அதிர்ச்சி தகவல்: தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்; முதலிடத்தில் எந்த மாவட்டம் தெரியுமா?

child marriage
child marriage
Published on

இந்த டிஜிட்டல் யுகத்தில், பெண்கள் கல்வியும் அவர்களின் பொருளாதார நிலையும் அதிகரித்து வருகிறது. பல பெண்கள் தடைகளைத் தாண்டி வாழ்க்கையில் வெற்றி பெற்று உயர்ந்த இடத்தில் தடம்பதித்து வருகின்றனர்.

பல பெற்றோர்கள் ஆண் பிள்ளைகளுக்கு நிகராக பெண் பிள்ளைகளும் கல்வி, சுதந்திரம், வேலை போன்றவற்றில் சிறந்து விளங்க அவர்களை ஊக்குவிக்கிறார்கள். குடும்ப சுமையை ஏற்கும் பொறுப்பு மற்றும் பொருளாதாரம் வந்தவுடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது இன்றைய இளைய தலைமுறையினரின் மனநிலையாக உள்ளது.  

இது ஒருபுறம் இருப்பினும், மறுபுறத்தில் குறைவான கல்வியறிவு, பொருளாதார அழுத்தம், சமூக அழுத்தம் மற்றும் விழிப்புணர்வு இல்லாமை போன்ற பல காரணங்களால் தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. 

தமிழ்நாட்டில் ஒரு நாளில் சராசரியாக 10 குழந்தை திருமணங்கள் நடப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், சமீபத்தில் குழந்தை திருமணங்கள் குறித்த அறிக்கை ஒன்றும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

குழந்தை திருமணம் குறித்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியான புள்ளிவிவரங்களின் நிலவரப்படி,

தமிழ்நாட்டில் கடந்த 2023 ஆம் ஆண்டில் 1,054 குழந்தை திருமணங்களும் 2024 ஆம் ஆண்டில் 1,640 குழந்தை குழந்தைத் திருமணங்களும் நடைபெற்றுள்ளன. ஒரே ஆண்டில் குழந்தை திருமணங்களின் விகிதம் 56% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதிக குழந்தை திருமணங்கள் நடைபெற்ற  மாநிலமாக ஈரோடு மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இங்கு ஒரே ஆண்டில் கிட்டத்தட்ட 150 குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாம். 133 குழந்தை திருமணங்கள் நடைபெற்று திருநெல்வேலி மாவட்டம் இரண்டாவது இடத்தை  வகிக்கிறது.

இந்த இரண்டு மாவட்டங்களிலும் கடந்த ஆண்டுகளை விட இரண்டு மடங்கு அதிகமாக குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளன. 

மேலும், பெரம்பலூர், திருப்பத்தூர், கோவை, தருமபுரி, திருப்பூர், நாகப்பட்டினம் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளன.

அதே சமயம், நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக குறைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

குழந்தை திருமணத்திற்கு எதிரான உரிய தடுப்பு நடவடிக்கைகளின் விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது குழந்தை திருமணங்களின் அதிகரிப்பிற்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
மங்கையரே, 16 வித அலங்காரங்கள் கொண்டு உங்கள் அழகை மெருகேற்றுங்கள்!
child marriage

கடந்த 2022 ஆம் ஆண்டு  70 சதவீதமாக இருந்த குழந்தை திருமண தடுப்பு நடவடிக்கைகள், 2023 ஆம் ஆண்டு 65 சதவீதமாகவும், 2024 ஆம் ஆண்டு 54 சதவீதமாகவும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குழந்தைத் திருமணங்கள்  நடைபெறுவதைப் பற்றி புகார்கள் அளிப்பது குறைந்துள்ளதும் சுட்டிக்காட்டப்படுகிறது. 

குழந்தைத் திருமணங்களைத் தடுக்கவும் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கிலும் அரசாங்கம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை அறிமுகப்படுத்தியும் கடந்த ஒரு சில வருடங்களாக தமிழ்நாட்டில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை  கணிசமாக அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் அதிகரிக்கும் சிசேரியன் பிரசவங்கள் - முதலிடத்தில் எந்த மாநிலம் தெரியுமா?
child marriage

குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் படி, 18 வயது பூர்த்தியாகாத பெண்ணும் 21 வயது பூர்த்தியாகாத ஆணும் திருமணம் செய்து கொள்வது குற்றமாகும்.

இதுபோன்ற குழந்தை திருமணத்திற்கு துணை நிற்பவர்கள், ஆதரிப்பவர்கள், பொறுப்பேற்று நடத்துபவர்கள், வழிகாட்டுபவர்கள் மற்றும் மறைப்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையும் 1 லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.

இதுபோன்ற திருமணங்களால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்களே. எனவே, இதைத் தடுக்க குழந்தை திருமணம் நடப்பது குறித்து தெரியவந்தால் சைல்டு ஹெல்ப் லைன் எண்ணான 1098-க்கு தகவல் அளிக்கலாம். சைல்டு ஹெல்ப் லைன் அதிகாரிகள் திருமணத்தை நிறுத்துவதோடு, ஏற்பாடு செய்தவர்கள் மீதும் வழக்குப் பதிவும் செய்வார்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com