இன்றைய உலகம் முழுவதுமாக தொழில்நுட்பம் நம்மைச் சுற்றி இருந்துகொண்டிருக்கிறது. பள்ளி மாணவர்கள் முதல் ஆசிரியர்கள், இன்ஜினியர்கள், ஐ.டி. தொழிலாளர்கள், மருத்துவர்கள், கம்ப்யூட்டர் டிசைனர்கள் வரை அனைவரும் தினமும் பல மணி நேரம் கம்ப்யூட்டர், மொபைல், டேப்லெட், லேப்டாப் போன்ற மின்னணு சாதனங்களை பயன்படுத்துகின்றனர். வேலை செய்ய, படிக்க, தகவல் தேட, விளையாடுவதற்கு என பல காரணங்களால் இவை இன்றி ஒரு நாளும் இயங்க முடியாத அளவிற்கு தொழில்நுட்பம் நம் வாழ்க்கையில் இடம் பிடித்துவிட்டது.
ஆனால், இதன் பின்னால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மிகவும் கவனிக்க வேண்டியவை. அதாவது, அதிக நேரம் பயன்படுத்துவதால் பாதிக்கும் 'கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்' எனும் பாதிப்பு இன்றைய இளம் தொழில்நுட்பப் பயனாளர்களை மிகவும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இதனால் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் தீர்வுகள் பற்றி இங்கே வாசிக்கலாம்.
கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் (CVS) என்றால் என்ன?
மின்னணு சாதனங்களை நீண்ட நேரம் பார்ப்பதால் கண்களில் ஏற்படும் பிரச்னைகளே கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம். இதன் காரணமாக, கண் எரிச்சல், கண்களில் வலி, கண்களில் நீர் வருதல், தலைவலி, தூக்கம் குறைதல், நெற்றிப் பகுதியிலும் கழுத்திலும் அழுத்தம் போன்ற பிரச்னைகள் உருவாகின்றன.
காரணங்கள்:
இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, நீண்ட நேரம் மின்னனு சாதனங்களை இடைவெளி இல்லாமல் பார்ப்பதுவாகும்.
திரைகளில் இருந்து வெளிவரும் ப்ளூ ரே கதிர்கள் கண்களில் நேரடியாகப் பாய்ந்து, சோர்வை ஏற்படுத்துகிறது.
மேலும், கண்களை அடிக்கடி மூட மறந்து திரையில் தொடர்ந்து கவனம் செலுத்துவதால், கண்களில் நீர் வருதல், எரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. திரையின் வெளிச்சம் அதிகமாகவோ குறைவாகவோ இருந்தால் கண்களில் அழுத்தம் அதிகரிக்கிறது.
அதற்கும் மேலாக, கம்ப்யூட்டர், மொபைல் போன்ற சாதனங்களை தவறான உயரத்தில் வைத்துக் கொண்டு வேலை செய்வதும் முக்கிய காரணமாக இருக்கின்றது.
தீர்வுகள்:
20-20 விதி
ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை, கம்ப்யூட்டர் திரையிலிருந்து கவனத்தை மாற்றி, சுமார் 20 அடி தூரத்தில் உள்ள மரம், சுவர் அல்லது ஒரு பொருளை 20 விநாடிகள் பார்க்கலாம். இது கண்களுக்கு ஓய்வை தருகிறது.
ப்ளூ ரே கண்ணாடி
கண்களை ப்ளூ ரே கதிர்களிடமிருந்து பாதுகாக்க, புளூ ரே பிளாக்கிங் கண்ணாடிகளைப் பயன்படுத்தலாம். இது கண் எரிச்சலை குறைக்கும்.
கண்களை அடிக்கடி மூடத் தவறிவிடுகிறோம்
திரையை அதிக நேரம் பார்ப்பதால், நாம் கண்களை மூட மறந்து விடுகிறோம். அதனால், கண்களில் நீர் குறைந்து எரிச்சல் ஏற்படும். எனவே, இமைகளை அடிக்கடி மூடி திறப்பதால் கண்கள் நனைந்து சீராக இயங்கும்.
இயற்கை வெப்பம் மூலம் கண்களுக்கு ஓய்வு
இடைவெளி எடுக்க முடியாதபோது, கைகளை தேய்த்து வெப்பத்தை உருவாக்கி, கண்களை மூடி அதன் மேல் வைக்கலாம். இது கண்களுக்கு ஓய்வளிக்கும் ஒரு இயற்கையான முறையாகும்.
கண்கள் பரிசோதனை
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கண் மருத்துவரிடம் சென்று கண்களின் நிலையைச் சரிபார்க்க வேண்டும். பவர் மாறியிருந்தால் உடனே மாற்று கண்ணாடி பயன்படுத்த வேண்டும்.
திரையின் உயரம் சரியாக இருக்க வேண்டும்
கம்ப்யூட்டர் திரை, கண்கள் இருக்கும் உயரத்திலிருந்து சற்று கீழே இருக்க வேண்டும். சுமார் 45 டிகிரி கோணத்தில் திரையை வைத்தால், கழுத்து மற்றும் கண்களுக்கு சுமை குறையும்.
தொழில்நுட்ப சாதனங்கள் நம்முடைய வாழ்க்கையை சுலபமாக்கினாலும், அவற்றை சீராகவும், சமநிலையாகவும் பயன்படுத்துவதே நம் கடமை. நம் கண்களை பாதுகாக்க ஒவ்வொரு நாளும் சிறிய கவனிப்புகளை தொடர்ந்து பின்பற்றி வந்தால் கண் பார்வை தெளிவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.