அச்... அம்மா...! தும்மல் வந்தால் கெட்ட சகுனமா?

Sneezing
Sneezing
Published on

ஒரு செயலை செய்யும் பொழுது அல்லது நினைக்கும் பொழுதோ யாராவது தும்மி விட்டார்கள் என்றால், அதனைக் கெட்ட சகுனமாக நினைக்கின்றனர். நினைப்பவர்கள் நினைத்துவிட்டுப் போகட்டும், நாம் தும்மலைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வோம்!

காற்று தவிர வேறு எந்த வெளிப்பொருளும் மூக்கில் நுழைந்தால், மூக்கு அதை அனுமதிக்க மறுக்கிறது. அதற்கான அனிச்சைச் செயல்தான் தும்மல். மூக்குத் துவாரத்தில் சிறிய முடியிழைகள், நாம் உள்ளிழுக்கும் காற்றில் கண்ணுக்குத் தெரியாத தூசு, துகள் இருந்தால் அவற்றை வடிகட்டி அனுப்புகின்றன. மேலும், மூக்கில் ஒரு மென்மையான சவ்வுப் படலம் உள்ளது. இது நிறமற்ற திரவத்தைச் சுரக்கிறது. அளவுக்கு அதிகமாகத் தூசியோ, துகளோ மூக்கில் நுழைந்து விட்டால், இந்தச் சவ்வுப் படலம் தூண்டப்பட்டு, அதிக அளவில் நீரைச் சுரக்கிறது. இதன் தூண்டுதலால், நுரையீரல், தொண்டை, வாய் மற்றும் வயிற்றுத் தசைகள் ஒன்று சேர்ந்து மூச்சுப் பாதையில் உள்ள காற்றை அழுத்தமாகவும் வேகமாகவும் மூக்கு வழியாக வெளியேத் தள்ளுகின்றன. இதைத்தான் தும்மல் என்கின்றனர். அப்படித் தும்மும் போது, அந்த அந்நியப் பொருள் வெளியேற்றப்படுகிறது. ஒரு தும்மலின் வேகம் மணிக்கு 160 கி.மீ. எனக் கணக்கிட்டுள்ளனர்.

ஆழ்ந்த உறக்கத்தின் போது தும்மல் ஏற்படுவதில்லை. அந்நிலையில் மறிவினைக் (தன்னேர் துலங்கல்) குறிப்பலைகள் மூளைக்கு அனுப்பப்படுவதில்லை, இயக்க நரம்பணுக்கள் தூண்டப்படுவதுமில்லை. மிகுதியான தூண்டல் இருந்தால் சில வேளைகளில் தூங்குபவர் விழித்துக் கொண்டு தும்முவதுண்டு. ஆனால், அப்போது அவர் முழு உறக்க நிலையில் இருந்திருக்க மாட்டார்.

ஒவ்வாமைதான் தும்மலின் அடிப்படைக் காரணம். வீட்டுத் தூசு, ஒட்டடை, பருத்தி, பஞ்சு, சணல், சாக்கு, கயிறு, கம்பளி, சிமெண்ட், சுண்ணாம்பு, ஆஸ்பெஸ்டாஸ், உமி போன்றவற்றின் தூசு மூக்கில் பட்டதும் அடுக்குத் தும்மல் தொடங்கிவிடும். மேலும் குளிர்ந்த காற்று, பனி, ஊதுவத்தி, சாம்பிராணி, கற்பூரம், கொசுவத்தி போன்றவற்றின் புகை, வாகனப் புகை, தொழிற்சாலைப் புகை, பூக்களின் மகரந்தங்கள் முதலியவை அடுக்கு தும்மலுக்கு வழி வகுக்கும். அத்தகைய பொருளொன்று மூக்கிலுள்ள முடிகளினிடையே சென்று உள் மூக்கையடையும் போது தும்மல் ஏற்படுகிறது.

இதனால் திசு நீர் (Histamine) வெளிப்பட்டு மூக்கிலுள்ள நரம்புகளை உறுத்துகிறது. அவை முப்பெரு நரம்புத் தொகுதியினூடாக (Trigeminal Nerve Network) மூளைக்குக் குறிப்பனுப்புகின்றன. மூளை அக்குறிப்பைப் பெற்று மேல்தொண்டை, மூச்சுக்குழாய் சதைகளை முடுக்கி விடுகிறது. அதன் விளைவாக, மூக்குள், தொண்டைக்குழி வாயில்கள் சட்டென விரிந்து மிகுந்த அழுத்தத்துடன் காற்றையும், எச்சில் முதலானவற்றின் துகள்களையும் வெளியேற்றுகிறது. முகம், தொண்டை, மார்பு முதலான உடலுறுப்புக்களின் கூட்டுத் தூண்டற்பேறால் இது நிகழ்வதாகக் கருதுகின்றனர். கண்ணிமைகளும் கூட தும்மலின் இயக்கத்தில் பங்காற்றுகின்றன. தும்மும் போது கண்களைத் திறந்து வைத்திருக்க முடியாது.

மூக்கடைப்பினாலோ, அழற்சியினாலோ, மூக்குக்குப் பின்புறமுள்ள எலும்புக்குழி நரம்புகள் தூண்டப் பெறும் போதும் தும்மல் ஏற்படலாம். திடீரென பளிச்சென்ற வெளிச்சத்தை எதிர் கொள்ளும் போதும் தும்மல் ஏற்படலாம். இது 18 முதல் 35 விழுக்காட்டு மக்களில் காணப்படும் ஓர் மரபணுக்கூறின் விளைவாகும். அரிதாகச் சிலருக்கு நிறைய உணவு உட்கொண்டு வயிறு நிறைந்திருப்பதால் தும்மல் ஏற்படும். இது ஒரு மரபணுக் குறைபாடாகும்.

தும்மலின்போது கைக்குட்டையைக் கொண்டோ முன்னங்கையினாலோ மூடுவது வழக்கம். உடல் நலக் குறைபாடு எதுவுமில்லாத போது, பொதுவாக எந்தத் தீங்கும் விளைவிக்காவிட்டாலும், 0.5 முதல் 5 µm அளவிலான நுண்துளிகளின் தூவானப்படலத்தை வெளியிடுவதன் மூலம் தும்மல் நோய்களைப் பரப்பவும் காரணமாகிறது. ஒரு முறை தும்மும்போது 40,000 நுண்துளிகள் வரை சிதறி வெளிப்படக்கூடும். இவ்வாறு சளி, காய்ச்சல் முதலிய நோய்கள் பரவும் வாய்ப்பைக் குறைப்பதற்காக தும்மும் போது முன்னங்கையினாலோ, முழங்கையின் உட்பகுதியைக் கொண்டோ வாயையும் மூக்கையும் மறைப்பர். உள்ளங்கையைப் பயன்படுத்தி மூடுவதை இப்போது தவிர்க்கின்றனர். அவ்வாறு செய்தால் கதவின் கைப்பிடி முதலானவற்றைத் தொடுவதாலும் கைகுலுக்கும் போதும் நோய்க்கிருமிகள் பரவ ஏதுவாகும்.

தும்மல் வருவது போலத் தோன்றும் போது நுரையீரலிலுள்ள காற்றை ஆழ வெளியேற்றுவதினால் தும்மலின் போது அழுத்தம் குறையும். மூச்சை அடக்கி பத்து வரை எண்ணுவதுண்டு. மூக்கின் தண்டுப்பகுதியை அமுக்கி விடுவதும் தும்மல் ஏற்படுவதைத் தவிர்க்கக் கூடுமென நம்புகிறார்கள். தும்மலை ஏற்படுத்தும் தூசி முதலியவற்றைத் தவிர்த்தல், செல்ல விலங்குகளின் உடலில் இருந்து உதிர்வனவற்றின் மூலம் ஏற்படும் தும்மலைத் தவிர்க்க, அவற்றை வீட்டுக்கு வெளியே வைத்திருப்பது, வீட்டில் தூசு முதலியவற்றைச் சேர விடாமல் தூய்மையாக வைத்திருப்பது, புகைக்கூண்டு, குளிரூட்டற் கருவிகள் முதலியவற்றிலுள்ள வடிகட்டிகளை அடிக்கடி கழுவுதல், சில ஆலைகள் வேளாண் பகுதிகள் போன்ற இடங்களுக்குச் செல்லாமை போன்ற செயற்பாட்டினால் தும்மல் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

இதையும் படியுங்கள்:
தும்மல் பற்றி அறிய வேண்டிய சில சுவாரஸ்ய தகவல்கள்!
Sneezing

பல பண்பாடுகளிலும் தும்மலுக்கு உடற்கூறுக்குத் தொடர்பில்லாத ஏதாவது காரணங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஆனால் அவ்வாறான நம்பிக்கைகளுக்கு அடிப்படை ஏதும் இல்லை. இந்தியாவில் பல பகுதிகளிலும், ஈரானிலும் பலர் ஏதாவது செயற்பாட்டின் தொடக்கத்தில் தும்மல் வந்தால் அதைக் கெட்ட சகுனமாகக் கருதுவர். அது போன்ற வேளைகளில் செய்ய வந்த செயலை நிறுத்திவிட்டு, நீரருந்திவிட்டுப் பிறகு செயலில் ஈடுபடுவர். போலந்து நாட்டில் ஒருவருக்குத் தும்மல் வந்தால் மாமியர் மருமகனைப் பற்றியோ மருமகளைப் பற்றியோ அவதூறாகப் பேசுகிறார் என்பார்கள். இசுலாமியர்களும் கிறித்தவர்களும் ஒருவருக்குத் தும்மல் வருவதைப் பார்த்தால் முறையே "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்றும், "ஆசி உண்டாகட்டும்" என்றும் வாழ்த்தும் வழக்கமுள்ளது. தமிழர்கள் பொதுவாக, அம்மா, அப்பா, ஐயா போன்ற சொற்களைப் பயன்படுத்துவதுண்டு. தமிழிலக்கியத்தில் தம்மை விரும்புபவர் எவராவது நினைக்கும் போது ஒருவருக்குத் தும்மல் ஏற்படுமென்ற கருத்து உள்ளது. அதைக் கொண்டு தலைவனுக்குத் தும்மல் ஏற்படுவதைப் பார்த்து வேறொரு காதலியின் நினைப்பினால் தான் அது நிகழ்வதாகக் கூறி தலைவி ஊடுவது அகத்திணையில் வரும் நிகழ்வாகும்.

அச்... அம்மா...! இதைப் படிக்கும் போதே, என்னை யாரோ நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்... போல... தெரிகிறது...!

இதையும் படியுங்கள்:
தொடர் தும்மல் அவஸ்தையைப் போக்க உதவும் மூலிகை டீ!
Sneezing

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com