வங்கிக்கு பணம் எடுக்கப் போறீங்களா? இதைப் படிச்சிட்டு அப்புறம் போங்க!

பணம் எடுக்கப் போறீங்களா?
பணம் எடுக்கப் போறீங்களா?

ங்கிக்குச் சென்று பணம் எடுத்துக் கொண்டு வருபவர்களை திசை திருப்பி அவர்களுடைய பணத்தைத் திருடிச் செல்லும் ஒரு செய்தியை தற்காலத்தில் நாம் செய்தித்தாள்களில் அடிக்கடி படிக்க நேருகிறது. இதில் ஒரு பரிதாபம் என்னவென்றால் இத்தகைய செய்திகளை அடிக்கடி படிப்பவர்கள் கூட ஒரு கணம் தடுமாறி தங்கள் பணத்தை இழப்பதுதான்.

* வங்கிக்குச் சென்று ஒரு பெரிய தொகையை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் உங்கள் கணவனையோ, மகளையோ அல்லது மகனையோ உடன் அழைத்துச் செல்லுங்கள். முடியாத பட்சத்தில் உங்களுக்கு நம்பிக்கையான ஒருவரை அழைத்துச் செல்லுங்கள்.

* வீட்டிலேயே செக்கில் எழுத வேண்டியவற்றை எழுதி அதில் கையெழுத்திடாமல் வங்கிக்குச் செல்லுங்கள். வங்கியில் செக்கை எழுதினால் அருகிலிருந்து அதை யாராவது நோட்டமிட வாய்ப்பிருக்கிறது.

* வங்கிக்குச் சென்று அங்கு கையெழுத்திடுங்கள். ஒருவேளை வீட்டிலேயே கையெழுத்திட்டு அந்த செக் வழியில் தொலைந்து போனால் உங்களுக்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

* பெரிய தொகையை எடுக்கச் செல்லும்போது ஒருவித பய உணர்வு ஏற்பட்டு அதனால் பதட்டம் ஏற்படுவது இயல்புதான். நமது முகமே அதை பிறருக்குக் காட்டிவிடும். இத்தகைய சமயங்களில் இயல்பாக இருக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

* வங்கியில் முன்பின் தெரியாத யாரிடமும் பேசவே பேசாதீர்கள். உங்கள் கவனம் முழுவதும் பணத்தை பத்திரமாக வீட்டிற்குக் கொண்டு செல்வதில் மட்டுமே இருக்க வேண்டும்.

* கவுண்டரில் செக்கைக் கொடுத்ததும் வங்கி அலுவலர் அதற்குரிய தொயை உங்கள் கண் முன்னாலேயே எண்ணுவார். ஒரு டிஜிட்டல் மானிட்டர் நீங்கள் பார்க்கும்படி வைக்கப்பட்டிருக்கும். அதை கவனமாக சரிபாருங்கள்.

* பெரிய தொகை என்றால் நூறு எண்ணிக்கை கொண்ட ஐநூறு ரூபாய் பண்டலாகத்தான் தருவார்கள். வங்கிகளில் பொதுவாக அதை கவனமாக எண்ணிக் கட்டுவார்கள். ஒவ்வொரு கட்டிலும் நூறு எண்ணிக்கை சரியாகவே இருக்கும். எனவே ஐந்து லட்சம் என்றால் பத்து ஐநூறு ரூபாய் கட்டுக்களைத் தருவார்கள். அதை வாங்கியதும் பத்து கட்டுக்கள் இருக்கிறதாக என்பதை பதட்டமின்றி சரிபாருங்கள். உடனே அதை பைக்குள் பத்திரமாக வைத்து வங்கியிலிருந்து புறப்படுங்கள்.

செக்கில் எழுத வேண்டியவை...
செக்கில் எழுத வேண்டியவை...

* இத்தகைய சமயங்களில் வங்கிக்கு வரும் சிலர் உங்களிடம் படிவத்தை நிரப்பச் சொல்லி உதவி கேட்கக் கூடும். சிலர் பேனாவை இரவல் கேட்பார்கள். இத்தகைய சமயங்களில் “சாரி” என்று சொல்லி நகர்ந்து செல்லுங்கள். இப்போது உங்கள் பணி பிறருக்கு உதவுவதல்ல. உங்கள் பணத்தை வீட்டிற்கு பத்திரமாகக் கொண்டு செல்லுவது தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

* சிலர் பணத்தை எடுத்த உடனேயே பாஸ்புத்தகத்தை பிரிண்ட் செய்து அப்டேட் செய்து கொள்ள நினைப்பார்கள். இதை நீங்கள் தவிர்க்க வேண்டும். பாஸ் புத்தகத்தை நாளைக்குக் கூட நீங்கள் அப்டேட் செய்து கொள்ளலாம். கூடுதலான வேலை எதுவும் வைத்துக்கொள்ளாதீர்கள்.

* வங்கியில் நீங்கள் பணத்தை எடுத்ததும் அதை திருடர்கள் கவனித்து உங்களிடமிருந்து பணத்தை அபகரிக்க முயலக் கூடும். அவர்கள் உங்களைப் பின்தொடர்ந்து வந்து பத்து ரூபாய்த் தாள்களை கீழே போட்டு உங்களை அழைத்து “சார் உங்கள் பணம் கீழே விழுந்து விட்டது” என்று கூறுவார்கள். இப்படி யாராவது கூறினால் பதிலேதும் கூறாமல் நகர்ந்து விடுங்கள். நீங்கள் எடுத்த பணம் உங்கள் பையில் பத்திரமாக இருக்கும் போது பணம் எப்படி கீழே விழும்.

* வங்கிக்குச் செல்லும் போது அவசரத் தேவைக்காக இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுக்களை மட்டும் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அதுவும் இல்லாமல் போனால் இன்னும் நல்லது. இருக்கவே இருக்கிறது மொபைல் மூலம் பணம் செலுத்தும் வசதி. அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பணத்தைக் கொண்டு செல்லும் போது...
பணத்தைக் கொண்டு செல்லும் போது...

* சிலர் இரண்டு சக்கர வாகனங்களில் இருக்கைக்கு கீழே உள்ள பெட்டியில் பணத்தை வைத்து எடுத்துச் செல்லுவார்கள். அப்படி வைக்க நேரும் பட்சத்தில் வங்கியிலிந்து புறப்பட்டு நேராக வீட்டிற்குச் செல்லுங்கள். வழியில் டீ குடிக்க, கடைக்குச் செல்ல என எங்கேயும் வண்டியை நிறுத்தவே நிறுத்தாதீர்கள். உங்களைப் பின்தொடரும் திருடர்களுக்கு இது மிகவும் வசதியாகப் போய்விடும். உங்கள் பணத்தைத் திருட அவர்களுக்கு வெறும் இரண்டு நிமிடங்கள் போதும். இப்படி பணத்தை இழந்தவர்கள் ஏராளம். வீட்டிற்குச் சென்று பணத்தை பத்திரப்படுத்திவிட்டு அப்புறம் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள்.

இதையும் படியுங்கள்:
முகம், முடி, மூளை என மூன்றையும் பராமரிக்கும் ஒரே ஊட்டச்சத்து!
பணம் எடுக்கப் போறீங்களா?

* பணத்தைக் கொண்டு செல்லும்போது வழியில் உங்களுக்குத் தெரிந்தவர்கள் தென்பட்டால் அவர்களுக்கு வண்டியை ஓட்டியபடியே ஒரு ஹலோ சொல்லிவிட்டுக் கடந்து செல்லுங்கள். யாருக்காகவும் வண்டியை நிறுத்தாதீர்கள்.யாருடனும் பேச்சுக்கொடுக்காதீர்கள்.

இதையெல்லாம் செய்து பாருங்க. உங்க பணத்தை யாராலேயும் திருடவே முடியாது. உங்கள் பணம் உங்களிடம் பத்திரம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com