குன்றாமல் - குறையாமல் அள்ளித் தரும் அட்சய திருதியை!


Akshay Trithi...
Akshay Trithi...

‘அட்சய’ என்பதற்கு சம்ஸ்கிருதத்தில் ‘எப்போதும் – குறையாதது’ எனும் பொருள் ஆகும். நல்ல பலன்களை, வெற்றிகளைத் தரும் நாளென்பதால், புகுத் தொழில் தொடங்குவது ; வீடு - மனைகள் மற்றும் தங்கம் - வெள்ளி நகைகளில் ஏதாவது ஒன்றை புதிதாக வாங்குவது; கட்டடம் கட்ட பூஜை போடுவது போன்ற பலவற்றிற்கு அட்சய திருதியை நன்னாளை அநேகர் எதிர்பார்ப்பது வழக்கம்.

சித்திரை மாத வளர்பிறையில், அமாவாசையை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவது அட்சய திருதியை.

அட்சய திருதியை பூஜை முறை:

அன்றைய தினம் 'அதிகாலையில் எழுந்து ஸ்நானம் செய்து, சுத்தமான ஆடை அணிந்து, நெற்றியில் திலகமிட்டு, பூஜை அறையில் கோலமிட வேண்டும். கோலத்தின் மீது மணைப்பலகை ஒன்றை வைத்து, ஒரு வாழையிலையை நடுவிலிட்டு, அதன் மத்தியில் கொஞ்சம் பச்சரிசியைப் பரப்ப வேண்டும்.

இதன் மேல் செம்பொன்றில் நீர் நிரப்பி,  மாவிலை மற்றும் மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்கி, சந்தனம் - குங்குமமிட்டு பூவைக்க வேண்டும். கலசமருகே, ஒரு தம்ளரில் நெல் நிறைத்து வைப்பது அவசியம். லட்சுமி நாராயணர் படம்வைத்து அலங்கரித்தபின் அலங்கரித்த குத்து விளக்கினை ஏற்றவும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வாழை. இலையின், வலப்பக்கத்தில் வைத்துக்கொள்ளவும்.

பூஜை அறை...
பூஜை அறை...Image credit - youtube.com

புதியதாக வாங்கிய ஏதாவது ஒரு பொருளை, அது கல் உப்பாக இருந்தாலும் சரி. கலசத்தின் முன்பு வைத்து, இறைவனது ஸ்லோகங்களைக் கூறி வழிபடவும். பாயாசம், பழங்கள் நிவேதனமாக படைத்து, தூப - தீபம் காட்டி, கடவுளை மனதார வேண்டவும்.

தானமாக காசைக் கொடுக்காமல், உபயோகப்படும் பொருளாக கொடுப்பதுவும், வஸ்திர தானம், அன்ன தானம் போன்ற பலவற்றை செய்வதுவும் சிறப்பாகும். ஆலய வழிபாடு இன்றைய தினம் மிகவும் உகந்ததாகும்.

அட்சய திருதியையின் விசேடங்கள்:

* வேத வியாசர் மகாபாரத இதிகாசத்தை எழுதுமாறு விநாயகரிடம் கூறிய நாள்;

* நமது முன்னோர்களை நினைவு கூர்ந்து வழிபடும் தினம்;

* காசி அன்னபூரணி தாயாரிடமிருந்து சிவபெருமான், தன்னுடைய பிட்சை பாத்திரம் நிரம்புமளவு உணவினைப் பெற்ற நாள்;

* பாஞ்சாலியின் மானத்தை சபையில் காக்க, கிருஷ்ன பகவான் ‘அட்சய’ எனக் கூறி, ஆடையை வளரச் செய்த நன்னாள்;

பாஞ்சாலி...
பாஞ்சாலி...

* பகீரதன் தவமிருந்து, இந்தியாவின் மிகப்புனிதமான புண்ணிய நதியாகிய கங்கையை சொர்க்கத்திலிருந்து, பூமிக்கு வரவழைத்த தினம்;

* திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகிய பரசுராமரின் பிறந்த நாள்;

* சமணர்களின் முதல் தீர்த்தங்கரான் ரிசபநாதர் தனது ஓராண்டு கடுந்துறவு வாழ்வை நிறைவு செய்து, தமது குவிந்த் கைகளில் ஊற்றப்பட்ட கரும்புச் சாற்றினைப் பருகிய நாள்;

* வங்காளத்தில் இது ‘அல்கதா' எனும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது விநாயகர் மற்றும் லட்சுமி தேவியை வணங்கி புதிய வணிக கணக்குப் புத்தகத்தை எழுதத் தொடங்கும் நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.

இவ்வாறு எத்தனை எத்தனையோ சிறப்புக்களைக் கொண்ட நாள் அட்சய . திருதியை ஆகும்.

அட்சய திருதியை நன்னாளில், புதிய பொருள் வாங்க இயலாதவர்கள் கல் உப்பாவது வாங்கி வீட்டில் வைக்க வேண்டுமெனக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
தீர்வு காணுங்கள் வாழ்வு தித்திக்கும்!

Akshay Trithi...

முடிந்ததை தானம் செய்வது கோடிப் பசுக்களைத் தானம் செய்வதற்கு  ஒப்பானது என பாகவத புராணம் கூறுகிறது. இயலாதவர்களுக்கு உதவி செய்து, இல்லாதவர்களுக்குத் தானமளிப்பது மிகப்பெரிய செயலாகும்.

நல்லதே நடக்கவும்,  இறையருள் பெறவும், இத்தகைய புண்ணியச் செயல்கள் கண்டிப்பாக உதவும்.

அள்ளித் தரும் அட்சய திருதியை அன்புடன் வரவேற்போம்.

‘ஓம் நமோ நாராயண!

ஓம் நமோ விஷ்ணுவே நம:

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com