

நம்மில் பலர் ஏதாவது எழுதப் பிரியப்படுவார்கள். ஆனால், "என்ன கரு? எப்படி ஆரம்பிப்பது? எப்படி முடிப்பது? எப்படி எழுதுவது?" என்று தெரியாது. இந்தச் சவாலை எப்படி எதிர்கொள்வது?
நமக்கு பல்வேறு விஷயங்கள் தெரிந்து இருக்கலாம்; ஆனால், அதை ஒரு படைப்பாக மாற்றத் தெரியாது. எழுத விரும்புபவர்கள் முதலில் டயரி, அதாவது நாட்குறிப்பு எழுதிப் பழக வேண்டும். இதுதான் ஏணியின் முதல் படி.
டயரி (அல்லது) நாட்குறிப்பா...? எப்படி எழுதுவது?
ஒவ்வொரு நாளும் நம்முடைய செயல்பாடுகளையும், நம்மைச் சுற்றி ஏதாவது நிகழ்வுகள் நடந்திருந்தாலும் அதைப் பற்றிய குறிப்புகளையும் நாம் எழுத ஆரம்பிக்க வேண்டும். இதுதான் ஆரம்பம்.
உதாரணமாக, எழுத ஆரம்பிப்பவர்களுக்காக ‘ஒரே ஒரு நாள் நாட்குறிப்பு’ ஒன்றை நான் இங்கே எழுதிக் காட்டுகிறேன்:
15-01-2026
இன்று காலை 5 மணிக்கு எழுந்தேன். பொங்கல் பண்டிகை என்பதால் கல்லூரிக்கு விடுமுறை. காலைக்கடன்களை முடித்துவிட்டு யோகா செய்தேன். தினமும் அரை மணி நேரம் யோகா செய்வது எனது வழக்கம்.
யோகா செய்து முடித்தவுடன், "அம்மாவிற்கு ஏதாவது உதவி வேண்டுமா?" என்று கேட்டேன். அம்மா வேண்டாம் என்று சொல்லிவிட்டார். காலை உணவு பொங்கல் தான்; ருசி மிக அதிகம். நான் கேட்டு வாங்கிச் சாப்பிட்டேன். பிறகு, வீட்டுக்கு அருகாமையில் இருந்த கோயிலுக்குச் சென்று மனமாரப் பிரார்த்தனை செய்தேன்.
கோயிலிலிருந்து வீட்டிற்குத் திரும்பியவுடன், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வாட்ஸ்அப் மூலம் பொங்கல் வாழ்த்துகளை அனுப்பி வைத்தேன். மேலும், நெருங்கிய சொந்தங்களுக்குத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துகளைச் சொன்னேன். அவ்வாறு பேசும்போது அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன்.
உண்மையைச் சொன்னால், எனக்கு விடுமுறை நாட்கள் அவ்வளவாகப் பிடிப்பதில்லை; கல்லூரி இருந்தால்தான் சந்தோஷம். தோழிகளுடன் ஜாலியாக இருக்கலாம். இடையில் அம்மா டீயுடன் வந்தார், வாங்கிப் பருகினேன்.
மதியம் மிகவும் ‘போர்’ அடித்தது. என் நெருங்கிய தோழிக்குத் தொலைபேசியில் அழைத்து, "சினிமாவுக்குப் போகலாமா?" எனக் கேட்டேன். அவளும் சரி என்றாள். பக்கத்தில்தான் திரையரங்கம் இருந்தது, இருவரும் சென்றோம்.
ஐயோ... ஐயோ...! எதற்காக வந்தோம் என்றாகிவிட்டது. படம் முழுக்க ஒரே வன்முறை, ஒரே ஆபாசம்! காதலைக் கூடக் கண்ணியமாகக் காட்டவில்லை. அப்பாடா! எப்படியோ படம் முடிந்தது.
என்னோடு தோழியும் வீட்டிற்கு வந்தாள். எங்களுக்கு அம்மா பஜ்ஜியும், காபியும் கொடுத்தார். நாங்கள் இருவரும் கலகலப்பாகப் பேசிக்கொண்டே பஜ்ஜியை விரும்பிச் சாப்பிட்டோம்.
நாட்குறிப்பு எப்படி எழுதுவது என்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பது போலத்தான் இந்த மாதிரி நாட்குறிப்பை எழுதிக் காட்டினேன். உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதை எழுதுங்கள்; எழுதிய பின் அதைப் படித்துப் பாருங்கள். அப்போதுதான் உங்களுடைய நிறை, குறைகள் உங்களுக்கே தெரிந்துவிடும்.
இனி, நீங்கள் எழுதலாம்! கதையின் கருப் பற்றி கவலை கொள்ளாதீர்கள்; எழுத ஆரம்பிக்கும்போது அது தானாகவே தோன்றும். எதையும் அப்படியே எழுதுங்கள். முதலில் ஒரு சிறுகதையோடு உங்கள் எழுத்துப் பயணத்தை ஆரம்பியுங்கள்.
பள்ளி, கல்லூரி, பாசம், பிரியம், காதல், திருமணம், சமுதாயம், லஞ்சம், ஊழல், அடக்குமுறை, நட்பு, நாடகம், சினிமா கூடத்தான்... வேலை, வேலையில்லாத் திண்டாட்டம், சாதி மறுப்பு, மத நல்லிணக்கம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். எதையாவது ஒன்றைக் கருவாக எடுத்து, உங்கள் மனம் சொல்லுவதை அப்படியே எழுதுங்கள்.
உங்கள் முதல் சிறுகதை ரெடி! படித்து மகிழுங்கள்; பத்திரிகைகளுக்கு அனுப்பி வையுங்கள். முதலில் தோல்விதான் கிடைக்கும்—இது இயற்கையின் நியதி. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல உங்களுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் நிச்சயம் கிடைத்துவிடும்.
முயற்சி திருவினையாக்கும்!