பூர் முழுவதையும் பார்க்கக் கூடிய புதிய அனுபவத்தை ஏற்படுத்தியது.


மேடம் துசாட்ஸ் என்னும் மெழுகு அருங்காட்சியகம் வந்தோம். அங்கு மெழுகினால் செய்யப்பட்ட பிரபலங்கள், உலகளாவிய சின்னங்கள், வரலாற்றுத் தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் இசை புனைவுகளின் இருந்தன. அந்த மெழுகு பிரதி சிலைகளுடன் கை குலுக்கி, செல்ஃபிக்களைக் கிளிக் செய்து கொண்டோம். எல்லாம் தந்ரூபமாக உண்மையான உருவமாக காட்சியளித்தன. மிக அற்புதமான வேலைப்பாடுகள்.
அங்குள்ள அறையில் இசைக்கப்படும் இசைக்கு நாம் நடனமாடுவதை நாமே பார்க்க பெரிய கண்ணாடி வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து கண்கவர் நீருக்கடியில் உலகம் வழியாக செல்வது எவ்வளவு ஆச்சரியமாக இருந்ததுதெரியுமா. கண்ணாடி பேனல்களுக்குப் பின்னால் ஓடும் ஒரு பெரிய கடல் காட்சியில் விதம்விதமான லட்சக்கணக்கான மீன்களை கானும் புதிய அனுபவத்தில் இங்கு நீண்ட நேரம் செலவிட்டோம்.

மறுநாள் மெர்லியன் சென்றோம். சிங்கத்தின் தலை, மீனின் உடலைக் கொண்ட சின்னம். அதன் வாயிலிருந்து தண்ணீர் வெளியேறுகிறது.  மிக அழகிய தோற்றம் கொண்ட இச்சிலையின் கீழ் நின்று  ஃபோட்டோ வீடியோ எல்லாம் முடித்துவிட்டு கிளம்பினோம்.மறுநாள் கார்டண் பே , பூங்காவிற்கு போனோம்.  ஆஹா என்ன அழகு. காண இரண்டு கண்கள் போதாது. எங்களையே அங்கு மறந்தோம். மிக அற்புதமான பராமரிப்பு.
 
மதியம் சிங்கப்பூர் ஃப்ளையர்க்கு என்னும் மிகப்பெரிய அற்புதமான  சக்கரராட்டினம் போனோம். மிக பாதுகாப்புடன் அமைக்கப்பட்டிருந்தது. அதில் ஏறி அமர்ந்து மேலிருந்து கீழே  சுற்றி வர சிங்கப்பூர் முழுவதையும் கண்டு மகிழ்ந்தோம்.
 
மலேசியா:
சிங்கப்பூரிலிருந்து கிளம்பி விமானத்தின் மூலம் மலேசியா சென்றோம். பட்டு கேவ்ஸ் முருகன் கோயில் வந்தோம். அங்குள்ள 272 படிகள் ஏறத் தொடங்கும் போது, சாதனை என்னவென்றால் - 80 வயதை தாண்டிய என் தாயாரும் , மாமியாரும் அத்தனை படிகளையும் ஏறியதுதான். அற்புதமான தரிசனம் கிடைத்தது. அன்று என் தாயாரின் பிறந்தநாள். அதை   பூசாரியிடம்  கூறி முருகனுக்கு  அர்ச்சனை  செய்தோம்.  அங்குள்ள பூசாரி என் தாயாருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தது நாங்கள் யாரும் எதிர்பாராதது. நாங்கள் அனைவரும் மிகவும் நெகிழ்ந்து போனோம்.

பெட்ரோனாஸ் டவர்ஸ்:
லகத்திலேயே மிக உயரமான டவர் இதுதான். வானை தொடும் அளவிற்கு இரண்டு கட்டிடங்கள் இணையும் அழகு அலாதியானது. இங்கு மாலை வேளை விளக்கு வெளிச்சத்தில் புகைப்படம் எடுக்கும்போது புதிய அனுபவமாக இருந்தது.மறுநாள் கோலாலம்பூர் பறவை பூங்கா ஒரு பிரபலமான பொது பறவைக் கூடமான சுற்றுலா அம்சமாகும். இங்கு 3000க்கும்  மேற்பட்ட பறவைகள் உள்ளன.  இங்கு பார்வையாளர்கள் கையில், தோளில், தலையில் என பறவைகள் உட்கார்ந்து புகைப்படம் எடுக்கிறார்கள். நாம் சம்மதித்தால் உயிருள்ள பாம்பை நம்மீது சுற்றி புகைப்படம் எடுக்கிறார்கள். மிக வித்தியாசமான அனுபவம்.

யானைகள் சரணாலயம், இங்கு ஆண்  யானை  பெண் யானை மற்றும் யானைக்குட்டி விளையாடுவதை கண்குளிர பார்க்கலாம். அங்குள்ள பழங்களை நாங்களே யானைகளுக்கு கொடுக்க அனுமதித்தனர். யானைகள் அந்த பாகனின் கட்டளைகளை கேட்டு அதற்கேற்ப வித்தைகளைச் செய்தனர்.

மதியமாகிவிட்டதால் ஷாப்பிங் போய்  பொருட்களை வாங்கி  வரலாம் என கடைகளுக்கு சென்றோம். சாக்லேட் , பிஸ்கட் , செண்ட் பாட்டில்கள் , மேக்அப் பொருட்கள், கீ செயின், குடைகள் டீ சர்ட்கள் என பல பொருட்களை வாங்கி ஒரு டிராவல் பேக்கில் போட்டு எடுத்துக்கொண்டு ரூமிற்கு வந்தோம்.மறுநாள் காலை ரூமை காலி செய்து கொண்டு மீண்டும் சிங்கப்பூர் வந்தோம்.
 
அன்றிறவு சென்னை வர விமானம் புக் செய்திருந்தோம். எனவே சிங்கப்பூரில் வாங்க வேண்டிய பொருட்களை வாங்க டிராவல் பேக் எடுத்துக்கொண்டு அதில் எங்கள் எல்லோரின் பாஸ்போர்ட்டையும்  சென்னை வர ரிட்டர்ன் டிக்கெட்களையும் வைத்து லிட்டில் இந்தியா என்ற கடைதெருவிற்கு வந்தோம். இங்கு  உறவினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் தருவதற்கு என   புடவைகள், தைலங்கள், ஹேன்ட் பேக், நெயில் கட்டர், சுவரில் தொங்கவிடப்படும் அலங்கார பொருட்கள்  என ஆசைப்பட்டதை எல்லாம் வாங்கி அந்த டிராவல் பேக்கில் போட்டு எடுத்துக்கொண்டு ரூமிற்கு வந்தோம். ரூமை காலி செய்து எல்லாப் பைகளையும்  எடுத்துக்கொண்டு இரண்டு கால்டாக்ஸியில் டிக்கியில் சாமாண்களை நிரப்பி கொண்டு ஏறபோர்ட் அருகிலிருந்த சங்கீதா ஹோட்டலில் வந்திரங்கினோம். சாப்பிட்டுவிட்டு ஃபிளேன் ஏற நான்கு மணி நேரம் இருந்தது. விமான நிலையத்தில் இரண்டு மணி நேரம் முன்பு ரிப்போட்டிங் டைம்.
சாப்பிட்ட பிறகு ஏர்போர்ட் கிளம்பும் போதுதான் பைகளை எண்ணிணோம்.  


பாஸ்போர்ட் மற்றும் சென்னை வர ரிட்டர்ன் டிக்கெட் இருந்த டிராவல் பேக் நாங்கள் வந்த ஒரு கால் டேக்ஸி டிக்கியிலிருந்து எடுக்கவே இல்லை என்பதை அப்போது தான் உணர்ந்தோம். என்ன செய்வது என்று திகைத்து நின்றோம். நாங்கள் வந்த அந்த கால் டேக்ஸி எங்காவது நிற்கிறதா என தெருத்தெருவாக தேடினோம். போலீஸில் புகார் கொடுக்கலாமா என யோசித்தோம். எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொண்டோம்.
சட்டென்று ஒரு ஐடியா தோன்றியது. நாங்கள் வந்த கால் டாக்ஸி பில்லில் அந்த டிரைவரின் ஃபோன் நம்பர் இருந்தது. அதை வைத்து அவருக்கு ஃபோன் செய்தோம். விவரங்களை கூறினோம். அவர் வேறு சவாரி போய்க்கொண்டு இருப்பதாகவும் வர ஒரு மணி நேரம் ஆகும் எனனும், அங்கு மீண்டும் வந்து செல்ல தனக்கு உண்டாகும் பயணச் செலவை கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். சரி என சம்மதித்தோம். பிறகு ஒரு மணி நேரத்தில் அவர் சொன்னபடி விரைந்து வந்து எங்களிடம் பையை கொடுத்துவிட்டு பணத்தை பெற்றுச் சென்றார். இரு கை கூப்பி நன்றி தெரிவித்தோம். அதன்பின் ஏர்போர்ட் வந்து விமானத்தை பிடிக்கும் வரை ஒரே டென்ஷன்தான். சரியான நேரத்தில் அந்த டிரைவர் வந்து பையை கொடுதாததால்தான் அன்று திட்டமிட்டபடி சென்னை வர முடிந்தது.


சென்னையில் வீட்டில் இறங்கியவுடன் முதலில் சாமாண்களை எண்ணி இறக்கினோம். வீட்டிற்குள் வந்தவுடன் கடவுளுக்கு விளக்கேற்றி  கற்பூர தீபமேற்றி நமஸ்கரித்து நன்றி கூறினோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com