
இந்தியாவில், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அதிகளவில் இருந்தபோதிலும், இன்னும் போதுமான மொபைல் நெட்வொர்க் கவரேஜ் மற்றும் இணைய இணைப்பு இல்லாமல் சில இடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதை பற்றி தெரிந்து கொள்வோம்.
அரசாங்கத் தரவுகளின்படி, குறிப்பாக ஒடிசா, அருணாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், ஜார்கண்ட், உத்தரகண்ட், ஹிமாச்சல் பிரதேஷ், மற்றும் சிக்கிம் போன்ற மாநிலங்களில் 25,000க்கும் மேற்பட்ட கிராமங்கள் தொழில்நுட்ப தொடர்பில்லாமல் தனித்து இருக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் எந்த ஒரு அடிப்படை விஷயமும் இணைய வசதியின்றி அவ்வளவு எளிதில் நடப்பதில்லை, இதனால் இந்த வசதியை சார்ந்திருக்கும் சுகாதாரம், கல்வி, விவசாயம் மற்றும் பிற பொருளாதார வாய்ப்புகள் சார்ந்த விஷயங்கள் இந்தப் பகுதிகளில் குறைந்த அளவில்தான் இருக்கின்றன. இதுதான் அங்குள்ள மக்களை பல சவால்களை எதிர்கொள்ள செய்கிறது.
கிராமப் பகுதி மக்களின் வாழ்க்கை பெரும்பாலும் காலங்காலமாய் பின்பற்றும் பாரம்பரிய நடைமுறையான விவசாயத்தைத்தான் சார்ந்திருக்கும். மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக உள்ளூர் சந்தைகள் மற்றும் சில சமூகத்தைத்தான் நம்பியிருப்பார்கள். அரசின் சேவையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் (Ayushman Bharat scheme) கீழ் சுகாதார சேவைகள் மற்றும் நிதி உதவி திட்டங்கள் போன்ற உடல் நலன் சார்ந்த திட்டங்கள் இந்தப் பகுதிகளின் அருகில் இருக்கும் உள்ளூர் அரசாங்க அலுவலகங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. இருப்பினும், இன்றைய அடிப்படை டிஜிட்டல் உள்கட்டமைப்பு இல்லாத பற்றாக்குறையால் இந்தச் சேவைகள் அங்கு வசிப்பவர்களுக்கு சுலபமாக கிடைப்பதில்லை.
கடினமான நிலப்பரப்பு, மலை சார்ந்த உயரமான இடங்களால் வரும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான செலவு ஆகியவை இந்த பகுதிகளில் தொழில்நுட்ப பின்னடைவுக்கான முதன்மைக் காரணங்களாகும். அதுபோல சில இடங்களில் காணப்படும் கடுமையான வானிலை நிலவரங்கள் குறிப்பிடத்தக்க சவால்களை ஏற்படுத்துகின்றன.
உதாரணமாக, மலை அல்லது வனப்பகுதிகளில் நெட்வொர்க் கோபுரங்களை நிறுவுவது, பராமரிப்பது தொழில்நுட்ப ரீதியாக சவாலானது, விலை உயர்ந்தது. மேலும், இந்த இடங்களில் இருக்கும் குறைந்த மக்கள் தொகை பெரும்பாலும் லாபம் நோக்கத்துடன் செயல்படும் பல சேவை வழங்குநர்களுக்கு(Service Providers) உள்கட்டமைப்பில் அவர்கள் முதலீடு செய்வதை பொருளாதார ரீதியாக சாத்தியமற்றதாக ஆக்குகிறது. இப்படிப்பட்ட இந்தச் சூழ்நிலை இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கிறது.
இந்தச் சவால்களை எதிர்கொள்ள, அங்குள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் பிராட்பேண்ட் இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட பாரத் நெட் (Bharat Net project) திட்டம் போன்ற முயற்சிகளை இந்திய அரசாங்கம் தொடங்கியுள்ளது. இருப்பினும், இந்த செயல்பாடு மெதுவாகத் தான் உள்ளது. மேலும், பல பகுதிகளில் பல காரணங்களால் இன்னும் செயல்பாட்டுக்கே வரவில்லை.
ஆக, என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா முன்னேற்றம் கண்டுகொண்டிருந்தாலும், தொலைதூரப் பகுதிகளில் இன்னும் இணைய இணைப்பு இல்லாதது நாட்டின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க தடையாக தான் உள்ளது. ஆகையால் ஒரு ஜனநாயக நாட்டில் எப்படி சட்டம் அனைவருக்கும் சமம் என்கிறார்களோ. அதேபோல் சமமான வளர்ச்சியை அனைவரிடத்தில் வளர்ப்பதும் முக்கியமான விஷயமே.
எனவே, பாரத் நெட் (Bharat Net project) திட்டத்தை மிக விரைவாக நிறைவேற்றினால் நாம் அடுத்த கட்ட முன்னேற்றத்துக்கு செல்ல நெட்வொர்க் வசதி மிகவும் பயன்படும்.