
தலைமுடிக்கு கலரிங் செய்வதில் இரண்டு வகை உள்ளது. ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு குறிப்பிட்ட நாளிற்கு மட்டும் என தற்காலிகமாக கலரிங் செய்துகொள்வது. மற்றொன்று தேவைப்பட்ட நிறத்தை போட்டுக்கொண்டு ஒரு வருட காலத்திற்கு அதே நிறத்துடன் இருப்பது.
தற்காலிக ஹேர் கலரிங்:
இதனை அநேகமாக நாகரீகமாக இருக்க விரும்பும் இளம்பெண்கள், கல்லூரி மாணவிகள் செய்து கொள்கின்றனர். வீட்டிலோ கல்லூரியிலோ, வெளியிடத்திலோ விசேஷங்களிலும் பார்ட்டியிலும் கலந்துகொள்ளும்போது உடைக்கு ஏற்றபடி தலையை சற்று கவர்ச்சிகரமாக மிக வித்தியாசமான நிறங்களில் கலரிங் செய்துகொள்கிறார்கள் அடுத்த நாள் தலைக்குக் குளிக்கும்போது இந்த வண்ணம் சுத்தமாகப் போய்விடும்.
நிரந்தரமான ஹேர் கலரிங்:
இம்முறையில் தலைக்கு வண்ணத்தை போட்டுக் கொள்பவர்கள் ஒரு வருடத்திற்கு அப்படியே வைத்துக்கொள்ளலாம். அதன் பிறகும் அந்த நிறத்தையே தொடர்ந்து வைத்துக்கொள்ள விரும்புவோர் அதனையே நான்கு மாதத்திற்கு ஒருமுறை போட்டுக்கொள்ளலாம். அதோடு மட்டுமல்லாமல் தலைமுடியை தரமான ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தி அலசினால் நிறம் போகாமல், தலைமுடி நன்றாக இருக்கும்.
இவ்வாறு தலைமுடிக்குப் போடக்கூடிய கலர்கள் என்னென்ன தெரியுமா? பர்கண்டி, மஹோகனி, காப்பர், கோல்டு, சிகப்பு, சில்வர், பழுப்பு மற்றும் ப்ளாண்ட்.
நல்ல சிவந்த நிறம் உடைய பெண்கள் தலைக்கு பர்கண்டி, மஹோகனி, காப்பர் ஆகிய நிறங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து போட்டுக் கொண்டால் அவர்கள் முகம் மேலும் அழகாகவும், கம்பீரமாகவும் தோற்றமளிக்கும்.
சற்றே நிறம் குறைவாக உள்ளவர்கள் பழுப்பு, ப்ளாண்ட் போன்ற நிறங்களைப் போட்டுக்கொள்வது நல்லது. சிலருக்குத் தலைமுடி முழுவதும் வெள்ளையாக இருக்கும். இதனால் மனதில் தாழ்வுமனப்பான்மை ஏற்பட்டு பலருடன் பழகவே தயங்குவார்கள். அவர்கள் தங்கள் தலைக்கு மருதாணியைப் போட்டால் முடி சரியாக சாயம் ஏறாமல் ஆரஞ்சு நிறமாக பார்க்க விகாரமாக இருக்கும். இவர்களைப் போன்றோர் உடல் நிறத்திற்கேற்ப தலைமுடிக்கு கலர் போட்டுக்கொண்டு விட்டால் மனதில் தாழ்வுமனப்பான்மை நீங்கி தைரியமாக இருக்கலாம். இதற்குப் பதில் வெள்ளை முடி முழுவதிலும் சில்வர் நிறத்தைக் கூடப் போட்டுக்கொள்ளலாம். கம்பீரம் தெரியும்.
சற்றே வயதானவர்கள் தலைமுடி முழுவதையும், கறுப்பாகவோ, பழுப்பாகவோ சாயமிட்டுக் கொள்ள தயக்கப்படுவார்கள். அவர்களுக்குத் தலையின் இருபுறத்தையும் கறுப்பு அல்லது பழுப்பு நிறமேற்றி, முன்னால் உள்ள முடிகற்றையில் சிறிதை மட்டும் வெள்ளையாக அல்லது சில்வர் நிறமேற்றி விட்டால் கம்பீரமாகவும், கண்ணியமாகவும் உள்ள தோற்றம் கிடைக்கும்.
தலைமுடிக்குக் கலரிங் செய்வது மிகவும் வசதி படைத்தவர்களால்தான் முடியும் என்று எண்ண வேண்டாம். யாவரும் செய்து கொள்ளக்கூடிய அளவிற்குத்தான் செலவாகும். தலைமுடிக்குப் போடும் சாயங்கள் பலவித தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்டு கடைகளில் விற்கப்படுகிறது. அவற்றில் நல்ல தரமான பொருளை தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் முடி பாதிக்கப்படும். இதனை வீட்டில் செய்துகொள்ளலாம் என்று நினைப்பது தவறு. அழகு நிலையங்களில் செய்துகொண்டால்தான் முடி பாதிக்கப்படமல் இருக்கும். கலரை சரியாக கலப்பதற்கும், சீராகப் போடுவதற்கும் தெரிய வேண்டும். இல்லாவிட்டால் தலைமுடிக்குக் கீழே உள்ள தலைப்பகுதியெல்லாம் நிறமேறி பார்க்க விகாரமாக இருக்கும்.
ஹேர் கலரிங் செய்யும்போது கவனிக்கப்பட வேண்டிய சில குறிப்புகள்:
1 ஹேர் கலரிங் செய்யும்போது தலை முடியில் எண்ணெய் இருக்கக்கூடாது. இருந்தால் ஷாம்பூ போட்டு அலசி துடைத்த பிறகே கலரைப் போடவேண்டும்.
2. கலர்களினைப் போட அடிப்படைக் கலர் - பேஸ் கலர் ஒன்றும், சேர்க்கும் கலர் ஒன்றும் இருக்கும். அதை அவரவர் விரும்பும் நிறத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுத்து, சரியாகப் போட வேண்டும். கறுப்பு, பழுப்பு, ஆழ்ந்த பழுப்பு ஆகியவையே அடிப்படை நிறங்கள்.
3. கடையில் நிறங்களை வாங்கும்போது நிறத்தின் பெயர் எழுதியுள்ளதா என்று கவனிக்கவும். இதற்கு எண்கள் என்ற குறிப்பெல்லாம் கிடையாது நிறத்தின் பெயர் மட்டுமே எழுதப்பட்டிருக்கும்.
4. தலைமுடி வெள்ளையாக இருந்தால் கறுப்பு நிறத்தையும் பழுப்பு நிறத்தையும் கலந்தால் இயற்கையான கறுப்பு நிறம் கிடைக்கும். அல்லது பழுப்பு நிறத்தையும். ஆழ்ந்த பர்கண்டி நிறத்தையும் கலந்துபோட்டால் இயற்கையான நிறம் கிடைக்கும்.
5. தலைக்குச் சாயம் போட்டுக்கொள்ள விரும்புவோர் ஏற்கெனவே மருதாணி போட்டிருந்தால் முதலில் முடியை மென்மையாக்க ஹேர் சாப்டினிங் செய்துகொள்ள வேண்டும். காலா மெஹந்தி அல்லது 'டை' போடுபவர்களும் தலையை மென்மைபடுத்திக் கொண்டு பிறகு நிறத்தைப் போட்டுக்கொள்வது நல்லது.
6. சிலர் தலைமுடியை 'பொமிங்' என்ற முறையில் சுருட்டையாக்கிக்கொள்ள விரும்புவார்கள். சிலர் முடியை நீட்டமாக்கல்' முறையில் நீட்டிக்கொள்வார்கள். அவர்கள் இவற்றைச் செய்யும் முன் கலரிங் செய்துகொண்ட பிறகே இவற்றைச் செய்ய வேண்டும்.
- ராஜ்யஸ்ரீ சந்திரசேகர்