மயிலாப்பூர் மாடவீதிகளில் வண்ணக் கோலங்கள்: ஒரு கலைத் திருவிழா!
மார்கழி என்றாலே மயிலாப்பூர் மாடவீதிகளில் தினமும் கொண்டாட்டம்தான். தினமும் அதிகாலையில் வீதி பஜனைகள், நாம சங்கீர்த்தனம், வேத கோஷங்கள் என மயிலாப்பூர் களைகட்டும். மார்கழி முடிவுறும் சமயம் 'மயிலாப்பூர் ஃபெஸ்டிவல்' வெகு கோலாகலமாக நடைபெறும். நம்முடைய பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் அற்புதமான நிகழ்வாக இது உள்ளது. நாள்தோறும் விதவிதமான நிகழ்ச்சிகள், போட்டிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்கிறது.
மதியம் 3 மணிக்கு கோலப்போட்டி, ரங்கோலி போட்டி ஆரம்பமாகும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் 2 1/2 மணியில் இருந்தே மக்கள் வரிசையில் நின்று ரெஜிஸ்டர் பண்ண காத்திருந்தார்கள். இதில் பல தலைமுறையினர் ஆர்வத்துடன் பங்கேற்றார்கள். ஆண்கள், பெண்கள் வித்தியாசமின்றி இரு தரப்புமே இதில் கலந்து கொண்டது.
இது மயிலாப்பூரின் கலாச்சார பாரம்பரியத்தையும், கொண்டாட்ட மனப்பான்மையும் மிக அழகாக பிரதிபலித்தது. வடக்கு மாட வீதியில் நடத்தப்படும் இந்த போட்டிகளில் கலந்து கொள்வதற்காக நிறைய மக்கள் மயிலாப்பூர் மட்டுமல்லாமல் சுற்று வட்டாரங்களில் இருந்தும், வெளியிடங்களில் இருந்தும் வந்து கலந்து கொண்டார்கள்.
மயிலாப்பூர் திருவிழாவில் பலரையும் கவரும் விஷயம் இந்தக் கோலப்போட்டிதான். எல்லா வயதினரும் கலந்து கொண்டார்கள். தெரு முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு, தண்ணீர் தெளிக்கப்பட்டது. போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது. 25 ரங்கோலி கோலத்திற்கு, 25 புள்ளிக்கோல போட்டிக்கு சேர்க்கை என்று அறிவித்திருந்தார்கள்.
ஆனால் நிறைய பேர் காத்திருப்பதைக் கண்டு விதிகள் தளர்த்தப்பட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டது. போட்டி ஆரம்பித்தவுடன் மக்கள் கடகடவென்று அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தங்கள் தளவாடங்களுடன், உதவி செய்ய, உற்சாகப்படுத்த, காபி, டீ வாங்கித்தர நண்பர்கள், உறவினர்களுடன் களமிறங்கினார்கள்.
குனிந்த தலை நிமிராமல் ஒரு பக்கம் புள்ளி கோலம், ஒரு பக்கம் ரங்கோலி என ரொம்ப பரபரப்பாக கோலம் போட ஆரம்பித்தனர். புள்ளிக்கோலம் நம்மை ரொம்பவே பிரமிக்க வைத்தது. ஒரு பெண் சிவனை புள்ளிக்கோலத்தில் (சிக்கு கோலம்) போட்டு பரிசை தட்டிச் சென்றார். ஆண்மகன் ஒருவர் பொங்கல் பானையை ரங்கோலியில் விதவிதமான கலர் பொடியில் போட்டு அசத்திவிட்டு பரிசையும் தட்டிச்சென்றார்.
பரிசு வாங்கியதும் அவருக்கு முகமெல்லாம் ஒரே சிரிப்பு, சந்தோஷம். புள்ளிக்கோலம் (எப்படி துவங்கி எப்படி முடிக்கிறார்கள், தலை சுத்தாதோ? பார்த்த நமக்கே சுற்றுகிறதே) போட்ட ஒரு பெண்மணி பரிசை வாங்கியதும் கூறியது: "என் பெண் தான் இதில் கலந்துகொள்ள சொன்னாள். வீட்டில் தினமும் அழகாக கோலம் போடும்பொழுது ஏன் இதில் கலந்துகொள்ள கூடாது? என்று கேட்டதால் கலந்து கொண்டதாகவும், பரிசு கிடைக்கும் என்று சிறிதும் நினைக்கவில்லை" என்றும் கூறினார்.
கோலம் போட்ட அனைத்து ரவி வர்மாக்களையும், கோலங்களையும் ஒரே இடத்தில் பார்த்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. மயிலாப்பூர் திருவிழாவின் பொழுது மாடவீதிகளில் வரையப்படும் கோலங்கள், வெறும் ஓவியங்கள் அல்ல; அவை அந்தப் பகுதியின் கலாச்சாரம், கலைத்திறன் மற்றும் மக்களின் உற்சாகத்தைக் காட்டும் வண்ணமயமான கலை படைப்புகள்.

