பூவை விரும்பாதவர்கள் இருக்க மாட்டார்கள் அதிலும் ரோஜாப்பூ என்றால் அனைவருக்கும் கொள்ளை பிரியம். மேலும் ரோஜா அன்பின் அடையாளமாகவும் காதலின் சின்னமாகவும் அறியப்படுகிறது. தொல்பொருள் கண்டுபிடிப்புகள் ரோஜாக்கள் பூமியில் பூத்த ஆரம்பகால பூக்களில் ஒன்றாகும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. அனைவர் வாங்கும் விலையிலும் ரோஜாக்கள் இருப்பது இதன் தனி சிறப்பு.
உலகின் மிகவும் விலையுயர்ந்த ரோஜாவாக 'ஜூலியட் ரோஜா' உள்ளது. வழக்கமான ரோஜாக்களை வளர்ப்பது போலல்லாமல் இந்த ஜூலியட் ரோஜாவை வளர்ப்பதற்கு சிறப்பு கவனிப்பு தேவைப்படுகிறது. இந்த அரிய மற்றும் நேர்த்தியான பூவை புகழ்பெற்ற பூக்கள் நிபுணர் டேவிட் ஆஸ்டின் உருவாக்கியுள்ளார். அவர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் பல்வேறு வகைகளை கலப்பினப்படுத்தியதன் மூலம் இந்த அழகான ஆங்கில ரோஜாவை 1978 ஆம் ஆண்டு உருவாக்கினார்.
பாதாமி நிற கலப்பினமாக அறியப்படும் ஜூலியட் ரோஸ், அதன் அழகுக்காகவும் அரிதான தன்மைக்காகவும் புகழ்பெற்று விளங்குகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த ரோஜா 2006 ஆம் ஆண்டில், 10 மில்லியன் பவுண்டுகளுக்கு (இந்திய மதிப்பில் ரூ. 90 கோடி) விற்கப்பட்டது. இது வரலாற்றில் அதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் விலையுயர்ந்த ரோஜாவாக புகழ் பெற்றது!
ஜூலியட் ரோஸ் மிகவும் விலையுயர்ந்த ரோஜா மட்டுமல்ல, உலகின் மிகவும் அழகான ரோஜாக்களில் ஒன்றாக இருப்பதற்கு மிக முக்கியமான காரணம்... இது தனித்துவமான நறுமணத்தைக் கொண்டுள்ளது. மேலும் இது மிகவும் அழகாக இருப்பதால் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட்டின் நினைவாக பெயரிடப்பட்டது.
இன்றும் இதுதான் உலகின் விலையுயர்ந்த ரோஜாவாக உள்ளது. இதன் மதிப்பு சுமார் 15.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள். மேலும் ஜூலியட் ரோஜா குறைந்தது மூன்று ஆண்டுகள் புத்துணர்ச்சியுடன் வாடாமல் உலராமல் இருக்கும் என்பது இதன் சிறந்த குணங்களில் ஒன்றாகும்.
இவ்வகை ரோஜாக்கள் அனைத்து வகையான மண்ணிலும் வளரக்கூடியவை. அவை களிமண், மணல் அல்லது எந்த வகை மண்ணாக இருந்தாலும் இச்செடியை வளர்ப்பதற்கு நல்ல பராமரிப்பு வேண்டும். டேவிட் ஆஸ்டின் அவற்றை வளர்க்க 15 ஆண்டுகள் ஆனது என்பதிலிருந்தே, ஒரு செடிக்கு எவ்வளவு பராமரிப்பு தேவை என்பதை நீங்கள் நன்றாக கற்பனை செய்து பார்க்கலாம்.
காதலர் தினம் கொண்டாடப்படும் இவ்வேளையில், ரோஜாப்பூவின் நிறமோ விலையோ முக்கியமில்லை! உண்மையான அன்பை வெளிப்படுத்த சாதாரண ரோஜாவே போதும்.