
சமீபத்தில் நானும் எனது கணவரும் கார் விபத்தில் சிக்கி. சில காயங்களுடன உயிர் தப்பினோம். விபத்தைக் கேள்விப்பட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்களில் சிலர் ‘தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று’ என்றும், சிலர் ‘தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்’ என்றும் ஆறுதல் கூறினர்.
இப்பழமொழிகளின் பொருள், ‘ஒரு பெரிய ஆபத்து அல்லது பிரச்னை சிறிய அளவோடு முடிந்து போனது’ என்பதாகும். அதாவது, ஆபத்து வந்தது, ஆனால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல், சிறிய சேதத்துடன் விலகிச் சென்றது என்பதைக் குறிக்கும். மேலும், ஒருவரது வாழ்க்கையில் ஏற்படும் ஆபத்துக்களில் இருந்து கடவுளின் துணையால் மட்டுமே தப்பிக்க முடியும் என்பதையும் வலியுறுத்துகிறது. இது கடவுள் மீதான பக்தியையும், நம்பிக்கையையும் குறிக்கிறது.
‘தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று’ என்ற பழமொழி உருவானதற்குப் பின்னால் ஒரு புராணக் கதை உள்ளது. இது, ஆபத்து வரும்போது கடவுளின் அருளால் அது பெரிய அளவில் இல்லாமல், சிறிய அளவில் முடிந்துவிடும் என்ற நம்பிக்கையை அளிக்கும்.
மகாபாரதப் போரின்போது மாவீரன் கர்ணனிடம் நாகாஸ்திரம் என்ற அஸ்திரம் இருந்தது. பாரதப் போருக்கு முன்னதாக குந்தி தேவி கர்ணனை சந்தித்து, அர்ச்சுனன் மீது ஒரு தடவைக்கு மேல் நாகாஸ்திரத்தை பிரயோகிக்கக் கூடாது என்றும், அர்ச்சுனனை தவிர மற்ற எவருடனும் போர் புரியக் கூடாது என்றும் வரம் வாங்கியிருந்தாள்.
போர்க்களத்தில் அர்ச்சுனனும் கர்ணனும் நேருக்கு நேராக சந்தித்துக் கொண்டனர். கர்ணன் தனது நாகாஸ்திரத்தை எடுத்தான். அர்ச்சுனனின் தலையைக் குறிவைத்து அம்பை செலுத்தினான். அப்போதுதான் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. அர்ச்சுனனின் தேரோட்டியாக இருந்த கண்ணன் தேரை தன் காலால் பூமியுள் ஒரு அடி அழுத்தினார். அர்ச்சுனனின் தலையை நோக்கி வந்த நாகாஸ்திரம் அர்ச்சுனனின் தலைப்பாகையை தாக்கிவிட்டுச் சென்றது. இதனால் அர்ச்சுனனின் உயிர் காப்பாற்றப்பட்டு விட்டது.
இந்த நிகழ்விலிருந்துதான் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்ற பழமொழி தோன்றியது. மேலும் இப்பழமொழியை, ‘தலை தப்பியது தம்பிரான் (கண்ணபிரான்) புண்ணியம்’ என்றும் கூறுவர்.
‘தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்’ என்பது ஒரு பிரபலமான பழமொழி. இதன் பொருள், ஒரு பெரிய ஆபத்திலிருந்து தப்பிப் பிழைப்பது கடவுளின் அருளால் மட்டுமே முடியும் என்பதாகும். இங்கு, ‘தலை’ என்பது உயிருக்கு ஆபத்தான நிலையையும், ‘தம்பிரான்’ என்பது கடவுளையும் குறிக்கும். உதாரணமாக, ஒரு விபத்தில் இருந்து உயிர் தப்புவது அல்லது ஒரு கொடிய நோயிலிருந்து குணமடைவது போன்றவற்றைக் குறிப்பிடலாம். எனவே, அல்லல் மற்றும் பேரிடர்களிலிருந்து எதிர்பாராதவிதமாக நாம் காப்பாற்றப்பட்டால் அது இறையருளால் மட்டுமே நிகழும் ஒரு அதிசயம்.