மங்கையர்களின் பிணி தடுக்கும் அணிகலன்கள்!

Gold Jewells for Women
Gold Jewells for Women

பெண்மையின் தாய்மைத் தவமே உலக உற்பத்திக்கு ஆதாரம். உயிருக்கு உருவம் கொடுப்பதும் அவ்வுருவத்தைப் பேணிக் காப்பதும் பெண்மையே. எதிர்காலச் சந்ததியினரை உருவாக்கும்.

ஆற்றல் கொண்ட பெண்களின் உடல் நலம் பேணிக் காக்கப் பெற்றால்தான் அவள் ஈன்றெடுக்கும் குழந்தைகளின் நலமும் மேன்மை பெறும். நமது கலாசார பழக்கவழக்கங்களில் ஒன்றான நகையணிதல் (அணிகலன்கள்) பெண்களின் உடல்நலத்தைப் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

அணிகலன்கள் அணிவது குறித்து விரிவாகவே அகத்தியர் பாடியுள்ளார் :

"கேளப்பா தங்கத்தின் பொட்டுகட்டு

கெட்டியான நவரத்ன மாலைபூட்டு

நீளப்பா பதக்கமொரு சரங்கள் போட்டு

நிதியான அட்டிமேற் சவடி போட்டு''

என்று மிக நீளமாகப் பாடிக்கொண்டே போகிறார், 'மனோன்மணி பூஜாவிதி” என்னும் நூலில்.

பெண்கள் காது, மூக்கு, கழுத்து, கைமணிக்கட்டு, கைவிரல்கள் போன்ற இடங்களில் தங்கத்தால் செய்த நகைகளையும் கணுக்கால் மற்றும் கால் விரல்களில் வெள்ளியிலான நகைகளையும் அணிவதை நாம் காண்கின்றோம். ஆண்களும் கழுத்து, கைவிரல்களில் தங்க நகைகளையும், இடுப்பில் வெள்ளியிலான அரைஞாணும் அணிந்து கொள்கின்றனர்.

கண், காது, மூக்கு, வாய் முதலிய உறுப்புகள் மூளை நரம்புகளுடன் நேரடித் தொடர்புடைய மிகவும் நுண் உணர்வுகளைக்கொண்டதும் நுண் உணர்வு செயல்பாடுகளை உடையதுமான நரம்புக் கோர்வையைக் கொண்டவைகள் என்பதை நாமறிவோம். இந் நுண்ணிய நரம்புக் கோர்வை உறுப்புகள் அதிகச் செயல்பாட்டினாலோ அல்லது ரத்த ஓட்டத் தடையினாலோ அல்லது நோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்டோ விரைவில் செயல்திறனை இழக்கக்கூடிய உறுப்புகள் என்பதை நாம் நினைவில்கொண்டு, அவ்விடங்களில் அணியும் அணிகலன்களின் உலோகத் தன்மையையும் செயல்பாட்டையும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

Gold Jewells
Gold Jewells

தங்கம்:

இது ஒரு இயற்கை உலோக தாதுப் பொருள். வெப்பத்தை வெளிப்படுத்தக் கூடியது. நரம்புக்கு உரம் உண்டாக்கியாகச் செயல்படும். மற்றும் உடல் தேற்றி, ஞாபக சக்தி ஊக்கி, ருதுப் பெருக்கி, ருது உண்டாக்கி முதலிய செயல்களையும் செயல்திறன்களையும் கொண்டதாகும் என்று சித்த மருத்துவ குண பாடம் கூறுகின்றது.

தங்கத்தை நகையாகச் செய்யும்பொழுது அதன் எடைக்குப் பத்தில் ஒரு பங்கு எடை தாமிரம் (செம்பு) சேர்த்துதான் நகை செய்கிறார்கள். அவ்வாறு தாமிரம் சேர்ந்த கலப்பு உலோகமாக மாறும்பொழுது அது உராய்வில் கரையும் தன்மை பெற்றதாகவும் சூரியனில் படும்பொழுது சூரியக் கதிர்களை ஈர்த்துப் பிரதிபலிக்கச் செய்யும் தன்மை பெற்றதாகவும் செயல்படும். சூரியக் கதிர் நேரடியாக உடல் உறுப்புகளில் ஊடுருவுவதைவிட தங்கத்தாலான நகைகளில் பட்டு எதிரொலிக்கும்பொழுது அதிக அளவு ஊடுருவுதிறன் பெற்று நுண்மின்காந்தமாக மாறுகின்றது. இதன் மூலம் நுண்ணுணர்வு நரம்புக் கோர்வைகள் தூண்டப் பெற்று, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து உறுப்புகளின் செயல்திறனை ஊக்குவிப்பதோடு நோய் எதுவும் அணுகாமலும் பாதுகாக்கின்றது.

சூரியக் கதிர் ஊடே ஊடுருவப்பட்டுள்ள ஆகாயத்தின் மின்காந்த ஆற்றலை அதிக அளவில் ஈர்த்துப் பிரதிபலிக்கச் செய்ய ஏதுவாகக் கோயில்களிலுள்ள கோபுர உச்சியில் தங்கக் கூரை வேயப்படுகின்றது.

உடல் ஊக்கம்: மேலும், கைவிரல்களில் உள்ள மோதிரம் நாம் சாப்பிடும் உண்கலத்தில் பட்டு உராய்வதால் நுண் அணுக்களாகப் பிரிந்து உணவுடன் உட்சென்று நமது செரிவுநீர், செரிவு அமிலங்களால் இரசாயன மாற்றமடைந்து மருந்தாகச் செயல்பட்டு உடலுக்கு வேண்டிய ஊட்டச் சத்துக்களை அளிக்கிறது. குறிப்பாக தங்கச் சத்து இரைப்பையை ஊக்குவிக்கும் தன்மையைக் கொண்டதாகும்.

சூதகக் கோளாறு மற்றும் தைராய்டு வீக்கம் நோய் பாதுகாப்பு :

கிராமப்புறப் பெண்கள் தங்கத்தால் செய்த உட்கழுத்துப் பதக்கம் (டாலர்) அணிந்திருப்பதைக் காணலாம். நகர்ப்புறப் பெண்களிலும் சிலர் பதக்கம் இல்லாத பட்டையான செயினை அணிகின்றனர். இவ்வணிகலன்கள் பெண்களுக்குக் கெட்ட நிணநீர்களால் உண்டாகும் சதைத் திரட்டு என்ற கண்டமாலை மற்றும் தைராய்டு வீக்கம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கப் பயன்படுகின்றது.

நாளமில்லா சுரப்பிகளில் ஒன்றான தைராய்டு கிளாண்ட் மற்ற பாலின சுரப்பிகளான சூலகங்கள் மற்றும் கருச்செல்கள் உருவாகும் உறுப்புகளுடனும் இணைந்துள்ள அட்ரினல் சுரப்பியுடன் தொடர்புடையது. தைராய்டு சுரப்பியுள்ள கழுத்துப் பகுதியில் தங்கப் பதக்கம் அணிந்து கொள்வதன் மூலம் அன்றாடம் ஏற்படும் அழுத்தத்தின் மூலமும் (Accupressure) தங்கத்தின் மேற்குறிப்பிட்டுள்ள செயல்திறன் மூலமும் தைராய்டு சுரப்பித் தூண்டப் பெற்று தைராய்டு சுரப்பியின் பாதிப்பால் உண்டாகும் அனைத்து நோய்களிலிருந்தும் பாதுகாக்கின்றது.

Silver Jewells
Silver Jewells

வெள்ளி:

சில்வர் ஆர்ஜினியம் எனப்படும் வெள்ளிக்கு வெண்தாது, வெண்பொன் என்ற வேறு பெயர்களும் உண்டு. வெப்பமுண்டாக்கி,  இசிவகற்றி,  காமம் பெருக்கி,  மலமிளக்கி,  தாது வெப்பகற்றி,  உள் அழல் ஆற்றி,  மூளைக்கு வலுவூக்கி போன்ற செயல்  திறனுடையது வெள்ளி. பெண்கள் பெரும்பா லும் கணுக்காலில் உள்ள மூட்டுப் பகுதியிலும், கால் விரல்களிலும் வெள்ளி நகைகளை அணிவதைப் பார்க்கலாம். கெண்டைக் கைகளில் தண்டை எனும் நகையையும் கணுக்கால்களில் சிலம்பும் அணியும் பழக்கங்கள் நாளடைவில் மறைந்துவிட்டன.

கணுச் சூலை: பெண்களுக்குப் பெரும்பாலும் கணுக்கால்களில் உள்ள மூட்டுப் பகுதிகளிலும், முழங்கை போன்ற மூட்டுப் பகுதிகளிலும் மூட்டு வலி ஏற்படுவதுண்டு. குறிப்பாகப் பிரசவம் ஆன இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே இந்த நோய் அதிகமாக வருகின்றது. மூட்டுகளில் அதிக நிணநீர் சுரப்பு குறைந்து போனாலும் அல்லது சுரப்பு அதிகமாகி மூட்டுகளில் தேங்கி விடுவதாலும் மூட்டுகளில் வலி ஏற்படும். ஆங்கிலத்தில் இதை ருமாட்டிக் ஆர்த்தரைட்டிஸ் என்பர். சித்த மருத்துவத்தில் இதைக் கணுச் சூலை என்றும் கூறுவர்.

கணுச் சூலை பாதுகாப்பு: வெள்ளிக்கு இரத்த ட்டத்தைத் துரிதப் படுத்தும் தன்மை உண்டு. வெப்பமுள்ள இடங்களில் வெப்பமகற்றியாகவும், வெப்பம் குறைந்துள்ள பகுதிகளில் வெப்பம் உண்டாக்கியாகவும் செயல்படும். மேலும் இசிவகற்றி (வலியடக்கி) குணமும் வெள்ளிக்கு உண்டு. இந்தத் தன்மைகளை உடைய வெள்ளியிலான அணிகலன்களை அணிந்து கொள்வதன் மூலம் அவ்விடத்தில் ஏற்படும் அழுத்தத்தாலும் உராய்வாலும் கால் பாதங்களில் உள்ள ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து கெட்ட நிணநீர் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாமல் பாதுகாக்கிறது.

அணிகலன்கள் அணிவதில் கவனிக்க வேண்டியவைகள்:

‘தங்கம் உயர்ந்தது, தாழ்ந்தது வெள்ளி’ என்பர். இது இதன் மதிப்பை மட்டும் அளவுகோலாக வைத்துக் கூறியது அல்ல. காது, மூக்கு, கழுத்து, கை போன்ற உடலின் உயர்ந்த இடங்களில் தங்கம் அணியப்பட வேண்டும்; இடுப்பு, கணுக்கால், பாத விரல் போன்ற உடலின் தாழ்ந்த இடங்களில் வெள்ளி அணியப்பட வேண்டும் என்பதையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள் பெரியோர்கள்.

இதையும் படியுங்கள்:
ஆலய வழிபாட்டுக்குரிய விதிமுறைகளை மீறுவது சரியா?
Gold Jewells for Women

நுரையீரல்,  இதயம் மற்றும் நுண் உணர்வு நரம்புக் கோர்வையுள்ள உடலின் மேற்பகுதிகளில் அதிக ரத்த ஓட்டமும் மிக அதிக ரத்த அழுத்தமும் ஏற்படுவது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். இதயம் போன்ற உறுப்புகளில் (ரத்த சுழற்சி சீராக இருக்க வேண்டும். அவ்வாறான உறுப்புகள் உள்ள இடங்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் இயல்புடைய வெள்ளி நகைகளை அணிவது கூடாது.

உடலின் தாழ்ந்த பகுதிகளான இடுப்பு மற்றும் கணுக்கால், பாதம் போன்ற இடங்களில் ரத்த ஓட்டம் குறைவு ஏற்படுவது இயல்பு. இக்குறைகளைச் சீராக்கவே இடுப்பு, கால் பாதம் கால் விரல்கள் போன்ற இடங்களில் ரத்த ஓட்டத்தை ஈர்த்துச் சுழலச் செய்யும் தன்மையுடைய வெள்ளியிலான அணிகலன்களை அணியச் செய்தனர் நமது முன்னோர்கள்.

அணிகலன்கள் அணிவது அழகுக்காகவும் வெறும் ஆடம்பரத்துக்காகவும் மட்டும் அல்ல. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது அணிகலன்கள் என்பது இதன் மூலம் விளங்குகின்றது.

இதைப் போலவே நமது வாழ்க்கையின் அன்றாடக் கலாசாரப் பழக்கவழக்கங்களில் மன ஆரோக்கியமும் உடல் ஆரோக்கியமும் நிறைந்துள்ளன. அவைகளில் உள்ள அறிவியலை அறிந்துணர்ந்து கடைப்பிடித்து அமைதியான ஆரோக்கிய வாழ்வினை அனைவரும் பெறுவோமாக.

- அருள்ஞானஜோதி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com