ஒரு முறை என் தோழியின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவர் உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்தார். என்னை பார்த்தவுடன் 'சாப்பாடு ஆர்டர் செய்கிறேன் சாப்பிட்டுவிட்டு போகலாம்' என்று கூறினார். நான், 'அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். வீட்டில் இருப்பதை வைத்து சமைக்கிறேன். எல்லோரும் சாப்பிடுவோம்' என்று கூறிவிட்டு கிச்சனுக்கு சென்றால், முதலில் ஒரு டீ போட்டுக் கொடுக்கலாம் என்று டீத்தூள், சீனி இருக்கும் டப்பாக்களை தேடித் தேடி கண்டுபிடிப்பதற்குள் போதும்போதும் என்று ஆகிவிட்டது.
ஏனெனில், எல்லாம் ஒரே மாதிரியான எவர்சில்வர் டப்பாக்களில் போட்டு வைத்திருக்கிறார். அது ஒவ்வொன்றாக திறந்து மூடி எடுப்பதற்கு சிரமமாக இருந்தது. ஒரு வழியாக தேடிக் கண்டுபிடித்து, டீ போட்டுக் கொடுத்துவிட்டு, அரிசி பருப்பு எல்லாம் தேடி எடுத்து சமைத்து சாப்பிட்டுவிட்டு, இரவிற்கு வேண்டிய அளவில் அவருக்கு தயார் பண்ணி வைத்துவிட்டு வந்தேன்.
அடுத்த முறை அவரைப் பார்க்க சென்ற பொழுது இந்தக் கஷ்டம் புரிந்து இருக்க வேண்டும். பொருட்கள் போன்றவற்றை பார்த்தவுடன் எடுக்கும் படியாக பாட்டில்களில் வைத்திருந்தார். மேலும் மசாலா சாமான்களில் இருந்து ஒவ்வொன்றுக்கும் எவர்சில்வர் டப்பாக்களில் லேபிள் ஒட்டி வைத்திருந்தார். லேபிளும் நேராக பார்த்து எடுக்கும்படியாக இருந்தது. மேலும் வீட்டில் இருந்த ஒவ்வொரு பொருட்களையும் மிகவும் நேர்த்தியாக அடுக்கி வைத்திருந்தார். அதை பார்த்துவிட்டு சபாஷ் சொல்லிவிட்டு வந்தேன். அப்பொழுது கூறினார்....
'கடந்த முறை நீ வீட்டிற்கு வரும் பொழுது சமைப்பதற்கு எவ்வளவு சிரமப்பட்டாய் என்று புரிந்து கொண்டேன். அதிலிருந்து நான் பாடம் கற்றுக் கொண்டு இப்பொழுது எல்லாவற்றையும் அழகாக பராமரிக்க கற்றுக் கொண்டு விட்டேன். இதையே என் உறவு முறைகளிடமும் கூறி இது போல் லேபிள் ஒட்டும் பழக்கத்தை ஏற்படுத்தினேன். அது மட்டும் இல்லாமல் கணவர், மாமியார், மாமனார், எனக்கு என்று அவரவர்களுக்கு உள்ள சார்ஜர்களில் பெயர் எழுதி வைத்திருக்கிறேன். அது மாறி போகாமல் இருப்பதற்கு உதவியாக இருக்கிறது. அவரவர்களுக்கு உள்ள மருந்து பாட்டில்களிலும் அவரவர் பெயரை எழுதி தனித்தனியாக வைத்திருக்கிறேன். இதனால் குழப்பம் இல்லாமல் அவரவர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. அந்த மருந்து எங்கே? இந்த மருந்து எங்கே என்று யாரும் சத்தம் போடுவதில்லை. அழகு என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை நானாக உணர்ந்து கொண்ட தருணம் அது,' என்று கூறினார்.
ஆதலால் தோழிமார்களே! எந்த பொருளையும் சட்டென்று எடுக்கும்படி மிகவும் அழகாக நேர்த்தியாக அடுக்கி வைத்தால் இது போன்ற ஆபத்து சமயங்களில் உதவி செய்ய வருபவர்களுக்கு வசதியாக இருக்கும். நாமும் தடுமாறாமல் செய்யலாம்.