பொடி மகத்துவம்!

Arokya thagaval...
Arokya thagaval...
Published on

- கோவிந்தராஜன், சென்னை

ணவே மருந்து, மருந்தே உணவு’ என்பது சித்தர்களின் பழமொழியாகும். இன்றைய நிலையைப் பார்க்கும்போது மருந்தே உணவு என்ற சூழலில்தான் உலகம் உள்ளது. நம் ஆரோக்கியத்திற்குத் தேவையான சரியான உணவுகளைச் சாப்பிடாமல், உடலை அழிக்கும் விஷங்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதினால்தான் நோயாளிகளாகின்றோம். எனவே, நாம் நம் உணவுமுறைகளை மாற்றினாலே நோய்கள் எல்லாம் தீர்ந்துவிடும்.

நம் வீட்டில் சில அத்தியாவசியப் பொடிகள் இருந்தால், நாம் அதிகமாக மருத்துவமனைப் படிகளை மிதிக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்தப் பொடிகளை தேநீரில் கலந்தும், சாதத்தில் பிசைந்தும், கஷாயமாகவும் தேவைப்படும் சமயத்தில் சாப்பிடலாம்.

சுண்டவற்றல் பொடி:

குழந்தைகளுக்கு வயிற்றில் புழுக்கள் இருந்தால் வயிற்றுப்போக்கு ஏற்படும். அச்சமயங்களில் இந்தச் சுண்டவற்றல் பொடியைக் குழந்தைகளுக்குக் கைப்பிடி சாதத்தில் கலந்துகொடுப்பதன் மூலம் வயிற்றுப்போக்கைச் சரிசெய்யலாம்.

சுண்டவற்றலுடன் கறிவேப்பிலை, மாங்கொட்டைப்பருப்பு, மாதுளையின் ஓடு, ஓமம், வெந்தயம், நெல்லிக்காய் வற்றல் ஆகியவற்றைத் தேவையான அளவுக்கு எடுத்து, இவற்றைத் தனித்தனியே வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு தேவையானபோது அதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அஷ்டசூரணம்:

சாப்பிட்டு முடித்ததும் சிலருக்குப் புளித்த ஏப்பம், வயிறு உப்பிப்போகுதல் மற்றும் சாப்பிட்டவுடன் வாயுக்கோளாறு போன்றப் பிரச்னைகள் ஏற்படும். அந்தநேரத்தில் அஷ்டசூரணம் சாப்பிட்டால், மிக விரைவாகக் குணமடையலாம். அஷ்டசூரணம் செய்வதற்கு சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், கருஞ்சீரகம், பெருங்காயம், இந்துப்பு, ஓமம் இவற்றைச் சமஅளவில் எடுத்து வறுத்துப் பொடிசெய்துக்கொண்டு, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் வாயுக்கோளாறு குறையும். மேலும் இது கழுத்துவலியையும் குணப்படுத்தும்.

வெந்தயக் கூட்டுப் பொடி:

வெந்தயக் கூட்டுப் பொடி சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அந்நோயின் தீவிரத்தைக் குறைக்க உதவுகிறது. வெந்தயப் பொடி செய்வதற்கு முதலில் வெந்தயம், ஆவாரம்பூ, திரிபலா (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்), நாவல்கொட்டை, கறிவேப்பிலை அனைத்தையும் சமஅளவில் எடுத்துப் பொடியாக்கிக்கொள்ளவும்.

இந்தப் பொடியைத் தினமும் ½ டீஸ்பூன் அளவு மதிய உணவு சாப்பிடுவதற்குமுன் சாப்பிட்டு வந்தால், வரவிருக்கும் சர்க்கரை நோயைத் தள்ளிப்போடலாம். இந்தப் பொடியில் கறிவேப்பிலையும் வெந்தயமும் கலந்திருப்பதால் கெட்ட கொழுப்பும், திரிபலாவின் துணையால் மலச்சிக்கலும் குறையும்.

இதையும் படியுங்கள்:
கண்களை மூட மறந்துட்றோமே? அதுதான் பிரச்சனை!
Arokya thagaval...

மிளகு கற்பப் பொடி:

மிளகை உணவில் தினமும் சேர்க்க வேண்டியது அவசியமாகும். 200 கிராம் மிளகை மூன்றுநாட்கள் மோரிலும், அடுத்த மூன்று நாட்கள் இஞ்சிச் சாற்றிலும், இப்படி மூன்று மூன்று நாட்களாக வேலிப்பருத்தி, தூதுவளை, கற்பூரவல்லி, ஆடுதொடா இலைச்சாறு ஆகியவற்றில் ஊறவைத்து, மிளகை உலர்த்தி எடுத்து, இதனுடன் சுக்கு, அதிமதுரம், திப்பிலி, கடுக்காய் போன்ற அனைத்து வகைகளையும் 25 கிராம் அளவுக்குச் சேர்த்து ஒன்றாக வறுத்து, இடித்துப் பொடியாக்கிக்கொள்ளவும்.

இந்தப்பொடியை சளி, இருமல், மூச்சிரைப்பு உள்ள குழந்தைகளுக்குக் காலை உணவு கொடுப்பதற்கு முன்னர்,  தேனில் மூன்று சிட்டிகை சேர்த்து குழைத்துக் கொடுத்தால் நாளடைவில் சளி வெளியேறி, மூச்சிரைப்பு நிற்கும். சளி மீண்டும் வராத அளவுக்கு நோய் எதிர்ப்புசக்தியைக் குழந்தைகளுக்குக் கொடுக்கும். ஆரோக்கியம் காக்கும் இந்தப் பொடிகளைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டியது அவசியம் ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com