ஒரு இளம் பெண் உச்சி முதல் பாதம் வரை எப்படி இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்துக் கூறியுள்ளார்கள். அது தான் சாமுத்ரிகா லட்சணம்...
ஒரு பெண்ணின் பாதம் செந்தாமரை பூப்போன்று சிவப்பாக இருக்க வேண்டும். கால்களின் 5 விரல்களும் பூமியில் பதிய வேண்டும். குதிகால் கொஞ்சம் அகலமாக மயிலிறகு போல் அமைந்திருக்க வேண்டும். பாதங்களின் பெரு விரல் நீண்டிருந்தால் நல்லது. காலிலுள்ள நடுவிரலுக்கு அடுத்த விரல் ஒட்டியிருந்தால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள். மேலும் கெண்டைக்கால் பருத்து இல்லாமல் இருப்பது நலம். குதிகாலில் மேல் வெள்ளை மச்சம் இருந்தால் மகிழ்ச்சியாக வாழ்வாள்.
தொடை வாழைத்தண்டு போல் பளபளவென்று இருக்க வேண்டும். முழங்கால் சிறிதாக இருக்க வேண்டும். பெண்களின் தொடை உரோமம் இல்லாமல் பளிச்சென்று காட்சி தர வேண்டும்.
குறுகிய இடை இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும் அதிர்ஷ்டசாலிகள் ஆகவும் இருப்பார்கள். இளம் பெண்களின் இடை நடுவில் சிறுத்தும் மேலும் கீழும் விரிந்திருக்க வேண்டும். ஆலிலை போல் வயிறு அமைந்திருந்தால் அழகு. வயிறு வெள்ளித்தட்டு போல் இருந்து தொப்புள் வலது பக்கமாக சூழித்திருந்தால் செல்வம் பெருகும்.
பெண்ணின் மார்பகங்கள் நெருக்கமாகவும் நிமிர்ந்தும் காட்சி தர வேண்டும்.
கைவிரல் கொழுத்த மீன் போல் சிவப்பாக இருக்க வேண்டும். கைவிரல் பயத்தங்காய் போல் அழகாக காட்சி தர வேண்டும்.
பெண்ணின் முகம் முழு நிலவு போல் ஒளி மிக்கதாக விளங்க வேண்டும். உதடுகள் பவளம் போல் உருண்டு திரண்டிருந்தால் அழகு. பெண்ணின் பல் வரிசை முத்து கோர்த்து போல் வரிசையாக இருக்க வேண்டும்.
கண்கள் நீண்டு சிவந்து மாவடு போல் இருக்க வேண்டும். பாலில் விழுந்தவண்டுகள் போல் கண்கள் துள்ள வேண்டும். கரிய விழிகளில் செவ்வரளி ஓடியிருக்க வேண்டும். பெண்களின் புருவம் வில் போல் வளைந்திருக்க வேண்டும்.
விழிகளை விட விழித்திரை ரொம்ப முக்கியம். விழித்திரை வெள்ளையாக இருந்தால் அவர்கள் திருட்டுத்தனம் செய்பவர்களாக இருப்பார்கள். வளையக் கூடிய புருவங்கள் உள்ளவர்கள் பெரிய பதவியில் அமர்வார்கள். இசையில் அவர்களுக்கு ஆர்வம் இருக்கும்.
பெண்களின் கூந்தல் நீண்ட கருங்கூந்தலாக இருக்க வேண்டும். கோர முடி குடியைக் கெடுக்கும். சுருட்டை முடி சோறு போடும் என்பார்கள். ரோமக் கால்கள் எந்த அளவிற்கு மென்மையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு வாழ்க்கை மென்மையாக இருக்கும்.
மூக்கு உயர்ந்து காணப்படுவது நலம். மூக்கின் நுனி கூராக இருந்தால் அரசாளும் யோகம் உண்டு.
சாமுத்ரிகா லட்சணத்தில் நெற்றி மிக முக்கியமான இடத்தில் உள்ளது. உயர்ந்த நெற்றி அறிவின் அடையாளம். நெற்றியில் இரண்டு அல்லது மூன்று கோடுகள் இருந்தால் சிந்தனை அறிவு கொண்டவர்களாக இருப்பர்.
செவியின் அமைப்பு பரந்து விரிந்து இருக்க வேண்டும். செவி குறுக மனமும் சிந்தனையும் குறுகலாக இருக்கும்.
பெண்களுக்கு உடம்பில் கற்பூர வாசனை, சந்தன வாசனை எலுமிச்சை வாசனை, தாழம்பூ வாசனை, தாமரைப்பூ வாசனை வருமானால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள்.