‘பாரத ரத்னா’ லதா மங்கேஷ்கர் ஒரு கிரிக்கெட் ரசிகை என்பது தெரியுமா?

பிப்ரவரி 6: லதா மங்கேஷ்கர் நினைவுநாள்!
லதா மங்கேஷ்கர்
லதா மங்கேஷ்கர்

1929ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தவர் லதா மங்கேஷ்கர். பிறந்த ராசிப்படி"எச்" என்ற ஆங்கில எழுத்துப்படி ராசியாக அவருக்கு வைக்கப்பட்ட பெயர் ஹேமா. ஆனால், அவரது தந்தை அவரைச் செல்லமாக அழைத்த பெயர் ‘ஹருதயா’. லதா என்ற பெயர் அவரது தந்தையின் நாடகத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயர். நடிகையாக இருந்து பின்னணி பாடகியானவர் லதா.

தன்னுடைய நான்கு வயதிலேயே பாடத்தொடங்கி, கிட்டத்தட்ட 65 ஆண்டுகளைக் கடந்து, 14 இந்திய மொழிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, இந்தியத் திரையுலகில் மிகச்சிறந்த பின்னணி பாடகியாக விளங்குகியவர். உலக சாதனை படைத்த பின்னணி பாடகி.

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார். இந்திய ரசிகர்களால் இசைக்குயில் என செல்லமாக அழைக்கப்படுகிறார். லதா பின்னணி பாடகர் முகமத் ரபியுடன் இணைந்து 440, கிஷோர் குமாருடன் 327 டூயட் பாடல்கள் பாடியுள்ளார்.

பிரபல இசை அமைப்பாளர்கள் லட்சுமி காந்த்-பியாரிலால் இசையில் 666 பாடல்களும், சங்கர்-ஜெய்கிஷன் இசையில் 453 பாடல்களும் பாடியிருக்கிறார் லதா. லதா மங்கேஷ்கர் எட்டு இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

லதா முதலில் திரைப்படத்திற்காக பாடிய பாட்டு, ‘கிட்டி ஹஸல்’ என்ற மராத்தி படத்தில். ஆனால், அந்தப் பாட்டு திரைக்கு வந்தபோது படத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டது. 1949ஆம் ஆண்டு ‘மகள்’ எனும் இந்தி படத்தில் தனது முதல் திரை இசைப் பாடலை பாடி இசைப் பயணத்தை தொடங்கினார். தன் சொந்தப் பெயரில் லதா இசை அமைத்த ஒரே படம் ‘ராம் ராம் பகுனா’.

சில மராத்தி படங்களுக்கு லதா மங்கேஷ்கர் இசை அமைத்துள்ளார். அதில் ஒன்று மாநில அரசு விருதையும் பெற்றது. அந்தப் படத்தில் இசையமைப்பாளர் பெயர் ’ஆனந்த் கான்’ என்றுதான் இருக்கும். அது லதா மங்கேஷ்கர் புனைப்பெயர்.

முகமது ரபியுடன் இணைந்து ‘எட்டர்னஸ் சன்ஷைன் ஆப் திஸ்பாட்ரஸ் மைண்ட்’  என்ற ஆங்கிலப் படத்தில் இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார். ஜிம் கேரியும், கேத் வின்ஸ்லெட்டும் நடித்தப் படம் இது. பின்னணி இசைப் பாடல்களாக படத்தில் இடம் பிடித்தது.

1963ஆம் ஆண்டு ஜனவரி 27 ம் தேதி இவர் மேடையில் பாடிய ’ஆயி மேரே வாதன்கி வாலோ’ எனத் தொடங்கும் கவிஞர் பிரதீப் எழுதிய தேசபக்தி பாடலைக் கேட்டு மேடையில் இருந்த பிரதமர் நேரு கண்கலங்கி விட்டாராம். பொது இடங்களில் அழும் பழக்கம் இல்லாதவர் நேரு என்பது குறிப்பிடத்தக்கது.

லதா மங்கேஷ்கர் எப்போதுமே வெள்ளை  சேலைதான் கட்டுவார். ஆனால், அதில் தினமும் வெவ்வேறு கலரில் பார்டர் இருக்கும்.

லதா மங்கேஷ்கர்
லதா மங்கேஷ்கர்

4வது முறை அவருக்கு சிறந்த பின்னணி பாடகி விருதை பிலிம் பேர் பத்திரிகை வழங்கியபோது இனிமேல் தன்னை இந்த விருதுக்குப் பரிந்துரைக்க வேண்டாம். இளம் தலைமுறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

லண்டனில் சவுத் கென்சிங்டன் பகுதியில் உள்ள உலகப்புகழ் பெற்ற ராயல் ஆல்பர்ட் ஹாலில் பாட அழைக்கப்பட்ட முதல் இந்தியர் லதா மங்கேஷ்கர்தான். பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘லெஜியான் டி ஹானர்’ விருது 2006ஆம் ஆண்டு மும்பைக்கு நேரடியாக வந்து லதாவுக்கு வழங்கப்பட்டது.

லதா மங்கேஷ்கர் ஒரு கிரிக்கெட் ரசிகை.  1946ல் மும்பை பிரேயார்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியை நேரில் முதன்முதலாக பார்த்தார். லண்டன் நகரில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் லதா மங்கேஷ்கர் பெயரில் ஒரு தனி காலரி இருக்கிறது. எப்போது நினைத்தாலும் அங்கு நடக்கும் எந்த கிரிக்கெட் மேட்சையும் லதா அங்கு சென்று பார்க்க வசதி செய்யப்பட்டிருந்தது.

இதையும் படியுங்கள்:
இன்ஸ்டாகிராமில் High Quality போட்டோ, வீடியோ எப்படி அப்லோடு செய்வது தெரியுமா?
லதா மங்கேஷ்கர்

கிரிக்கெட்  உலகின் ஜாம்பவான் டான் பிராட்மேன் லதா மங்கேஷ்கருக்கு தன் கையெழுத்துப் போட்ட உருவப்படத்தை வழங்கி கெளரவித்துள்ளார். லதா மங்கேஷ்கர் துப்பறியும் நாவல்கள் படிப்பதில் ஆர்வமுள்ளவர் ஷெர்லாக் ஹோம்ஸ் நாவல்கள் அனைத்தும் அவரிடம் இருந்தது.

புகழ் பெற்ற கலைஞர்களின் பெயரில் ‘செண்ட்’ வருவது வழக்கம். அந்த வகையில் ஒரு பாடகிக்கு அந்தப் பெருமை கிடைத்தது. ஆம் லதா மங்கேஷ்கர் பெயரில் ஒரு செண்ட் தயாராகி வெளிவந்தது. அதன் அப்போதைய விலை ரூபாய் 1700.

இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா விருது’, ‘பத்ம பூஷன் விருது’, ’பத்ம விபூஷன்’ விருதுகளைப் பெற்றது மட்டுமல்லாமல், தேசிய விருது, தாதாசாகேப் பால்கே விருது, நான்கு முறைக்கு மேல் ஃபிலிம்பேர் விருதுகள், 6 பல்கலைக்கழகங்களின் டாக்டர் பட்டங்கள் என இப்படி பல விருதுகளை, அங்கீகாரங்களைத் தனதாக்கியவர் லதா மங்கேஷ்கர். 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ம்தேதி தன் 92 வயதில் காலமானார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com