வயது ஒரு தடையல்ல, எந்த வயதிலும் முயற்சி திருவினை ஆக்கும்! நீங்கள் 93 வயதாகி, உலகிற்கு உதவ விரும்பினால் என்ன செய்ய விரும்புவீர்கள்?
மதுகாந்தா பட், 93 வயதில், பூமியைக் காப்பாற்றுகிறார். இதுவரை சுற்றுச்சூழலுக்கு உகந்த 35000 பைகளை விநியோகித்திருக்கிறார்!
ஆச்சரியம்! ஆனால் உண்மை.
ஜவுளிக் கடையில் தூக்கி எறியப்படும் துண்டுத்துணிகளையும் பிளாஸ்டிக் பயன்பாட்டையும் ஒழிக்கும் பணியில் மதுகாந்தா பட் ஈடுபட்டுள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளாக, பிளாஸ்டிக் கழிவுகளுக்கு எதிராகப் போராடும் ஒரு போராளியாக அவர் இருந்து வருகிறார். இதைச் சாதிக்கும் முயற்சியாக, 2015 முதல் ஒவ்வொரு நாளும் மக்களுக்கு பயன்படும் வகையில் துணிப் பைகளைத் தைத்து வருகிறார்.
93 வயதான அவர், தனது நாட்கள் மிகவும் பரபரப்பாக இருப்பதாகக் கூறுகிறார். அவர் காலை 7:30 மணிக்கு எழுந்து, குளித்து, பூஜை செய்து, காலை உணவுக்குப் பிறகு நேராக தனது தைக்கும் வேலையை தொடங்கச் செல்கிறார்.
"எனக்கு சும்மா உட்கார்ந்திருப்பது பிடிக்காது. எனக்கு தையல் வேலை ரொம்பப் பிடிக்கும். இந்த வழியில் நான் நிறைய பேருக்கு உதவ முடியும் மற்றும் பிளாஸ்டிக்கின் உபயோகத்தை அகற்ற முடியும். இது சுற்றுச் சூழலுக்காகத்தான்," என்கிறார் அவர்.
இதுவரை, குப்பைக் கிடங்குகளில் சேரும் குப்பைத் துணிகளைக் கொண்டு 35,000க்கும் மேற்பட்ட துணிப்பைகளை அவர் உருவாக்கியுள்ளார்.
அவர் அந்தப் பைகளை ஹைதராபாத் முழுவதும் உள்ள மக்களுக்கு இலவசமாக வழங்குகிறார்.
குஜராத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், பெண்கள் பள்ளிக்கு அனுப்பப்படாத பகுதியில், 1930 ஆம் ஆண்டு பிறந்ததாக மதுகாந்தா கூறுகிறார். இதன் விளைவாக, அவர் எந்த முறையான கல்வியையும் பெறவில்லை.
"எனக்கு 18 வயதாக இருந்தபோது என் பெற்றோர் எனக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். திருமணத்திற்குப் பிறகு நான் என் கணவருடன் ஹைதராபாத்திற்கு குடிபெயர்ந்தேன். என் குழந்தைகள் ஒரு நல்ல பள்ளியில் படிக்க வைக்க வேண்டும், நான் பெறாத கல்வியைப் பெற வேண்டும் என்று நான் விரும்பினேன்," என்று அவர் மேலும் கூறுகிறார்.
ஹைதராபாத்துக்கு குடிபெயர்ந்தபோது அவருக்கு குஜராத்தி தவிர வேறு எந்த மொழியும் பேசத் தெரியாது. மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள வழி இல்லாததால், அவருடைய முதன்மை கவனம் குழந்தைகளின் மேல் இருந்தது. அவருக்கு நான்கு மகளும் ஒரு மகனும் உள்ளனர். குழந்தைகள்அனைவரும் சிறந்த கல்வி பெறுவதை உறுதி செய்தார். அவருக்கு தையல் செய்வதற்கான இயல்பான திறமையும் இருந்தது. ஆனால் எந்த அதிகாரப்பூர்வ பயிற்சியும் பெற்றதில்லை. ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம் மதுகாந்தா தனது நீண்டகால லட்சியத்தைப் பின்பற்ற முடிவு செய்தார்.
மற்ற பெண்கள் தையல் இயந்திரத்தைப் பயன்படுத்துவதைப் பார்க்கும்போதெல்லாம், மதுகாந்தாவிற்கும் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் பணம் இல்லாத காரணத்தினால் அவரால் வாங்க முடியவில்லை.
சிறிது காலத்திற்குப் பிறகு, 1955 ஆம் ஆண்டில் ரூ. 200 விலையுள்ள உஷா தையல் இயந்திரத்தை அவர் வாங்கினார். ஆனால் அவரிடம் முறையான பயிற்சி பெற பண வசதி அப்போது இல்லை. ஆகவே அவர் இயந்திரம் எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அதை எவ்வாறு சரிசெய்வது என்பதைக் கற்றுக்கொள்ள ஒரு மாத பாடநெறியை படித்து கற்றுக் கொண்டார்.
மதுகாந்தா சில மாதங்களிலேயே அந்த இயந்திரத்தில் தேர்ச்சி பெற்று அதில் நல்ல திறமை பெற்றார். பிறகு வீட்டில் குழந்தைகளின் உடைகள், அண்டை வீட்டாருக்கு உடைகள் என தைக்க ஆரம்பித்தார்.
அதற்கு பிறகு அவர் சுற்றுச் சூழலுக்கு உதவும் வகையில் எதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப் பட்டார். பிளாஸ்டிக் பைகள் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானவை. மக்களிடம் இது பொதுவாகக் காணப்படும் பொருளாக இருப்பதை அவர் கண்டார். மேலும் அதற்கு ஒரு மாற்றீட்டை தன்னால் வழங்க முடியும் என்றும் அவர் உறுதியாக நம்பினார். அவருடைய மகன் நரேஷ் அவரின் இந்த பணியை நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக இருந்தார். இவர், ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட எட்டு பைகள் தைக்கிறார். இந்தப் பைகள் அனைவருக்கும் விநியோகிக்கப்படுகின்றன.
"காய்கறி விற்பனையாளர் முதல் பிளம்பர்ஸ், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நண்பர்களின் நண்பர்கள் வரை அனைவரிடமும் என் அம்மா தைத்த பை உள்ளது. இந்த முதுகுப்பைகளை மற்றவர்களுக்கு விநியோகிக்கும் இலாப நோக்கற்ற நிறுவனங்களுடனும் நாங்கள் இணைந்து பணியாற்றுகிறோம்" என்று அவருடைய மகன் நரேஷ் கூறுகிறார்.
"நான் ஐந்து வருடங்களாக மதுகாந்தா அம்மாவிற்கு பழைய துணிகளை சப்ளை செய்து வருகிறேன்," என்கிறார் மதுகாந்தாவின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் திரைச்சீலை தையல்காரர் தேவ்ராஜ். "பழைய துணிகளை அப்புறப்படுத்துவதற்குப் பதிலாக நல்ல பயன்பாட்டிற்கு கொண்டு வருவது ஊக்கமளிக்கிறது. பழைய துணிகளால் செய்யப்பட்ட முகமூடிகள் மற்றும் பைகளை நானும் பயன்படுத்தினேன், அவை கழிவுகளிலிருந்து தயாரிக்கப்பட்டது போல் தெரியவில்லை," என்றும் அவர் கூறுகிறார்.
ஓய்வு பெற விரும்புகிறீர்களா என்று கேட்டபோது, மதுகாந்தா, “அதற்கு இப்போது வாய்ப்பு இல்லை" என்று பதிலளித்தார். அவர் மேலும் மேலும் பைகளைத் தைக்க விரும்புகிறார். ஒரு கிரிக்கெட் பிரியராக, இப்போதெல்லாம் பைகளைத் தைக்கும் போது போட்டிகளைப் பார்ப்பதிலும் சிறிது நேரம் செலவிடுகிறார். "என் வயதுடையவர்கள் ஓய்வு பெற்று ஓய்வெடுக்க விரும்புகிறார்கள், ஆனால் நான் தொடர்ந்து விளையாட விரும்புகிறேன்," என்றும் அவர் விளக்குகிறார்.
நம் வீடு மட்டும் சுத்தமாக இருந்தால் போதும் என்று சுயமாக நினைக்கும் இந்த கால கட்டத்தில் 93 வயதில் இப்படிப் பட்ட ஒரு சுற்றுச் சூழலுக்கான சேவையை செய்து வரும் மதுகாந்தா பட் நம் எல்லோருக்கும் ஒரு பெரிய எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். இந்த வயதில் இப்படிப் பட்ட சேவை செய்து வரும் அவருக்கு நாம் எல்லோரும் நிச்சயமாக தலை வணங்க வேண்டும். தெரியாத ஒன்றை கற்றுக் கொண்டு கிட்டதட்ட 35000 பைகளை இலவசமாக தைத்து கொடுத்திருக்கிறார் என்றால் அவரை புகழ்வதற்கு வார்த்தையே இல்லை. இந்த வயதிலும் ஓய்வெடுக்காமல் சுறுசுறுப்பாக செயல்படும் அவரது உழைப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அவரின் இந்த சேவை மேன்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை நாம் எல்லோரும் சேர்ந்து பிரார்த்திப்போம்.