
பிரசவக் காலத்தில் தாயின் உடல்நிலை மோசமடையும்போது அல்லது சுகப்பிரசவத்திற்கான வாய்ப்புகள் குறையும்போது, தாயையும் குழந்தையையும் காப்பாற்ற சிசேரியன் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியா உட்பட பல உலக நாடுகளில் சிசேரியன் பிரசவங்ளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதிலும் குறிப்பாக, இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் அறுவைச் சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்து வருகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.
அதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் 'தி லான்செட் பிராந்திய சுகாதாரம் - தென்கிழக்கு ஆசியா' (The Lancet Regional Health - South East Asia) எனும் மருத்துவ இதழில் இந்தியாவில் நடைபெறும் சிசேரியன் பிரசவம் குறித்து ஒரு அறிக்கை வெளிவந்தது. இந்த அறிக்கை டெல்லியில் உள்ள ஜார்ஜ் இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் ஹெல்த் நிறுவன ஆராய்ச்சியாளர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 2019 முதல் 2021 வரையிலான தேசிய குடும்ப கணக்கெடுப்பு தரவுகளை பகுப்பாய்வு செய்து இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியாவின் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் இருந்து உள்ள 7.2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களின் பிரசவ டேட்டாக்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளின் விகிதம் 2.1 % ஆக உள்ளது. மேலும், இந்தியாவில் பிறக்கும் 5 குழந்தைகளில் ஒரு குழந்தை சிசேரியன் மூலம் பிறப்பதாகவும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, வட இந்தியாவைக் காட்டிலும் தென்னிந்தியாவில் சிசேரியன் பிரசவங்களின் விகிதம் அதிகபட்சமாக உள்ளது. குறைந்தபட்சமாக நாகலாந்து மாநிலத்தில் 5.2 சதவீதமாகவும், அதிகபட்சமாக தெலுங்கானாவில் 60.7 சதவீதமாகவும் உள்ளது. சிசேரியன் மூலம் குழந்தைகள் பிறப்பு விகிதத்தில் தெலுங்கானா முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்தபடியாக தமிழ்நாடு 44.9 சதவீதம் பெற்று இரண்டாவது இடமும், ஆந்திரா மாநிலம் 42.4 சதவீதம் பெற்று மூன்றாவது இடமும் வகிக்கிறது.
நாகாலாந்து, மேகாலயா (8.2%), பீகார் (9.7%) போன்ற வட மாநிலங்கள் குறைந்தபட்ச சிசேரியன் பிறப்பு விகிதங்கள் கொண்ட மாநிலங்களாகத் திகழ்கின்றன. அதோடு, அரசு அல்லது பொது மருத்துவமனைகளில் சிசேரியன் குறைந்த விகிதத்திலும், தனியார் மருத்துவனைகளில் அதிக விகிதத்திலும் நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது.
பெரும்பாலும், வசதி படைத்த குடுப்பத்தைச் சேர்ந்த பெண்கள் மத்தியில் சிசேரியன் பிரசவம் இருமடங்காக அதிகரித்துள்ளது. வலி இல்லாத பிரசவம், தற்போதுள்ள பெண்களுக்கு சுகப்பிரசவம் மீதுள்ள அச்சம், பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சி, மேம்பட்ட சுகாதார வசதிகள், நல்ல நாளில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதில் மக்களுக்கு உள்ள ஈடுபாடு அல்லது விருப்பம் போன்றவை சிசேரியன் பிரசவங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கும் அதன் அதிகரிப்பு விகிதத்திற்கும் காரணங்களாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுபோன்ற தேவையே இல்லாத காரணங்களுக்காக சிசேரியன் செய்யப்படுவது அதிகரித்து வருவதாகவும் அறிக்கை கூறுகிறது. மேலும், இந்த சூழ்நிலை கடுமையான பொது சுகாதார அபாயத்திற்கு வழிவகுக்கும். எனவே, இந்தியாவில் சிசேரியன் பிரசவங்கள் நடைபெறுவதற்கானத் தேவையை மதிப்பிடுவதற்கு முறையான கண்காணிப்பு வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது என்றும் இந்த ஆய்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.