சுவரில் தீற்றிய கரி!

Anmiga katturai
Anmiga katturai
Published on

- கே. நிருபமா, புனே

ண்டைக் காலத்தில் பண்டரிபுரத்தில் பணக்கார பாண்டுரங்க பக்தர், தமது மனைவியுடன் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த கொடையாளியும் கூட! அவர் சதாகாலம் கடவுள் நாமத்தையே ஸ்மரித்துக் கொண்டிருந்தார். அவர் பகவத்கீதையின் ஒன்பதாவது அத்தியாயத்தில் வரும்
"அனன்யாஸ்சிந்தயந்தோ மாம்,யே ஜனா: பர்யுபாஸதே;
தேஷாம் நித்யாபியுக்தானாம் யோக க்ஷேமம் வஹாம்யஹம்'
என்கிற ஸ்லோகத்தை வீட்டின் சுவர்களில் அங்கங்கே எழுதி வைத்திருந்தார். வீட்டிற்கு வருபவர்கள் எல்லாருமே அதைப் படித்துப் பயன் பெற வேண்டுமென்பதே அவர் நோக்கம். "கடவுள் ஒருவரேதான் நம் யோகக்ஷேமங்களைக் கவனிப்பவர்" என்று எல்லோரிடமும் சொல்லி மகிழ்வார். தனது செல்வம் அனைத்தையும் வாரி வழங்கினார். பழம் பழுத்த மரம்போல் தன்னை அண்டியவற்கு அடைக்கலம் அளித்தார். நாளடைவில் பணத்தையெல்லாம் இழந்து வறிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார். நோய் தாக்கி, படுத்த படுக்கையானார்.

''நாம் எங்கேயாவது சென்று பிச்சை யெடுத்தால்தான் பிழைக்க முடியும்" "எனப் புலம்பினாள் அவரது மனைவி. அவளது கணவரோ, எதற்கும் செவி சாய்க்காமல் முதலில் குறிப்பிட்ட அதே பகவத்கீ ஸ்லோகத்தையே ஓயாமல் உச்சரித்து வந்தார். அவர் மனைவி மனம் நொந்துபோய் பிச்சை கேட்கப் போகுமுன்பு, சுவரில், ஸ்லோகம் எழுதியிருந்த பக்கமெல்லாம் கரியைத் தீற்றி விட்டுப் போனாள். நன்றாக வாழ்ந்த அதே ஊரில் உடல் குறுகி, கை நீட்டிப் பிச்சை கேட்டாள். ஆனால், உதவும் கரங்கள் இன்றி இழிவுபட்டாள்.

வேதனையுடன் வீடு திரும்பிய மனைவிக்குப் பேராச்சரியம் ஒன்று காத்திருந்தது. வீடு முழுதும் அறுசுவைப் பலகாரங்களும், ஆடை ஆபரணங்களும், தானிய மூட்டைகளும் நிரம்பி வழிந்தன.

"நீ சென்ற பின்னர் பேரழகனான ஓர் இளைஞன் வண்டியில் வந்து, "இதை யெல்லாம் உங்கள் இருவருக்காகக் கொண்டு வந்தேன்!" என்று சொல்லி,எனக்கு உணவு ஊட்டிவிட்டுப் போனான்.

அவன் கை பட்டதில் என் நோய் தீர்ந்து, முதுமை நீங்கி, உடல் திடகாத்திரமாகிவிட்டது. இதோ, பார்! இதுதான் அவன் வந்துவிட்டுப் போனதற்கு அடையாளம்'', என்று கூறி, வீட்டுச் சுவரைக் காண்பித்தார். அவள் பிச்சைக்குப் போகும்முன் கோபத்தில் பூசியிருந்த கரியைக் காணவில்லை. மீண்டும் அர்ஜுனனுக்குக் கண்ணன் உரைத்த கீதையின் ஸ்லோகம் அழகாக எழுதப்பட்டிருந்தது! கணவனின் நோயும், முதுமையும் விலகியதைக் கண்ட பத்தினி, தானும் அந்த தெய்விக உணவைப் புசித்து இளமையும் ஆரோக்கியமும் அடைந்தாள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: தாய் என்பவள்...
Anmiga katturai

தேவைக்கு அதிகமாக உள்ள தானியங்களை அண்டை அயலாருக்குப் பகிர்ந்தளித்து, அவர்களிடம் நடந்தது என்ன என்று விசாரித்தாள். அவர்கள், "மன்மதனைத் தோற்கடிக்கும் அழகன் வந்தான். ஆனால் ஏனோ அவன் முகத்தில் ஆங்காங்கே கரித்திட்டுக்கள் இருந்தன. வண்டி நிறையப் பொன்னும், மணியும் கொண்டுவந்து கொடுத்து, உன் கணவருக்கு உணவு ஊட்டிவிட்டுச் சென்றானே, நீ பார்க்கவில்லையா?" என்று கேட்டனர்.

பக்தரின் மனைவி, தன் பிழையை உணர்ந்து, அந்தரங்க பக்தியுடன் பாண்டுரங்கனைத் துதித்தாள். தன் வாழ்நாள் முழுவதும் கண்ணன் நினைவில் திளைத்தாள்.

பின்குறிப்பு:-

மங்கையர் மலர் ஆகஸ்ட் 2010, இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com