ஓய்வு பெறவே முடியாத ஒரு பணி இருக்கிறது. அது என்ன தெரியுமா? தெரிந்து கொள்வதற்கு முன் இந்த உரையாடலைக் கொஞ்சம் கேளுங்கள்:
ஓர் அன்பர் தன் நண்பரிடம், ‘‘என்னப்பா, வேலையிலேர்ந்து ஓய்வு கிடைச்சாச்சு, இப்ப என்ன பண்ணிகிட்டிருக்கே?‘‘ என்று கேட்டார்.
அதற்கு நண்பர், ‘‘வொய்ஃபுக்குக் கூட மாட உதவி பண்ணிகிட்டிருக்கேன்,‘‘ என்று பதில் சொன்னார்.
அன்பர் பெரிதாகச் சிரித்தார். ‘‘உதவி பண்றியா? தப்புப்பா, நீ அவங்க வேலையில பங்கெடுத்துக்கறே. அதனால் உதவின்னு சொல்லாத, பங்களிப்புன்னு சொல்லு,‘‘ என்று நண்பரைத் திருத்தினார்.
உண்மைதான். சமைத்துப் போடுவது, வீட்டைப் பெருக்கி, மெழுகி, சுத்தமாக வைத்துக் கொள்வது, பாத்திரங்களைத் தேய்த்து அலம்பி, துடைத்து வைப்பது, வாஷிங் மிஷினில் துணிகளைத் துவைப்பது, பிறகு அவற்றைக் காயப்போடுவது என்ற பொதுவான தினசரி வேலைகளில் ‘உதவுவதா‘கச் சொல்வது என்பது அராஜகமான எதேச்சாதிகாரம் அல்லவா?
குடும்பத் தலைவிக்கு எப்போதுதான் ஓய்வு? மதியமோ, இரவிலோ உறக்கம் கொள்வதுதான் ஓய்வு அல்ல; தன் பொறுப்புகளை, கடமைகளை யாரேனும் பகிர்ந்து கொண்டால், அதுதான் நியாயமான ஓய்வு.
ஆனால் இப்போதுதான் வயது வித்தியாசம் பார்க்காமல் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் கொடுமை தினமும் நாலைந்து அரங்கேறுகிறதே! என்ன சட்டம் இருந்தென்ன, கைது, விசாரணை, தண்டனையும் இருந்தென்ன, குற்ற எண்ணிக்கை மட்டும் குறையவே இல்லையே! இந்த அழகில் பெண்கள் தினம், அன்னையர் தினம், சகோதரர் தினம், காதலர் தினம் என்று வருடந்தோறும் கொண்டாடுவதற்கு மட்டும் குறைச்சல் இல்லை.
சரி, பெண்கள் தினம் அனுசரிப்பது என்ற பழக்கம் எப்போது, ஏன் வந்தது, தெரியுமா?
1857, மார்ச் 8ம் நாள் நியுயார்க் நூற்பாலை ஒன்றில் பணிபுரிந்த பெண் தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் மற்றும் பணியிடத்தில் நிலவிய பாதுகாப்பற்ற சூழல் ஆகியவற்றை எதிர்த்துப் போராட்டம் மேற்கொண்டனர். ஆனால், அவர்கள் மீது தாக்குதல் நடத்தி போலீஸார் கடுமையாக நடந்து கொண்டார்கள்.
இந்த நிகழ்வின் ஐம்பதாவது ஆண்டை நினைவுகூரும் வகையில், அதேநாளில் 1907ம் ஆண்டு ஒரு பேரணி நடத்தப்பட்டது. இதுவே வருடந்தோறும் பெண்கள் தினமாக அனுசரிக்கப்பட ஆரம்பித்தது என்பது ஒரு சாரார் கருத்து.
பாலியல் வேறுபாடுகளை எதிர்த்தும், பெண்களுக்குச் சம உரிமை, வாக்களிக்கும் அதிகாரம் ஆகியவற்றை வலியுறுத்தியும் பெண்கள் மாநாடு ஒன்று 1909, பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவில் நடைபெற்றது. இந்த நாளை, பெண்கள் தினமாக சோஷலிஸக் கட்சி அறிவித்தது. அன்றைய தினமே வருடந்தோறும் பெண்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது என்றும் சொல்கிறார்கள்.
1913ம் ஆண்டுதான் உலகப் பொதுவெளியில் ரஷ்யாவில் முதன்முதலாகப் பெண்கள் தினம் அனுசரிக்கப்பட்டது.
1977ல் ஐக்கிய நாடுகள் சபை, தன் உறுப்பு நாடுகளை, மார்ச் 8ம் நாளை பெண்கள் உரிமை மற்றும் உலக சமாதான தினமாக அறிவிக்கும்படி கேட்டுக் கொண்டது. அன்றிலிருந்துதான் இந்த நாளுக்கு முறையான , முழுமையான அங்கீகாரம் கிடைத்தது.
சைனா, கியூபா, நேபாளம், ரஷ்யா, வியட்நாம், பல்கேரியா, ஹங்கேரி போன்ற நாடுகளில் பெண்கள் தினம், பொது விடுமுறை நாளாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. தங்கள் வாழ்வில் பெரும் பங்கு வகிக்கும் அன்னை, தாய், சகோதரி, மனைவி, மகள், பெண் நண்பர்கள் ஆகியோருக்கு மலர்களும், பரிசுப் பொருட்களும் வழங்கித் தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள் ஆண்கள். அதேபோல குழந்தைகள் தங்கள் தாய்மார்கள், மூத்தப் பெண்மணிகளுக்கு மரியாதை செலுத்தி ஆசி பெறுகிறார்கள்.
இத்தாலியில் ஆண்கள், பெண்களுக்கு மிமோஸா எனப்படும் அழகிய மஞ்சள் நிற மரக்கன்றுகளையும், இனிப்புகளையும் வழங்குகிறார்கள்.
போர்ச்சுகல் நட்டில் மார்ச் 8ம் நால் இரவில் பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
பெண்கள் மீது கடும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் பாகிஸ்தான், போலந்து போன்ற நாடுகளில் கூட பெண்கள் கூட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தி இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.
நம் நாட்டில் பெண்கள் தினம், பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் முடிவுக்குக் கொண்டு வரவும், அவர்களுக்கு கௌரவமான வாழ்வை அமைத்துக் கொடுக்கவும் உறுதி மேற்கொள்ளும் நாளாக அனுசரிக்கப்படுகிறது.
ஆனால் நடைமுறை அப்படி இல்லையே, இந்த துக்கத்தை எங்கே போய்ச் சொல்ல?