
கர்நாடகாவிலுள்ள ஒரு முன்னாள் சுதேச மாநிலமான கிட்டூரின் இந்திய வீர ராணி சென்னம்மா ஆவார். தனது ஆதிக்கத்தின் மீது உள்ள கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக ஆயுதமேந்திய எதிர்ப்பை, கிட்டூர் ராணி சென்னம்மா வழி நடத்தினார்.
முதல் கிளர்ச்சியில், பிரிட்டிஷ் கம்பெனியை தோற்கடித்தார், ஆனால், இரண்டாவது கிளர்ச்சிக்குப் பிறகு போர்க்கைதியாக இறந்தார். பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு எதிராக, படைகளை வழிநடத்திய முதல் மற்றும் சில பெண் ஆட்சியாளர்களில் ஒருவராக, கர்நாடகாவின் ஒரு நாட்டுப்புற நாயகியாக இன்றும் ராணி சென்னம்மா தொடர்ந்து நினைவு கூறப்படுகிறார். அவர் இந்திய சுதந்திர இயக்கத்தின் ஒரு முக்கிய அடையாளமாகவும் கிட்டூர் ராணி சென்னம்மா உள்ளார் .
கிட்டூர் ராணி சென்னம்மா பிறப்பு, வளர்ப்பு, முன்னேற்றம் குறித்த விபரங்கள்
கிட்டூர் ராணி சென்னம்மா, இந்தியாவின் கர்நாடகாவின் தற்போதைய பெலகாவி மாவட்டத்தில் உள்ள ககாதி என்ற சிறிய கிராமத்தில் 1778 நவம்பர் 14 அன்று பிறந்தார். ககாதி ஒரு சிறிய சமஸ்தானமாக விளங்கியது. சென்னம்மாவின் தந்தை துலப்ப தேசாய், தாயார் பத்மாவதி. லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த சென்னம்மா, தனது இளம் வயதிலிருந்தே குதிரையேற்றம், வாள் சண்டை மற்றும் வில் வித்தை ஆகியவற்றில் பயிற்சி பெற்றார். தேசாய் குடும்பத்தைச் சேர்ந்த ராஜா மல்லசர்ஜாவை 15 வயதில் திருமணம் முடித்தார்.
சென்னம்மாவின் கணவர் இறக்கையில், அவருக்கு ஒரு மகனும், நிலையற்ற தன்மை கொண்ட ஒரு மாநிலமும் பிறந்தன. சில வருடங்களில் மகனும் இறந்து போக, கிட்டூர் மாநிலம் மற்றும் ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரத்தைப் பேணுவது கடினமாக இருந்தது. உடனே கிட்டூர் ராணி சென்னம்மா, சிவலிங்கப்பாவைத் தத்தெடுத்து, அரியணை வாரிசாக்கினார். கிழக்கிந்திய நிறுவனத்திற்கு இது பிடிக்காமல் போக, சிவலிங்கப்பாவை வெளியேற உத்தரவிட்டனர்.
பிரிட்டிஷாருடன் போர்
கிட்டூர் மாநிலம் தார்வாட் கலெக்டர் அலுவலக நிர்வாகத்தின் கீழே வந்தது. அப்போது கமிஷனராக இருந்த சேப்ளின், கிட்டூர் ராணி சென்னம்மாவின் புதிய ஆட்சியை அங்கீகரிக்கவில்லை. பிரிட்டிஷ் கட்டுப்பாட்டை ஏற்குமாறு உத்தரவிட்டார்.
கிட்டூர் ராணி சென்னம்மா தனது வழக்கை வாதிட்டு பம்பாய் மாகாணத்தின் லெப்டினன்ட் கவர்னர் மவுண்ட் ஸ்டுவர்ட் எல்பின்ஸ்டோனுக்கு கடிதம் அனுப்பினார். கிட்டூர் ராணியின் கோரிக்கை நிராகரிக்கப்பட, போர் ஆரம்பமானது. அச்சமயம், சுமார் 1.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கிட்டூர் கருவூலம் மற்றும் கிரீட நகைகளைச் சுற்றி காவலாளிக் குழு ஒன்றை ஆங்கிலேயர்கள் நிறுத்தினர். பிரிட்டிஷ் படைகளுக்கு நிறைய இழப்பு ஏற்பட்டது. இதற்கெல்லாம், ராணி சென்னம்மாவின் லெப்டினன்ட் அமதூர் பாலப்பா முக்கிய காரணமாக விளங்கினார்.
முதல் போரில் கிட்டூர் ராணி சென்னம்மாவிற்கு வெற்றி கிடைத்தது. இரு பிரிட்டிஷ் அதிகாரிகள் பயணக் கைதிகளாக பிடிக்கப்பட்டபோது, போர் முடிவுக்கு வரும் என்று சேப்ளின், ராணி சென்னம்மாவிடம் கூறினார். ஒரு புரிதலுடன் ராணி சென்னம்மா பணயக் கைதிகளை விடுவித்ததும், சேப்ளின் அதிகப் படைகளுடன் இரண்டாவது தாக்குதலை நடத்தி, கிட்டூர் ராணி சென்னம்மாவைக் கைது செய்து "பெய்ல் ஹோங்கல்" கோட்டையில் சிறை வைத்தார். ராணி சென்னம்மாவிற்கு ஏற்பட்ட உடல் நலக் குறைவால், அங்கேயே இறந்து போனார்.
கிட்டூர் ராணி சென்னம்மாவின் துணை அதிகாரி சங்கொல்லி ராயண்ணா கொரில்லாப் போரைத் தொடர்ந்தார். பின்னர் பிடிபட்டுத் தூக்கிலிடப்பட்டார். சிவலிங்கப்பாவும் கைது செய்யப் பட்டார். கிட்டூர் ராணி சென்னம்மாவின் மரபு மற்றும் முதல் போரில் அவர் வெற்றி பெற்றது போன்றவைகள் வருடந்தோறும் நடைபெறும் கிட்டூர் உத்சவத்தின் போது (அக்டோபர் 22-24) நினைவு கூறப்படுகிறது.
உபரித் தகவல்கள்
2025 பெங்களூரு லால் பாக் தாவரவியல் பூங்காவில் தற்சமயம் நடைபெறும் 218 ஆவது மலர் கண்காட்சியில், (ஆகஸ்ட் 7 முதல் 17 தேதி வரை ) கருப்பொருளாக இந்திய சுதந்திர இயக்கத்தின் முக்கிய அடையாளமாக விளங்கிய 'வீர ராணி கிட்டூர் சென்னம்மா' மற்றும் 'சங்கொல்லி ராயண்ணா' நினைவு கூறப்படவிருக்கின்றனர்
கிட்டூர் ராச்சியத்தின் வரலாறு, புகழ் பெற்ற கிட்டூர் ராணி சென்னம்மா மற்றும் தளபதி சங்கொல்லி ராயண்ணாவின் வீரதீர செயல்களை, இந்த மலர் கண்காட்சியில் நினைவூட்டுவதே முக்கியமான நோக்கமாகும்.
இந்திய சுதந்திர இயக்கத்திற்கு முக்கிய அடையாளமாக விளங்கிய கிட்டூர் ராணி சென்னம்மாவை, நமது சுதந்திர நாளில், நாமும் நினைவு கூறி வணங்குவோம்.