
கர்ப்பிணிகள் இளநீர் குடித்தால் கருவிலுள்ள குழந்தை வெளுப்பாக பிறக்குமா?
அல்லோபதி நிபுணர்: இளநீர் போஷாக்குச் சத்து நிறைந்தது. எனவே, இளநீர் குடிக்கும்போது தாயாகப் போகும். பெண்ணுக்குப் போஷாக்குச் சத்துக்களை அளிக்கிறது. ஆனால், இளநீர் குடிப்பதால் பிறக்கப் போகும் குழந்தை நல்ல வெளுப்பாக இருக்கும் என்பதில் உண்மையில்லை.
ஆயுர்வேத நிபுணர்: இளநீர் குடிப்பதால் தோலின் தன்மை மாறுகிறதே தவிர அதனால் குழந்தை வெளுப்பாக ஆக முடியாது. தோல் வெண்மையாக இருப்பது ஜீன்ஸ் சம்பந்தப்பட்டது. மேலும் குழந்தை வளரும் இடத்தின் சீதோஷ்ணநிலை, நீர் போன்றவற்றைப் பொறுத்தது. குழந்தைக்குக் கொடுக்கப்படும் ஆகாரமும் குழந்தையின் தோலின் நிறத்தை நிர்ணயிக்கிறது. கர்ப்ப காலத்தில் தாய்க்குக் கிடைக்கும் போஷாக்கும், குழந்தையின் தோலுக்கு நன்மை புரிகிறது.
ஹோமியோபதி நிபுணர்: இளநீர் ஒரு சிறந்த பானம். உடலுக்கு நிறைய பொட்டாசியத்தைக் கொடுக்கிறது. உடலைக் குளிரவைக்கிறது. ஆனால் இளநீர் எந்தவிதத்திலும் குழந்தையை வெளுப்பாக்க முடியாது. குழந்தை கருவிலுள்ளபோதே, அது எந்த மாதிரி இருக்கும் என்பது பிறப்பியலால் (Genetics) நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், கர்ப்ப காலத்தில் நல்ல போஷாக்கான உணவை கர்ப்பிணி உட்கொண்டால், பிறக்கப் போகும் குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.
பின்குறிப்பு: கொடுக்கப்பட்ட கருத்துகளால் குழப்பம் ஏற்படலாம். அம்மா சொல்வதைக் கேட்பதா, மாமியார் சொல்வதைக் கேட்பதா, அல்லது, அல்லோபதி, ஆயுர்வேத, ஹோமியோபதி மருத்துவர்கள் ஆலோசனையைக் கேட்பதா? இம்மாதிரியான சூழ்நிலையில், இக் கருத்துக்களை அப்படியே பின்பற்றுவதற்கு முன், நீங்கள் செக் அப்புக்காகச் செல்லும் மருத்துவரிடம் இது பற்றிக் கேட்டு, அவர் சொல்படி நடப்பது சிறந்தது.
-ராஜி