

“தேவையே கண்டு பிடிப்புகளின் தாய்” (Necessity is the Mother of Invention) என்பது முதுமொழி. மனித வாழ்க்கையில் ஏற்படும் சங்கடங்களைப் போக்க, ஏற்கெனவே எந்த வழிமுறைகளும் சொல்லப்படாத நிலையில், அவற்றிலிருந்து வெளியேவர சிலர் எடுக்கும் விடாத முயற்சிகளாலேயே புதியவை அறிமுகமாகின்றன.
அவ்வாறு அறிமுகப்படுத்தப்படுபவை, அது போன்ற இன்னல்களுக்கு ஆளாவோருக்கு எளிதான தீர்வை அளிப்பனவையாக அமைந்து விடுகின்றன. யாரோ ஒருவர் கஷ்டப்பட்டுக் கண்டு பிடித்தது, உலகத்தார் உய்ய வழியேற்படுத்திக் கொடுக்கும் உபாயமாக அமைந்து விடுகிறது.
கோடையில் நம்மூரில் வெயில் சதமடிக்கிறது. அனலாய்க் கொதித்து அனைத்து வயதினரையும் அல்லலுறச் செய்கிறது. ஏசி தியேட்டர்களும், ஏசி மால்களும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. ஊட்டியும், கொடைக்கானலும் மக்கள் படையெடுப்பால் விழிபிதுங்கி நிற்க, எண்ணற்ற வாகனங்களால் சாலைகள் சங்கடத்தில் திகைக்கின்றன.
ஊட்டி வெதரை நம் வீட்டிற்குள்ளேயே கொண்டு வர உதவும் சாதனம்தான் ஏர் கண்டிஷன் எனும் ஏசி. இதனைக் கண்டு பிடித்ததே ஒரு தனிக்கதை!
ஏசி வரலாறு மற்றும் ஐஸ் கட்டிகளின் பயன்பாடு:
அமெரிக்காவின் புரூக்ளினில் ஓர் அச்சுக் கூடத்தில் காகிதங்கள் அதிக ஈரப்பதத்தால் சுருங்குவதைத் தடுக்க, காற்றைக் குளிர்வித்து ஈரப்பதத்தை முறைப்படுத்தும் ஒரு கருவியை (Apparatus for Treating Air) வில்லிஸ் கேரியர் (Willis Carrier) என்பவர் 1902 ஆம் ஆண்டு கண்டு பிடித்தார்.
அதற்கு அரை நூற்றாண்டுக்கு முன்பாகவே 1842-ல் ஜான் கோரி என்ற மருத்துவர் (Dr.John Gorrie) மருத்துவமனை அறைகளைக் குளிர்விக்க ஐஸ் கட்டிகளை நிரவிக் காற்றைக் குளிரூட்டும் முறையை அறிமுகப்படுத்தியிருந்தார்! இருந்தாலும் நவீன ஏசியின் தந்தையாக வில்லிஸ் கேரியரே வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.
1915 ஆம் ஆண்டில் கேரியர் ஏசி நிறுவனத்தைத் தொடங்கி, வணிகப் பயன்பாட்டிற்கு ஏசியைக் கொண்டுவர வழி செய்தார். இருந்தாலும், ஐஸ் கட்டிகளைக் கொண்டு இருக்குமிடத்தைக் குளிர்விப்பதும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.
ஏசியில் கேஸ் பயன்படுத்தப்படும் நிலையில், அது இன்றி ஐஸ் கட்டிகளை வைத்து மின் விசிறிகளின் மூலம் காற்றைக் குளிராக்குவது என்பது செலவு குறைந்ததாகவும், பாதுகாப்பானது என்றும் உணரப்பட்டிருக்கும் போலும். அதன் காரணமாகவே அக்கால ரயில்களிலும் அந்த முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்திய ரயில்களில் ஏசி வரலாறு கடந்து வந்த பாதை:
தற்போது ரயிலின் அத்தனை கம்பார்ட்மெண்டுகளும் ஏசியாக உள்ளன. அதிலும் இந்தக் கொளுத்தும் கோடையில், புறநகரின் இ.எம்.யூ ரயில்கள் கூட ஏசி ஆக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகளும் கூட ஏசிதான்!
கார்களில், குளிரக் குளிர ஏசியைப் போட்ட வண்ணம் பலர் நகரைச் சுற்றி வருகிறார்கள். தி.நகரின் ரங்கநாதன் ஸ்ட்ரீட்டில், இரண்டு பக்கமும் உள்ள ஏ.சிக் கடைகளின் குளிர்ச்சி சாலையில் செல்வோருக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஏசியின் அதீதப் பயன்பாட்டால், அடிக்கடி மின்தடை ஏற்படுவதும் தற்பொழுது மாநகரில் வாடிக்கை நிகழ்ச்சியாகி விட்டது.
ஆனால், நம் இந்திய நாட்டின் முதல் ஏசி ரயில் 1936 ல் பம்பாய்க்கும் பரோடாவுக்கும் இடையே இயக்கப்பட்டுள்ளது. அப்பொழுது எல்லா பெட்டிகளுக்கும் ஏசி கிடையாதாம். குறிப்பிட்ட இரண்டு, மூன்று பெட்டிகள் மட்டுமே ஐஸ் கட்டிகள் மூலம் குளிர்ச்சியாக்கப்பட்டுள்ளன.