
இந்தியாவின் மலையேற்ற வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளவர் பச்சேந்திரி பால். உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்திய பெண்மணி இவர். சாகசத்தில் ஆர்வம் கொண்ட பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்பவர்.
இளமை வாழ்க்கை;
தற்போதைய உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள நாகுரி என்ற கிராமத்தில் மே 24ல், 1954 ஆம் ஆண்டு பிறந்தவர் பச்சேந்திரி. இந்திய எல்லையில் இருந்து திபத்திய எல்லைப் பகுதிக்கு பலசரக்கு சாமான்களை விற்பனை செய்வது அவரது தந்தையின் தொழில். குடும்பத்தில் ஏழு குழந்தைகளில் ஒருவராக இருந்த பச்சேந்திரி திறமையான மாணவியாக வளர்ந்தார்.
பள்ளி ஆசிரியராக வேண்டும் என்கிற பெற்றோரின் கனவை நிறைவேற்றுவதற்குப் பதிலாக மலையேறும் தனது எண்ணத்தை தெரிவித்தபோது கடுமையாக எதிர்த்தனர் குடும்பத்தினர். இருந்தும் தன் முயற்சியை கைவிடவில்லை அவர்.
மலையேற்றத்தில் ஆர்வமும், சாதனையும்;
சிறு வயதிலிருந்தே சாகசங்களில் மிகுந்த ஆர்வம் மிக்க பச்சேந்திரி தன்னுடைய 12 வது வயதில் மலையேறத் தொடங்கினார். ஒரு சுற்றுலாவின்போது தனது பள்ளித் தோழர்களுடன் உயரமான ஒரு சிகரத்தில் ஏறினார். அந்த ஆரம்பக்கால அனுபவங்கள் மலை ஏற்றத்தில் அவரது ஈடுபாட்டை வளர்த்தது.
பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி உத்தரகாசியில் உள்ள நேரு மலையேற்றப் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தார். இந்தப் பயிற்சியின் போது, 1982 ஆம் ஆண்டில் 23,419 அடி உயரமுள்ள கங்கோத்ரியையும், 19,091 அடி உயரமுள்ள ருத்ரகாரியா மலையையும் ஏறிய இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். அந்த வெற்றியே மலை ஏறுதலைத் தொடரவேண்டும் என்கிற அவரது லட்சியத்தை வலுப்படுத்தியது.
எவரெஸ்ட் மலையேற்றக் குழு;
பெண்களுக்கு மலையேற்றப் பயிற்சி அளிக்கும் ஆசிரியராக தேசிய சாகச அமைப்பில் சிறிது காலம் பணிபுரிந்தார். 1980 களில் மலை ஏறுதல், குறிப்பாக எவரெஸ்ட் சிகரத்தை அடைதல் என்கிற இலக்கு ஆணாதிக்கம் செலுத்தும் துறையாக இருந்தது. 1984ல் அமைக்கப்பட்ட, இந்தியாவின் நான்காவது எவரெஸ்ட் மலையேற்றக் குழுவில், பச்சேந்திரியும் இடம் பெற்றார். ஆறு பெண்கள் மற்றும் 11 ஆண்கள் அடங்கிய வரலாற்று கலப்பு பாலினக் குழுவின் உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடினமான சூழ்நிலைகள்;
அவர் கனவு கண்ட இமயமலை நோக்கிய அந்தப் பயணம் மிகவும் ஆபத்துகள் நிறைந்ததாக, கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது. மைனஸ் 40 டிகிரி வரையான மிகக்குறைந்த வெப்பநிலை, 100 கிலோ மீட்டர் வேகத்தில் அடிக்கும் புயல் காற்று போன்ற சவால்களுக்கு உடல் ரீதியான சகிப்புத்தன்மை, மற்றும் தளராத மனவுறுதி தேவைப்பட்டது.
சோதனைகளை மீறிய சாதனை;
மலையேறும் அவர்களது குழு மீது பனிமலை விழுந்து, பாதிக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். சிலர் மலை ஏறுவதைக் கைவிட்ட போதும், உடல் முழுக்க காயங்கள் ஏற்பட்டாலும், மரணத்திற்கு அருகில் சென்று பார்த்துபோதும், தனது முயற்சியைத் தொடர பச்சேந்திரி தயங்கவில்லை. தன்னுடைய குழுவினருக்கு ஊக்கம் அளித்து பயணத்தை தொடர்ந்தார். கடினமான இலக்கை அடைவது, தனது திறன்களைப் புரிந்து கொள்ளவும் சாகசங்களை நிகழ்த்தவும் ஒரு வாய்ப்பாக அவர் கருதினார்.
1984, மே 23ல் அவர்கள் குழு சிகரத்தை அடைந்தது. இந்தியாவிலேயே முதன் முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த பெண்மணி என்கிற பெருமையைப் பெற்றார்.
எவரெஸ்ட்டில் ஏறிய பிறகு பச்சேந்திரிப்பாலின் புகழ் எங்கும் பரவியது. இந்தோ நேபாளப் பெண்கள் எவரெஸ்ட் சிகரப் பயணத்திற்கு தலைமை தாங்கினார். ஹரித்துவாரிலிருந்து கல்கத்தா வரையிலான கங்கை நதியில் 39 நாட்களில் 2155 கிலோமீட்டர் தூரத்தை வெற்றிகரமாக கடந்த பெண்கள் குழுவிற்கு அவர் தலைமை தாங்கினார்.
சமூகசேவை;
ஒரு வெற்றிகரமான சாகசக்காரராகவும், ஏராளமான பெண்களுக்கு உத்வேகம் தரும் முன்னோடி மட்டுமல்லாமல், பச்சேந்திரி சமூக சேவைகளிலும் தீவிரமாக பங்கேற்றார். வட இந்தியாவில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தின்போது, மலையேறுபவர்கள் குழுவுடன் சேர்ந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். கடினமான மலைப்பாங்கான நிலப்பரப்பில் சிக்கித் தவித்த மக்களை அவரது குழுவினர் மீட்டனர்.