
அண்மையில், சென்னை ITC Grand Chola வில் AICC RCOG (All India Co-ordinating Committee of the Royal College of Obstetricians and Gynaecologists) அமைப்பின் 38வது மாநாடு நடைபெற்றது உடல் நலம் மருத்துவம் குறித்து பல்வேறு மருத்துவ விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்றன.
அதில் ஒரு பகுதியாக, நம் கல்கி வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான டாக்டர் ஜெயஸ்ரீ கஜராஜ் அவர்கள், நெறியாளராக இருந்து, மெனோபாஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக நடத்தினார்.
டாக்டர் கீதா குமார், டாக்டர் ராணி தாக்கர், டாக்டர் ஹெப்ஸிபா கிருபாராணி, டாக்டர் உஷா ஸ்ரீராம் ஆகியோர் அடங்கிய பேனல், மெனோபாஸ் சமயத்தில் பெண்களின் உடலிலும் மன அளவிலும் ஏற்படும் மாற்றங்கள், அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகள் ஆகியவை குறித்து சிறப்பாக விளக்கமளித்தார்கள்.
சுமார் 100 பெண்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், கலந்துரையாடல் முறையில் பெண்களின் உடல் ஆரோக்கியம் குறிப்பாக மெனோபாஸ் பற்றி விவாதிக்கப்பட்டது. பார்வையாளர்களாக வந்திருந்த மகளிரின் கேள்விகளுக்கு மருத்துவர்கள் தெளிவான விளக்கங்களை அளித்தார்கள்.
மெனோபாஸ் சமயம் வரக்கூடிய நோய்கள், அவற்றின் அறிகுறிகள், அப்போது எடுக்கவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்று பல கேள்விகளுக்கும் தெளிவான பதில்கள் கிடைத்தன.
டாக்டர் ஜெயஸ்ரீ கஜராஜ் அவர்கள், இந்த கலந்துரையாடலில், மருத்துவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் இடையே நிகழ்ச்சியை சுவாரசியமாக நெறிப்படுத்தினார்.
அப்போது மகளிர் கேட்ட சில சந்தேகங்கள்... மருத்துவர்களின் பதில்கள்..
மெனொபாஸ் எப்படி நிகழ்கிறது?
பெண்ணின் கருப்பைகள் இனப்பெருக்கத்திற்கு தேவையான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களை உற்பத்தி செய்வதை நிறுத்துவதால் ஏற்படுகிறது. இது பெண்களின் வாழ்க்கையின் ஒரு இயல்பான நிகழ்வுதான்.
எனக்கு இப்போது 45 வயதாகிறது. பீரியட்ஸ் ஒழுங்காக வருவதில்லை. கடந்த சில நாட்களாக, உடல் திடீரென சூடாவதுபோல் Hot flashes, சரியான தூக்கமின்மை, வியர்த்துக் கொட்டுதல் போன்றவை ஏற்படுகிறதே...
பெண்களுக்கு 40 முதல் 55க்குள் எந்த வயதிலும் மெனோபாஸ் வரலாம். இதற்கான உடல் மாற்றங்கள் 40 வயதை தாண்டிய பிறகு மெதுவாக ஆரம்பிக்கின்றன. அப்போது இந்த மாதிரி உடல் வெப்பம், வியர்வை இதெல்லாம் ஏற்படுவது சகஜம். இதை Perimenopause என்கிறோம். சினைப்பை எனப்படும்ஓவரியில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், அளவில் வேறுபாடுகள் ஏற்படும். அப்போது இந்த அறிகுறிகள் தோன்றும். இவை அதிகமாக இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை கேட்கலாம்.
மெனோபாஸ் வந்து மாதவிடாய் நின்ற பிறகு, எத்தனை வருடங்கள் இவை இருக்கும்?
பொதுவாக, மெனோபாஸ் மூன்று நிலைகளில் இருக்கும். (perimenopause, menopause, and postmenopause)
முதல் நிலையில் உடல்வெப்பம், வியர்வை, ஒழுங்கற்ற பீரியட்ஸ் இருக்கும். அடுத்து முற்றிலுமாக மாதவிடாய் நின்று போய் சினைப்பையில் முட்டை உற்பத்தி நிற்பது. மூன்றாவது நிலை, மாதவிடாய் நின்று சில காலம் ஆனபிறகு வரும் மாற்றங்கள்.
மெனோபாஸ் காரணமாக எலும்பு தேய்மானம் Osteoporosis ஏற்படுமா?
மாதவிடாய் நிற்கும் சமயத்தில், எலும்புகளைப் பாதுகாக்கும் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைவதால் எலும்புகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. எலும்புகள் வலுவிழந்து போவதால் எலும்பு முறிவு போன்றவை வர வாய்ப்பு உணடு.
இதை எப்படி எதிர்கொள்வது?
கால்சியம் நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ளுதல் வேண்டும். விட்டமின் டி அவசியம் என்பதால், 40 நிமிடங்கள் வெயில் மூலம் கிடைக்கும் இய்றகையான விட்டமின் டி அல்லது அதற்கான உணவுகள் உங்களுக்குத் தேவை.
மெனோபாஸினால் உடல் பருமனாகுமா?
நேரடியாக இல்லை என்றாலும் ஹார்மோன்கள், நமது உடல் இயக்கம் (Metabolism) இவற்றின் வேறுபாடுகள், முக்கியமாக நமது லைஃப்ஸ்டைல் என பல காரணங்கள் உண்டு.
இதுபோன்ற பலதரப்பட்ட கேள்விகளுக்கும், எல்லா மருத்துவர்களும் தெளிவான பதில்களை வழங்கினார்கள்.
Interesting and Informative நிகழ்ச்சி.